இனி நாய், பூனைகளுடன் பேசலாம்: வரப்போகிறது மொழிபெயர்ப்பு கருவி

நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளின் மொழிகளை புரிந்துகொண்டு அதனை மனித மொழியில் மாற்றியமைக்க செயற்கை அறிவுகொண்ட கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் நாய், பூனைகளுடன் மொழிபெயர்ப்பு கருவியுடன் பேச முடியும் என அமெரிக்க பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாய்கள், பூனைகள் ஆகியவை தனக்கு தேவையானவற்றை அவற்றினுடைய சத்தத்தின் மூலம் மனிதர்களுக்குப் புரிய வைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அதனுடைய தேவைகளை நாம் தவறாகவே புரிந்துகொண்டுள்ளோம்.

இந்தக் கவலையைப் போக்க நாய்கள், பூனைகளுடன் பேச மொழிபெயர்ப்பு கருவிகளை அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் வடிவமைத்து வருகின்றனர். அவற்றின் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் நாய்கள், பூனைகளின் மொழியை மனிதர்கள் புரிந்துகொண்டு அவற்றுடன் பேச முடியும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த கருவிகளை வடிவமைக்க நிதி திரட்டும் வேலைகளிலும் பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் ஈடுபட்டு வருகிறார்.

நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளின் மொழிகளை புரிந்துகொண்டு அதனை மனித மொழியில் மாற்றியமைக்க செயற்கை அறிவுகொண்ட கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். மிசிசிப்பி பள்ளத்தாக்கில் உள்ள நாய்களில் இக்கருவிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை முறையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முக்கிய முடிவுகளை தந்ததுடன் ஆராய்ச்சிக்கு புதிய பரிணாமத்தை அளித்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் தெரிவித்துள்ளார். அதன் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் நாய்களுடன் மொழிபெயர்ப்பு கருவிகளின் உதவியுடன் பேச முடியும் எனவும் அவர் தனது ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பூனைகளுடனும் இந்த கருவியின் உதவியுடன் பேச முடியும் என பேராசிரியர் கூறியுள்ளார்.

“மனிதர்கள் பலருக்கு செல்லப் பிராணிகள் தங்கள் குழந்தைகளாகவே மாறியுள்ளன. அவற்றுக்காக நாம் அதிகளவில் செலவிடுகிறோம். இந்த கருவிக்கும் நிச்சயம் மவுசு அதிகம் இருக்கும்.”, என பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

×Close
×Close