Advertisment

மோட்டார் சைக்கிள் டைரி - 2 : வேறு ஒரு இந்தியா

author-image
WebDesk
Jul 25, 2017 13:25 IST
New Update
மோட்டார் சைக்கிள் டைரி - 2 : வேறு ஒரு இந்தியா

சங்கர்

Advertisment

பணத்தை கூட நண்பர்கள் தருவார்கள். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுக்கு என்ன செய்வது ? மேலும் பத்து நாட்கள் தங்க வேண்டும். வழிச்செலவுக்கு வைத்திருந்த மொத்த பணமும் காணாமல் போய் விட்டது. நான் பயணத்தை ரத்து செய்கிறேன் என்று கூறியதை நண்பர்கள் ஏற்கவில்லை. மணியோ இரவு 8.45. டெல்லி ட்ராவல் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை தொலைந்து விட்டது என்பதை கூறியபோது, காவல்துறையில் புகாரை பதிவு செய்து அதற்கான ஒப்புகையை பெற்றால் போதுமானது என்று கூறினர். காவல்துறையில் மற்றொரு நண்பர் மூலமாக இரவே சென்று புகார் அளித்து, ஒப்புகை பெற்றோம். அந்த காவல்துறையின் ஒப்புகையில் லைசென்ஸ் நம்பர் மட்டுமே இருந்தது. விமான நிலையத்தில் நுழைய புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டை வேண்டும்.

இணையம் மூலமாக ஆதார் அட்டையை எடுத்து வைத்தாலும், மொபைல் போனில் காட்டப்படும் ஆதார் அட்டையை விமான நிலைய்ததில் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்று சந்தேகமாக இருந்தது. அந்த நேரத்தில் பெங்களுரில் எந்த ஒரு ப்ரவுசிங் சென்டரும் திறந்திருக்கவில்லை. நண்பர் உடனடியாக ஒரு யோசனை சொன்னார். திறந்திருந்த ஒரு எலெக்ட்ரானிக் கடையில் விலை மலிவாக ஒரு கலர் இன்க்ஜெட் ப்ரிண்டரை வாங்கி, ஆதார் அடையாள அட்டையை ப்ரிண்ட் அவுட் எடுத்து பயணத்துக்கு தயாரானோம்.

மறுநாள் காலையில் விமான நிலையத்தில் அந்த ஆதார் அட்டையை பார்த்து அனுமதித்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. பெங்களுரிலிருந்து மூவர் மதியம் 1.30 மணிக்கெல்லாம் டெல்லி சென்று விட்டோம். சென்னையிலிருந்து வர வேண்டியவர்கள் விடுமுறை கிடைக்க தாமதமானதன் காரணமாக, இரவு 11.30 மணிக்கே வந்தார்கள். உரிய நேரத்தில் டெல்லிக்கு அனைவரும் சென்று சேர்ந்திருந்தால், அந்த ட்ராவல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வோல்வோ வாகனத்தில் மணாலி வரை சென்று இறங்கியிருக்க முடியும். பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களோடு வோல்வோ வாகனம் இரவு 9.00 மணிக்கு கிளம்பி விட்டது. நாங்கள் தாமதமாக வந்த காரணத்தால் எங்கள் எட்டு பேருக்கு மட்டும் தனியாக ஒரு டெம்போ ட்ராவலர் வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். 11.15 க்கு வர வேண்டிய சென்னை டெல்லி விமானம், தாமதமாக 11.45க்கு வந்து இறங்கியது.

publive-image

டெல்லி விமான நிலையத்தில் நண்பர்களுக்காக காத்திருந்தபோது, என் மொபைலில் நண்பர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து நான் அவர் அருகில் வந்தபோது, எனக்கு தொடர்ந்து இரண்டு அழைப்புகள் வந்திருந்ததாக தெரிவித்தார். வாங்கிப் பார்த்தபோது, தெரியாத ஒரு எண். தெரியாத எண்களுக்கு நான் வழக்கமாக அழைப்பதே இல்லை. அன்று என்ன தோன்றியதோ, அந்த எண்ணை அழைத்தேன். எதிர்முனையில் இருந்தவர், என் பெயரை அழைத்து அது நீங்கள்தானா என்று கேட்டார். ’’ஆம்’’ என்றதும், எனது பர்ஸ் அவரது ஹோட்டலில் இருந்ததாக தெரிவித்தார். என்னுடைய இன்ப அதிர்ச்சியை சொல்ல போதுமான வார்த்தைகள் இப்போது வரை கிடைக்கவில்லை. ஆனாலும், அந்த ஆவணங்கள் பெங்களுரில் இருக்கின்றன. நான் டெல்லியில் இருக்கிறேன். என்ன செய்ய முடியும் ? இருப்பினும், எனது பணம் 17 ஆயிரம் கிடைத்தது ஒரு பெரும் மகிழ்ச்சி.

டெம்போ ட்ராவலர் வாகனம் தயாராக இருந்தது. யாருமே இரவு உணவு அருந்தவில்லை. தாமதாமாகி விட்டது என்பதால் அவசர அவசரமாக வாகனத்தில் ஏறினோம். தண்ணீர் பாட்டில்களைக் கூட வாங்கவில்லை.

12.10க்கு டெம்போ ட்ராவலர் மணாலி கிளம்பியது. டெம்போ ட்ராவலரில் தமிழகத்தைச் சேர்ந்த நாங்கள் மட்டுமே இருந்தோம் என்பதால் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் பசி. ஓட்டுனரிடம் உணவு வேண்டும் என்ற விபரத்தை சொன்னோம். அவர் பேசாமல் தலையாட்டினாரே ஒழிய உணவு கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்து எதுவும் பதில் பேசவில்லை. இரவு 1.30 மணி ஆகி விட்டது. இனிமேல் உணவு கிடைக்காது என்பது புரிந்தது. விடியற்காலை 2.10 மணிக்கு ஹரியாணாவில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார். அது ஒரு பஞ்சாபி தாபா. விடியற்காலை 2 மணிக்கு கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். பணம் கட்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. அனைத்து வகையான உணவுகளும் சூடாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன. தண்ணீர் பாட்டில்களையும், கொறிக்க உணவுகளையும் வாங்கிக் கொண்டோம். அதன் பிறகு, ஹரியாணாவை கடந்து பஞ்சாப் மற்றும் சண்டிகர் வழியாக வாகனம் சென்றது. அனைவரும் நன்றாக உறங்கி விட்டோம். விடியற்காலையில் ஒரு காவல்துறை செக்போஸ்டில்தான் விழிப்பு வந்தது. நாங்கள் அனைவரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த போது, அந்த ஓட்டுநர் சற்றும் சளைக்காமல் வாகனத்தை ஓட்டி வந்தார்.

இமயமலையில் இருந்து உருவாகும் ஒரு நதி பீயஸ். இது இமயமலையில் உருவாகி, பஞ்சாபின் சட்லஜ் நதியில் சென்று கலக்கிறது. இந்த பீயஸ் நதிக்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. உலகத்தை வெல்லப் போகிறேன் என்று கிளம்பிய மாவீரன் அலெக்சாண்டர், 326 பி.சி.யில் பீயஸ் நதியில் வந்து நிற்கிறார். அந்த நதியை கடக்க மிகுந்த சிரமம் என்பது புரிகிறது. திடீரென்று அலெக்சாண்டரின் படை வீரர்கள் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் எட்டு வருடமாக எங்கள் குடும்பத்தினரை பிரிந்து இருக்கிறோம். நாங்கள் வீடு திரும்ப வேண்டும் என்று கடுமையன எதிர்ப்புக் குரலலை எழுப்புகிறார்கள். மூன்று நாட்களாக, தனது டென்ட்டில் இருந்து வெளியேறாத அலெக்சாண்டர், அவர்களின் குரலுக்கு செவி சாய்க்கிறார்.

அந்த நதியில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. இந்த நதி உங்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருக்கும். பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்பதால், கவலையில்லாமல் இந்த நதியை பார்க்கலாம். எந்த ஆபத்தும் இல்லை.

காலையில் வந்து சேர்ந்திருக்க வேண்டிய மணாலிக்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு 12 மணி முதல் மேற்கொண்டிருந்த பயணம், அனைவரையுமே களைப்பாக்கியிருந்தது. காலையில் வந்து சேர்ந்திருந்தவர்கள் அனைவரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் 35 கிலோ மீட்டர் சோதனை பயணம் மேற்கொண்டிருந்தார்கள். இந்த சோதனைப் பயணம் என்பது மிக மிக அவசியம். நீங்கள் பல்வேறு பைக்கை ஓட்டியிருப்பீர்கள். ஒரு மலைப்பகுதிக்கு ஒரு புதிய பைக்கை ஓட்டுகையில் அந்த வாகனத்தைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொள்வது முக்கியம். ஏனென்றால் ஒவ்வொரு பைக்கிலும், ப்ரேக், க்ளட்ச் போன்றவை சிறிய மாறுபாடுகளை கொண்டிருக்கும். அதனால் அந்த பைக்கோடு உங்கள் பரிச்சயம் நன்றாக இருக்க வேண்டும். மிக மிக தாமதமாக மாலையில் வந்து சேர்ந்ததால் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. எங்களோடு வந்ததில் ஒரே ஒரு மென் பொறியாளர் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த பதவியில் இருப்பவர். அவருக்கு பைக் ஓட்டி பழக்கமே கிடையாது. அவர் மட்டுமாவது பைக்கை ஓட்ட வேண்டும் என்று நாங்கள் அனைவருமே முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கான பைக்குகளை அன்று மாலை வழங்கவில்லை.

கடுமையான குளிர் இருக்கும் பிரதேசங்களில் நாம் அணியும் உள்ளாடை போல, குளிரிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தெர்மல் வேர் என்ற ஒரு ஆடையை அணிகிறார்கள். ஒது முழுநீள பேன்ட் மற்றும் முழுக்கை சட்டையை உடலோடு ஒட்டும்படி அணிந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். நான் சென்னையிலேயே தெர்மல் வேர் வாங்கலாம் என்று பாரிமுனையில் சென்று விசாரித்தேன். முழு செட் 2500 ரூபாய் என்று சொன்னார்கள். வேறு இடத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்காமல் என்று வாங்காமல் வந்து விட்டேன்.

மணாலியில் வாங்கலாம் என்று கிளம்பினோம். செல்லும் வழியில் அந்த பியஸ் நதியில் ஒரு விளையாட்டை நடத்திக் கொண்ருந்தார்கள். நதியின் இரு கரையின் குறுக்கே ஒரு நீண்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். அந்த கயிறின் மீது ஒரு சர்க்கரமும், மற்றொரு கயிரும் இருக்கும். நாம் அந்த விளையாட்டில் இறங்கினால், கயிறின் மீது இருக்கும் மற்றொரு சக்கரம் மற்றும் கயிறோடு நம்மை இணைப்பார்கள். இணைத்து, ஆற்றின் குறுக்கே உள்ள கயிரோடு பயணிக்க வைப்பார்கள். அந்த கயிறில் நாம் அடுத்த கரை செல்லும் வரை நம்மை கட்டுப்படுத்துவார்கள். அடுத்த கரையை எட்டிய பிறகு மீண்டும் இந்த பக்கத்துக்கு இழுப்பார்கள். திரும்ப வரும் வழியில், அந்த கயிறை மிக பலமாக ஆட்டுவார்கள். நதியில் கால் பதிக்கும் வரை இறக்குவார்கள். உயிரே போவது போல பயம் ஏற்படும். தண்ணீரோ, உறை நிலையில் இருக்கும். ஆனால் அந்த பகுதியில் வசிக்கக் கூடிய உள்ளுர் ஜோடிகள், குறிப்பாக இளம் பிள்ளைகள், மிக மிக உற்சாகமாக அந்த விளையாட்டில் பங்கேற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு போட்டியாக அந்த விளையாட்டில் பங்கேற்றது உற்சாகத்தை அளித்தது. உற்சாகமாக அனுபவங்களுக்கு வயது ஒரு தடையா என்ன ?

அதன் பிறகு ஷாப்பிங் சென்றோம். நாடெங்கும் ரூபாய் நோட்டுக்கள் தடையால் பொருளாதார பரிவர்த்தனைகளே தலைகீழாக மாறி, டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு நாடே மாறியிருந்து என்று நான் நம்பினேனோ இல்லையோ. என்னோடு பயணத்தில் வந்திருந்த தீவிர மோடி ஆதரவாளர்கள் அனைவரும் நம்பியிருந்தார்கள்.

ஆனால் வேறு ஒரு இந்தியா இருக்கிறது என்பதை அந்த புத்திசாலி மென்பொறியாளர்கள் அன்றுதான் புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்...

படம் : ஏ.சுஜாதா

 

(கட்டுரையாளர் சங்கர், பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடிக்கடி பயணம் மேற்கொள்பவர். அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டவர். அரசியலில் நடக்கும் முறைகேடுகளை தனது பிளாக் மூலம் வெளி கொண்டு வந்தவர், வருபவர்.)

#Sankar #Travel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment