முடி, பற்கள், தோல் துவாரங்கள் எதுவும் இல்லை: நம்பிக்கை மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்த அழகி

தன் உடல் குறைகளால் எந்த இடத்திலும் சோர்ந்துபோகாமல், இன்று மாடலிங் துறையில் மெலானி தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். பெண்களின் நம்பிக்கை...

முடி வளராது, நகம் வளராது, பற்கள் உடைந்துபோகும், உதட்டில் பிளவு என எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படும் எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா எனும் நோயால். இந்த நோய் இருந்தால் உடலிலிருந்து வியர்வை வெளியேறாது. அதனால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். நீண்ட நேரம் தண்ணீரிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இந்த நோயுடன் சாதாரணமான மனிதர்களை போல் வாழ்வதே மிகப்பெரும் சிரமம். மற்றவர்களின் வினோதப் பார்வையிலிருந்தும், அவர்கள் நம்மை அருவருப்புடன் உற்றுநோக்குவதிலிருந்தும் தப்பிக்க இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிகளைத் தேடிக் கொண்டிருப்பர். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த மெலானி கெய்டஸ் (28), என்பவர் இந்நோயால் பாதிக்கப்பட்டாலும், தன் நம்பிக்கையின் மூலம் இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மெலானி கெய்டஸ் பிறக்கும்போதே எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அவருக்கு முடி வளராது, உதட்டில் பிளவு இருக்கும், நகங்கள் வளராது. தோலில் துளைகள் இருக்காது. அதனால், வியர்வை வெளியேறாததால் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். பற்கள் கொட்டிவிடும்.

சிறுமியாக இருந்தபோதே தன்னுடைய இந்த உடல் பிரச்சனைகளுக்காக 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார் மெலானி கெய்டஸ் அவரால் தனக்கு தேவையான தண்ணீரைக் கூட அருந்த முடியாது.

தன்னுடைய இந்த விநோத நோயால் மாடலிங் துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட மெலானி மறந்திருந்தார். நியூயார்க்கில் உள்ள பிராட் இன்ஸ்டிட்யூட்டில் கலை சம்பந்தமான படிப்பை மேற்கொண்டார். அப்போது, ஒரு புகைப்படத்திற்காக மாடலாக காட்சியளிக்கும் வாய்ப்பு மெலானியாவிற்குக் கிடைத்தது.

அந்த புகைப்படத்தை, தான் பெரிதும் விரும்பக்கூடிய புகைப்படக் கலைஞருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த புகைப்பட கலைஞருக்கு மெலானியாவின் புகைப்படம் பிடித்துப்போகவே, அவரை தன் விருப்பப்படி புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என அவர் நினைத்தார். அவர் எடுத்த புகைப்படங்கள் மூலம் மெலானி மாடலின் துறைக்குள் நுழைந்தார்.

தன் உடல் குறைகளால் எந்த இடத்திலும் சோர்ந்துபோகாமல், இன்று மாடலிங் துறையில் மெலானி தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். சர்வதேச ஃபேஷன் இதழ்கள் பெரும்பாலனவற்றின் அட்டைப் படங்களில் மெலானி அனைத்துப் பெண்களுக்குமான நம்பிக்கை கீற்றாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஒருமுறை மெலானி சொன்னார், “நான் இந்த நோயுடன் ஒத்துப்போக கற்றுக்கொண்டேன். இந்த நோயால் எனக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால், என்னை பார்ப்பவர்கள் எனக்குள் இருக்கும் இந்த நோயை பிரச்சனையாக பார்க்கிறார்கள். எனக்கு பற்கள் இல்லை. அதனால், செயற்கையாக பற்களைப் பொருத்திக் கொண்டேன். ஆனால், இந்த பற்கள் இல்லாமலும் என்னால் உணவு உண்ண முடியும். பிறகுதான் புரிந்தது. பற்கள் எனக்குத் தேவை இல்லை. இந்த செயற்கையான பற்கள் என்னை சுற்றி இருப்பவர்களை மட்டுமே சௌகரியமாக உணர வைக்கிறது. அதனால் கழற்றிவிட்டேன்.”, என்றார்.

ஆம், நாமும் மற்றவர்களுக்காக என பலவற்றை தேவையில்லாமல் அணிந்துகொண்டிருக்கிறோம். நமக்கு அது தேவையே இல்லையென்றாலும் கூட. எல்லாவற்றையும் கழற்றிவிட்டு மெலானியைப் போல் வாழக் கற்றுக்கொள்ளலாம்.

×Close
×Close