Advertisment

ரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்!

ரமண மகரிஷியின் ஆன்மீக பக்கங்களை ‘தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்’ வாசகர்களுக்காக எழுத்தாளர் அ.பெ.மணி புரட்டிக் காட்டுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரமண மகரிஷி, ரமண மகரிஷி கடிதம், ரமண மகரிஷி திருவண்ணாமலை பயணம், Ramana Maharshi, Ramana Maharshi and Madurai, Ramana Maharshi And Tiruvannamalai

ரமண மகரிஷி, ரமண மகரிஷி கடிதம், ரமண மகரிஷி திருவண்ணாமலை பயணம், Ramana Maharshi, Ramana Maharshi and Madurai, Ramana Maharshi And Tiruvannamalai

ரமண மகரிஷியின் ஆன்மீக பக்கங்களை ‘தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்’ வாசகர்களுக்காக எழுத்தாளர் அ.பெ.மணி புரட்டிக் காட்டுகிறார். அவரது உணர்வுகள் இங்கே தொடர்கிறது.

Advertisment

அ.பெ.மணி

ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்ட ரமண மகரிஷி பெரும்பாலான நேரத்தை தனிமையிலேயே கழித்தார். படிப்பில் பெரிதாக கவனம் செலுத்த இயலாத நிலைமை ஏற்பட்டது. மதுரையில் உறவினர்கள் நண்பர்கள் என கூட்டமாக இருந்த போதும் தனக்குள் ஏதோ ஒரு இனம் காண முடியாத தனிமையை உணர்ந்தபடியே அவர் நாட்களை கடத்தினார்.

திருவண்ணாமலைக்கு போவதே இப்போதைக்கு தான் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவு என்ற சிந்தனைக்கு ரமணர் வந்தார். ரமண மகரிஷி மதுரையிலிருந்து கிளம்பி அருணாச்சலம் என்று அழைக்கப்பட்ட திருவண்ணாமலையை வந்து அடைந்தது ஒரு மிகப்பெரிய புனிதப் பயணம்.

18 வயது கூட நிரம்பாத அந்த சிறுவன் தன் தகப்பனை தேடி தான் புறப்படுவதாக குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு கிளம்பினான் என்றால் அந்த ஆன்மீக அழைப்பின் ஆழத்தை நம்மால் இன்று விளங்கிக் கொள்ள முடியும்.

அன்றைய தினம் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வெளியே கிளம்பிய ரமண மகரிஷி தனக்கு பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு ஒன்று இருப்பதாக வீட்டில் சொல்கிறார், அப்படியானால் தனது கல்விக் கட்டணத்தை பள்ளியில் செலுத்தி விடும் படி அவரது சகோதரர் அவரை கேட்டுக் கொள்கிறார்.

கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஐந்து ரூபாயை ரமண மகரிஷியிடம் கொடுக்கிறார். ஐந்து ரூபாயில் மூன்று ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி இரண்டு ரூபாயோடு கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு ரமண மகரிஷி வீட்டை விட்டு கிளம்புகிறார், உலகின் புகழ்பெற்ற கடிதங்களில் அந்தக் கடிதமும் ஒன்று.

நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இடத்தை விட்டு கிளம்பி விட்டேன் என்று ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். இப்படி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஏறக்குறைய நட்ட நடுப்பகல் தனது வீட்டை விட்டு கிளம்பி, தனது வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் இருக்கிற ரயில்வே நிலையத்தை நோக்கி வெங்கடராமன் பயணித்தான்.

மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு மூன்றாம் வகுப்பு ரயில் கட்டணத்தை செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு தனது கைகளில் மீதமிருந்த 19 பைசா உடன் வெங்கடராமன் ரயில் பெட்டியில் அமர்ந்தான்.

ரயிலில் ரமண மகரிஷியின் பெட்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் தம்பி எங்கே போகின்றீர்கள்? எனக் கேட்டார். தான் திருவண்ணாமலைக்கு போக இருப்பதாகவும் அதனால் திண்டிவனம் வரை டிக்கெட் எடுத்திருப்பதாகவும் ரமண மகரிஷி பதிலளித்தார்.

நீங்கள் விழுப்புரத்தில் இறங்கிக் கொள்ளலாம் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு எளிதாக சென்று விடலாம் என்று அவர் வழிகாட்டினார். விழுப்புரம் நிலையத்தில் இறங்கிய வெங்கடராமன் அந்த இரவை ரயில் நிலையத்திலேயே கழித்தான்.

அதிகாலை எழுந்து எப்படி திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும்? என்று யோசிக்கத் தொடங்கினான். கடுமையாக பசி எடுத்தது. உணவகம் ஒன்றை தேடிச்சென்று சாப்பாடு இருக்கிறதா? எனக் கேட்டான் அந்தச் சிறுவன். சற்று நேரம் காத்திருக்கச் சொன்னார்கள் உணவகத்தின் உரிமையாளர்கள்.

மிக அமைதியாக உணவு தயாராகும் வரை காத்திருந்து உணவு உண்ட சிறுவனிடம் பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமலேயே மாம்பழப்பட்டு என்ற பெயர்ப்பலகையை காட்டி இந்த வழியாகப் போனால் திருவண்ணா மலையை அடையலாம் என்று வழிகாட்டி அனுப்பிவைத்தனர்.

தன் கைகளில் இருந்த மீதி பணத்திற்கு மாம்பழப்பட்டு வரை மட்டுமே பயணச் சீட்டு பெற முடியும் என உணர்ந்த வெங்கடராமன் மாம்பழப்பட்டு வரை பயணம் செய்து அங்கே இறங்கினான்.

மாம்பழப்பட்டில் இறங்கிய சிறுவன் திருவண்ணாமலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்தி சாயும் நேரம், பயணக் களைப்பு வேறு அருகிலேயே குன்றின் மீது ஆலயம் ஒன்று தென்பட்டது. அறையணிநல்லூர் என்ற ஊரின் சிவாலயம் அது. குன்றின் மீது ஏறி மூடப்பட்டிருந்த சிவாலயத்தின் முன்னால் அமர்ந்தான் சிறுவன் வெங்கடராமன்.

ஆலய குருக்கள் வந்து கதவைத் திறந்தவுடன் உள்ளே சென்று கல்மண்டபத்தின் தூண் ஒன்றின் ஓரமாக அமர்ந்தான் சிறுவன். அப்போது பேரொளி ஒன்று ஆலயம் முழுவதையும் வியாபித்தது. இந்த ஒளி எங்கிருந்து வருகிறது? என கருவறை வரை சென்று பார்த்த சிறுவனுக்கு அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்பதை கண்டு கொள்ளவே முடியவில்லை.

ஞான ஒளியான ரமணரின் வருகையை தான் அந்த ஈசனே இப்படி கொண்டாடி இருப்பானோ? என்று நாம் ஐயுற வேண்டியிருக்கிறது. அப்படியே அந்த ஒளியை தரிசித்த பேரானந்தத்தில் ரமணர் என்று பின்னால் அறியப்பட்ட வெங்கடராமன் கண்மூடி தியானித்து இருந்தான்.

திருவண்ணாமலை, அந்த சிறுவன் தியானித்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே இருந்தது. அந்திச் சூரியன் மேற்கே மறைய தயாராகிக் கொண்டிருந்தது. (பயணம் தொடரும்)

 

Perumal Mani Tiruvannamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment