சன் டி.வி. ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இப்போது ஜீ தமிழ் டி.வி.யின் சீதா ராமன் என்ற புதிய சீரியலில் நடிக்கிறார்.
ரோஜாவுக்கு பாவனா நல்காரி என்ற தங்கை உண்டு. அவருக்கு கடந்த ஆண்டு குடும்பம், உறவினர்கள் சூழ வெகுவிமர்சையாக திருமணம் நடந்தது.
இந்நிலையில்,பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணத்துக்கு பிரியங்காவின் குடும்பம் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவரும் அவசரமாக திருமணம் செய்து கொண்டனர்.
மலேசியா முருகன் கோவிலில் வைத்து நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த புதுமணத் தம்பதியின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு நண்பர்களும், சக நடிகர்களுமான அக்ஷிதா போபையா, ஆர்.ஷ்யாம், சாக்ஷி சிவா, வினோதினி மீனா செல்லமுத்து, ராணி, பிரகாஷ் ராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, 2010ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவாயா’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு,’ ‘சம்திங் சம்திங்’ மற்றும் ‘காஞ்சனா 3’ போன்ற படங்களில் நடித்தார்.
ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். திருமணம் செய்து கொண்ட பிரியங்கா, ராகுல் தம்பதிக்கு வாழ்த்துகள் இப்போது குவிந்து வருகிறது.





“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“