எனது ஆசிரியர் எப்போதும் அறிவு மற்றும் பக்தி விஷயத்தைத்தான் சொல்வார், சாதியை அல்ல, என்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நியமிக்கப்பட்ட முதல் தலித் அர்ச்சகர்களில் ஒருவரான சுமேஷ் பி எஸ்,
ஆனால் சாதி இன்னும் முக்கியமாக உள்ளது. 2015-ல் கேரள தேவசம் ஆள்சேர்ப்பு வாரிய மசோதாவும், 2017-ல் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் (TDB) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 36 அர்ச்சகர்களை நியமித்த போதிலும், புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தலைமை அர்ச்சகர் பதவி இன்னும் நம்பூதிரி, நம்பீசன், நம்பிடி, மூசாத், இளையாத், பொட்டி போன்ற மலையாள பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தலைமை அர்ச்சகர் பதவிக்கு மலையாள பிராமணர்களை மட்டுமே கோரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை ஏப்ரல் 1ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் கே அனந்தகோபன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், கேரளாவில் சில கோயில்களில் விஸ்வகர்மஜர்கள் (OBC) அல்லது நாயர்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள். சபரிமலையில் தலைமை அர்ச்சகர் பதவி ஒரு வருடத்திற்கு மட்டுமே தற்காலிகமாக நிரப்பப்படுகிறது. இந்த வழக்கம் தொடர வேண்டும் என்று வாரியம் விரும்புகிறது. … நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், என்றார்.
இருப்பினும், தேவசம் போர்டின் சாதி அளவுகோல் பாரபட்சமானது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
இது தெளிவாக சாதி அடிப்படையிலான பாகுபாடு என்று ஈழவா சமூகத்தைச் சேர்ந்த (ஓபிசி) அர்ச்சகரும், வழக்கில் மனுதாரருமான விஷ்ணு நாராயணன் கூறுகிறார். அவருக்கு தேவையான அனுபவம் இருந்தபோதிலும், சபரிமலை பதவிக்கான தனது விண்ணப்பங்கள், தனது சாதி காரணமாக பலமுறை நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கேரளாவில், ஐந்து தேவஸ்வம் வாரியங்கள் இணைந்து 3,000 கோவில்களை நடத்துகின்றன – திருவிதாங்கூர் தேவசம் போர்டு 1,248 கோவில்களை நிர்வகிக்கிறது. கொச்சியில் 400 கோவில்கள், மலபார் 1,600 கோவில்கள், குருவாயூரில் 10 கோவில்கள் மற்றும் கூடல்மாணிக்யம் ஒரு கோவில் இதில் அடங்கும்.
விரிவுரையாளரும், சமூக ஆர்வலருமான டாக்டர் அமல் சி ராஜன் கூறும்போது, 2017ல் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டபோது, அது கேரள மறுமலர்ச்சியில் ஒரு மைல் கல்லாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், சபரிமலையில் அர்ச்சகர் பதவிகளுக்கான தேவசம் போர்டு வெளியிட்டு வரும் அறிவிப்புகள், நமது மறுமலர்ச்சி பாதியிலேயே நின்றுவிட்டதைக் காட்டுகிறது.
கேரள கோவில்களில், தந்திரிகள் விதிமுறைகளை வகுக்கிறார்கள், பூசாரிகள் தினசரி பூஜைகளை நடத்துகின்றனர், அதே நேரத்தில் கழக்கக்காரர்கள் (கோயில் பணியாளர்கள்) மாலைகள் கட்டுதல் போன்ற பணிகளுக்கு பொறுப்பாக உள்ளனர்.
வேத ஞானம் பிராமணர்களின் உடமையாக இருந்ததால், தந்திரிகள் மற்றும் பூசாரிகள் பாரம்பரியமாக பதவிகளை வகித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் வழிபாட்டு உரிமைக்காக போராடத் தொடங்கினர் என்கிறார் ராஜன்.
மற்றொரு மைல்கல் ஆதித்தன் Vs திருவிதாங்கூர் தேவசம் போர்டு வழக்கு, 1992 ஆம் ஆண்டு எர்ணாகுளம் கோவிலில் ஈழவ அர்ச்சகரை நியமித்ததை எதிர்த்து மனுதாரர் மனு தாக்கல் செய்தார்.
2002 இல் இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சமூக ஏற்றத்தாழ்வு பிராமண சமூகத்தில் அதிகாரங்களைக் குவித்துள்ளது என்றும், பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகராக வருவதை புனித நூல்கள் தடுக்கவில்லை என்றும் கூறியது.
நம்பூதிரி பிராமணர்களின் அமைப்பான யோகக்ஷேம சபையின் மாநிலத் தலைவர் அக்கேராமன் காளிதாசன் பட்டாத்திரிப்பாட் கூறும்போது, நாங்கள் பிராமணரல்லாத அர்ச்சகர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சபரிமலையில் காலங்காலமாக இருந்து வரும் ஒரு வழக்கத்தை நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்.
2017 ஆம் ஆண்டு ஆலப்புழா மாவட்ட கோவிலில் உதவி அர்ச்சகராக நியமிக்கப்பட்ட ஈழவ சமூகத்தைச் சேர்ந்த சுதிகுமார் இதை நினைவு கூறுகையில், தேவசம் போர்டு எனது நியமனத்தை ஆரம்பத்தில் ரத்து செய்தது. தந்திரிக்கு பிராமண அர்ச்சகர்கள் மட்டுமே தேவை. இந்து மாதா மாநாட்டும் (ஒரு இந்து அமைப்பு) எனது நியமனத்தை எதிர்த்தது. அதைப் பாதுகாக்க நான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பூசாரிகள் பொதுவாக மிகவும் நுட்பமான பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். ஓபிசி அல்லது தலித் அர்ச்சகர்களின் நியமனங்களை அதிகாரம் வாய்ந்த கோவில் கமிட்டிகள் விளம்பரப்படுத்தாமல் தடுக்கும் நிகழ்வுகள் உள்ளதாக ராஜன் கூறுகிறார்.
பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு கோவிலில் பிராமணரல்லாத அர்ச்சகரான சியாம்பவி நாத் சியாம் கூறுகையில், பணி நியமனங்களைத் தடுக்கும் வகையில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தெய்வங்களைத் தொட்டால் தெய்வங்கள் தெய்வீகத்தன்மையை இழக்கும் என்று கோயில் கமிட்டிகள் அடிக்கடி கூறுவதாக குற்றம் சாட்டினார்.
2018 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முயற்சிகளின் எதிரொலியாக, மலைக்கோவிலில் பிராமணர் அல்லாதவர்களை தலைமை அர்ச்சகராக ஏற்க நீதிமன்றம் உத்தரவிட்டால், கேரள அரசும், தேவசம்போர்டும் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“