Advertisment

தோட்டம் இருந்தா பூச்சி கண்டிப்பா வரும்.. அதுக்கு சிம்பிள் தீர்வு.. புஷ்பவனம் குப்புசாமி டிப்ஸ்

மாடியிலத் தோட்டம் வைக்கும்போது தொட்டியை நேரா தரையில வைக்க கூடாது. செங்கல பாதியா உடைச்சா அரைக்கல்லு சொல்லுவாங்க. 3 அரைக்கல்லு வச்சு அதுக்கு மேலே தொட்டி வச்சா, தண்ணி அப்படியே வடிஞ்சி அப்படியே ஓடிடும்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pushpavanam kuppusamy

Pushpavanam kuppusamy gardening tips

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதா குப்புசாமி. இந்த தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.

Advertisment

ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத்  தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது. 1,200 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர்.

அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படி அவர்கள் யூடியூபில் பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், மாடி தோட்டத்து செடிகள் நன்கு வளர்வதற்கான பல குறிப்புகளை குப்புசாமி பகிர்ந்து கொண்டார்.

publive-image

அந்த வீடியோவில் அவர் பேசுகையில்; இன்னைக்கு எங்க மொட்டை மாடியில கத்தரிக்காய் அறுவடை செய்ய போறேன்.. நல்லா காய்ச்சி இருக்குது. எப்படியும் ஒரு 2 கிலோ தேறும். அண்ணாமலை கத்தரி, பச்சை குண்டு கத்தரி, பச்சையில நீளமா வளர்ற கத்தரி, மரி கத்தரினு இங்க எல்லாவிதமான கத்தரிக்காயும் இருக்குது.

செடியில இருந்து அடிக்கடி காய்களை பறிச்சாதான் அது நிறைய காய்க்கும். அப்படியே செடியில விட்டா, காய்க்கிறது குறைஞ்சிரும்.

நாங்க தினமும் சாம்பாருக்கு இங்க இருந்து எடுத்துப்போம். அப்படியும் கூட நிறைய காய் இருக்குது. அதிகமா இருந்தா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு, தெரிஞ்சவங்களுக்கு கொடுப்போம். நம்ம ஆசையா நேசிச்சி சாகுபடி பண்ணா, எந்த பயிறும் பொய்ப்பிக்காது. இதுதான் உண்மை.

இன்னைக்கு 10 செடியில 6 கிலோ கத்தரில, 3 கிலோ மேலேயே எடுத்துட்டேன்.

மாடியில தோட்டம் அமைக்கணும், காய்கறி தொட்டி வைக்கணும் ஆசைப்படுறாங்க, ஆனா மாடியில தண்ணி நின்னா தளம் வீணாப்போயிடும் நினைக்கிறாங்க. ஐப்பசில இருந்து டிசம்பர் வரை மழை பெய்யுது. ஆனா, அந்த தண்ணியெல்லாம் ஒரே இடத்துல நிக்காது. ஓடிடும்.

மொட்டை மாடியில தண்ணி நின்னாதானே பிரச்னை. வீடு கட்டும்போதே சாய்வா வச்சு, தண்ணி கீழே போற மாதிரி வைப்பாங்க. அந்த தண்ணிய சேகரிச்சு வைக்கணும்.. அதுதான் மழை நீர் சேகரிப்பு. நம்ம எல்லாருமே அதை செய்யணும். நானும் அந்த மாதிரி வச்சுருக்கேன். ஆனா  தொட்டியில இருந்த வர்ற உரத்தண்ணிய கிணத்துல விட முடியாது. அதை நான் கீழே இருக்க வெத்தலை,மா, சப்போட்டா மரங்களுக்கு விட்ருவேன். இதனால தண்ணி வீணாகாது.

மாடியிலத் தோட்டம் வைக்கும்போது தொட்டியை நேரா தரையில வைக்க கூடாது. செங்கல பாதியா உடைச்சா அரைக்கல்லு சொல்லுவாங்க. 3 அரைக்கல்லு வச்சு அதுக்கு மேலே தொட்டி வச்சா, தண்ணி வடிஞ்சி அப்படியே ஓடிடும். தரையில நிக்காது. காத்துலேயே காய்சிடும். தளத்துக்கு எந்த பிரச்சனையும் வராது.

தொட்டிலயும் தண்ணி நிக்கக் கூடாது, தண்ணி நின்னா எந்த செடியும் வளராது. அது முச்சு விடுறதுக்கு வழியில்ல. தொட்டி ஓரத்துல இல்ல அடியில ஓட்டை போட்டு, அதுல மண் ஓடு வச்சு அதுமேல ஆத்து மணல் கொட்டி இன்னும் சொல்லப்போனா, தென்ன கேக் உடைச்சி போட்டு அதுக்கும் மேல மண், செம்மண், மாட்டுச்சாணம் கலந்து உரத்தை போட்டு கையால அமுக்கமா அப்படியே தண்ணி விட்டு விதைய போடலாம் இல்ல செடிகள நட்டு வைக்கலாம். இப்படி பண்ணா தண்ணி நிக்காது. செடி நல்ல வளரும்.

பூச்சி தாக்குதல்

தோட்டம் இருந்தா பூச்சி கண்டிப்பா வரும். அதுக்கு சிம்பிள் தீர்வு வேப்ப எண்ணெய் தான். ஆனா, இது ரொம்ப கலக்க கூடாது. அப்படி செய்ஞ்சா இலையெல்லாம் கருகி போயிடும். ஒரு 5 லிட்டர் தண்ணில, 10 மிலி கலந்து ஸ்பிரே பண்ணிட்டா பூச்சி வராது. கசப்பு பூச்சிக்கு பிடிக்காது. அதேபோல செம்பருத்தில வெள்ளைப்பூச்சி வரும். அதுக்கு சாதம் வடிச்ச கஞ்சியில  நல்ல தண்ணி ஊத்தி வடிகட்டி, அதுல கொஞ்சம் வேப்ப எண்ணெய் கலந்து ஸ்பிரே பண்ணா, கஞ்சியானது செடியில ஒட்டிக்கும். பூச்சி செத்துரும்.

இன்னும் மழைக்காலத்துல சரியான சூரிய ஒளி கிடைக்காம செடியெல்லாம் சுருங்கி போயிடும். அதுக்கு வேப்பம் பிண்ணாக்கு கடையில கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து தண்ணில ஊறப்போடுங்க. ஒரு ஐந்து கிலோ வேப்பம் பிண்ணாக்குக்கு 20 – 25 லிட்டர் தண்ணி ஊத்துங்க. அது நல்ல ஊறிடும். ஒரு தொட்டிக்கு ஒரு டம்ளர் மேல ஊத்தக்கூடாது. இதை செய்ஞ்சா இந்த குளிருக்கு, செடிக்கு கம்பளி போத்துன மாதிரி இருக்கும். வேப்பம் பிண்ணாக்கோட தண்ணி வேருக்கு சூடு கொடுக்கும்.

எப்போவுமே செடிகளுக்கு உரம் போட்டுட்டே இருக்கணும். நான் மண்புழு உரம் போடுறேன். கெமிக்கல் உரமெல்லாம் போடாதீங்க. அது பெரிய பிரச்னை ஆயிடும். ஆர்கானிக் உரம் தான் போடணும். சில பேரு டிஏபி உரம் போடுவாங்க. அதையும் அப்படியே போடக்கூடாது. ஆர்கானிக் உரத்துல அரை ஸ்பூன் கலந்து போடுங்க. ரொம்ப போட்டோ செடி செத்து போயிடும்.

publive-image

இந்த குளிர்காலத்துல மல்லிப்பூ பூக்குறது அபூர்வம். ஆனா இங்க இப்போக்கூட மல்லிப்பூ அவ்ளோ மொட்டு விட்டுருக்கு. எல்லாம் நம்ம பராமரிக்குற விதம் தான். மல்லிப்பூச் செடிக்கு அதிகமா தண்ணி விடக்கூடாது. இயற்கை உரம் போடணும். குறிப்பா மண்புழு உரம் போடுங்க.. பூ பூத்ததுக்கு அப்புறம் கிள்ளி விடணும். அப்போதான் அதுல இருந்து மறுபடி துளிர்த்து மொட்டுவிடும். நிறைய இலை இருந்தா பூக்காது. அப்பப்போ கொஞ்சம் இலைகளை பிச்சு விட்டா மொட்டோட வரும். மல்லிச்செடிக்கு வைத்தியம் இதுதான்.

மாடித் தோட்டத்துல என்ன பெருசா என்ன சாதிச்சுற போறீங்கனு நினைக்கலாம். நீங்க கடையில கூட காய்கறி வாங்கலாம். ஆனா, இதுல நம்முடைய உடம்புக்கு ஒரு உடற்பயிற்சி கிடைக்குது, மனசுக்கு சந்தோஷம் கிடைக்குது. ஆர்கானிக் காய்கறி கிடைக்குது. எல்லாத்துக்கு மேல நம்ம வீட்டு மாடியில விளைஞ்ச காய்கறி அப்படிங்கிற சந்தோஷம் இருக்குதே, அது சுவையே அதிகப்படுத்தும். இப்படி குப்புசாமி பல தோட்ட பராமரிப்பு குறிப்புகளை அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment