Advertisment

மைக்ரோசாஃப்ட்டின் புதிய ஆப் "கைசாலா" அறிமுகம்! வாட்ஸ்அப்பை விட கூடுதல் வசதிகள்!

கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மைக்ரோசாஃப்ட்டின் புதிய ஆப் "கைசாலா" அறிமுகம்! வாட்ஸ்அப்பை விட கூடுதல் வசதிகள்!

பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெல்லா உள்ளார். இவர் பதவியேற்றபின், லிங்கெட்இன், ஸ்கைப் லைட் வெர்ஷன் போன்ற பல புதிய தயாரிப்புகளை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டது. அந்த வரிசையில், 'இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டது' என்ற டேக் லைனோடு கைசாலா (Kaizala) அப்ளிகேஷனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Advertisment

இந்த கைசாலா ஆப், நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாட்ஸ்ப்அப்பிற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடிவமைப்பிலும், வாட்ஸ்அப் அப்ளிகேஷனைப் போலதான் இது உருவாக்கப்பட்டுள்ளது. புரியும்படி சொல்லவேண்டுமெனில், அலுவலகப் பயன்பாடுகளுக்கான வாட்ஸ்அப்தான் இது!

உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

இதற்கு போட்டியாகத் தான் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்-ஐ மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. பல மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த செயலி தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் இல்லாத வசதிகள் :

வேலைகளைக் கண்காணிக்கவும், திட்டமிடவும் உதவக்கூடிய சாட் அப்ளிகேஷனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கைசாலா ஆப்-ல் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்அப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்அப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்-ல் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா செயலி மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.

கைசாலா செயலி மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்து பேசவும் முடியும். கைசாலா செயலி வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.

"கைசாலா" நடத்திய உ.பி. சட்டசபை கருத்துகணிப்பு:

சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலின் போது கைசாலா செயலியை பயன்படுத்தியே தேர்தல் கமிஷன் கருத்துகணிப்புக்களை நடத்தி உள்ளன. ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த செயலி மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறார்.

இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. தற்போது இது மொபைல் செயலியாக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெப் பிரவுசர் மூலம் இதைப் உபயோகிக்க முடியாது என்பது மட்டும் இதன் சிறிய குறை. 2ஜி நெட்வொர்க்கில் கூட இயங்குவது, வேலைகளைச் சிக்கனப்படுத்துவது, எளிதான வடிவமைப்பு, அலுவலக வேலையைத் திட்டமிடுவது போன்ற பல பயனுள்ள சிறப்பம்சங்கள் இதில் இருப்பதனால், எளிதில் இந்த ஆப் மக்களை கவரக் கூடியதாக உள்ளது.

பல வர்த்தக நிறுவனங்கள், மீடியாக்களும் கைசாலா செயலியை பயன்படுத்த துவங்கி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட அரசு துறைகள், அரசு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'புரோ கைசாலா' என்ற மற்றோரு செயலியை மாதத்திற்கு ரூ.130 என்ற கட்டணத்தில் தொழில்துறை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Microsoft
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment