மத்திய பிரதேச மாநிலத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய திருமண நிதியுதவி கிடைக்காததால், தலித் சமூகத்தை சேர்ந்த ஜோடி ஒன்று அம்பேத்கர் சிலை முன்பு எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்தால் நிறைய பணம் செலவாகும் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹூர் பகுதியை சேர்ந்த கல்லு ஜாதவ் மற்றும் வைஜெயந்தி ராஜோரியா தான் அந்த ஜோடி. ஆரம்பத்தில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களுக்கு அம்மாநிலத்தில் வழங்கப்படும் முதலமைச்சர் திருமண உதவித்தொகை பெறவே ஆரம்பத்தில் இருவரும் முயற்சித்தனர். ஆனால், மிகவும் முயற்சித்தும் அந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் இருவரும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தலித் ஆர்வலர்கள் ஆகியோரின் துணையுடன் எளிமையான முறையில் திருமணம் செய்ய முயற்சித்தனர்.
இந்த தகவலை அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர் நரேந்திர கார்காலே என்பவர், இந்த ஜோடிக்கு உதவி செய்ய முன்வந்தனர். இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் செய்யவும், அதன் மூலம் அவர்களுடைய குடும்பம் தேவையில்லாத செலவுகளை குறைக்கவும் அவர் வழிவகுத்தார்.
அதன்படி, கல்லு ஜாதவ் மற்றும் வைஜெயந்தி ராஜோரியா, தங்கள் நகரில் உள்ள பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். கடந்த 3-ஆம் தேதி இருவரும் அந்த அம்பேத்கர் சிலை முன்பு திருமணம் செய்துகொண்டனர். அப்போது, அம்பேத்கரின் சிலை முன் புத்தரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. இருவரும் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அம்பேத்கர் சிலையை ஜோடிகள் இருவரும் 7 முறை வலம் வந்தனர்.
கலாச்சார ரீதியில் செய்து வைக்கப்படும் திருமணங்கள் எவ்வளவு செலவு மிக்கதாக உள்ளன என்பதை அனைவரும் அறிய வைக்கவே இத்தகைய எளிய திருமணத்தை இருவரும் செய்தனர்.