இந்திய பணக்கார பெண்களின் விருப்பம் ஸ்பாவா? நகையா? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களுக்கு வரும்போது மிகப் பெரும்பான்மையாக 76 சதவீதத்தினர் யோகாவை விரும்புவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.சந்திரன்

இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரக் குடும்பங்களில் உள்ள பெண்களின் விருப்பமான தேர்வு குறித்து ஆய்வு முடிவு பல புருவம் உயர்த்தும் முடிவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. ஸ்பா எனப்படும் அழகு நிலையங்களுக்கும், நகைக்கும் இந்த பெண்கள் அளிக்கும் முக்கியத்துவம் கணிசமாக குறைந்து வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பெரும் பணக்காரப் பெண்கள் தங்களது மொத்த செலவில் நகைகளுக்கு செலவிடும் தொகை வெறும் 12 சதவீதம்தான். அதோடு, இந்த தொகை அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் வரை குறைந்துள்ளது என, கோடக் வெல்த் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் தெரிய வருகிறது.

டாப் ஆஃப் தி பிரமிட் என்ற பெயரிலான இந்த ஆய்வு 7வது முறையாக அண்மையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. பணக்கார பெண்களுக்கான இந்த ஆய்வில் கலந்து கொள்ளும் பெண்களின் சராசரி வயதுடன் கூட குறைந்து வருவதாகத் தெரிகிறது. பங்கேற்ற மொத்த பெண்களில் 40 வயதுக்குள் உள்ளவர் என பார்க்கையில், கடந்த ஆண்டு 47 சதவீதமாக இருந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்களது செலவில் முதல் இடத்தை பிடிப்பது நவநாகரிக உடைகள்தான். அடுத்த நிலையில் விடுமுறை சுற்றுலாவுக்கான செலவு இடம்பிடிக்க, ஆச்சரியமூட்டும் வகையில் கலை மற்றும் ஓவியம் போன்றவற்றுக்கான முதலீடு கடைசி இடம் பிடித்துள்ளது.

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களுக்கு வரும்போது மிகப் பெரும்பான்மையாக 76 சதவீதத்தினர் யோகாவை விரும்புவதாகவும், சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் இரண்டு மட்டுமே பிரபலமாக உள்ளதாகவும் தெரிய வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close