Poori recipes in tamil: பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். ஆனால், இவை எண்ணெய் உணவு என்பதால், ஒரு சிலர் தவிர்த்து வருகின்றனர். மேலும், எண்ணெய் அதிக அளவில் இருக்கும் பூரியை உண்பதால் உடல் எடை, சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து போன்ற பல உபாதைகள் வரும் என்கிற பயத்தில் பலரும் முற்றிலும் தவிர்க்கவே முயல்கின்றனர்.
எண்ணெய் இல்லாமல் பூரி செய்வது பற்றி பெரும்பாலும் நாம் அறிந்திருக்க மாட்டோம். என்னது எண்ணெய் இல்லாத பூரியா? என்ற கேள்வி இங்கு உங்களுக்கு கண்டிப்பாக எழும். ஆம், நாம் தயார் செய்யவுள்ள பூரிக்கு ஒரு சொட்டுகூட எண்ணெய் கூட தேவையில்லை. செய்முறைக்கு அதிக நேரமும் பிடிக்காது.
சரி., எண்ணெய் இல்லாத பூரி தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் இல்லாத பூரி எளிய செய்முறை
முதலில் பூரிக்கு எப்போதும் மாவு பிசைவது போல் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு, அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் மாவை உருண்டை பிடித்து வட்டமாக பூரி தேய்த்துக்கொள்ளவும்
இப்போது பூரி சுட வைத்துள்ள பாத்திரம் அல்லது கடாயில் பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.
தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், பூரி மாவை அதில் போட்டுக்கொள்ளவும்.
அவை ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும். பின்னர் அடுத்த பக்கம் அவற்றை திருப்பிப் போட்டுக்கொள்ளவும்.
இந்த முறையில் பூரியை ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும், அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்றவும். பூரி புஸ் என்று பொங்கி வரும்.
அவ்வளவுதான், நீங்கள் எதிர்பார்த்த எண்ணெய் இல்லா பூரி இப்போது தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து ருசிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“