Survivor contestant Lakshmi Priya unknown facts Tamil News : விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த 12-ம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி, ஏற்கெனவே மிகவும் பிரபலமான சர்வதேச நிகழ்ச்சியான சர்வைவரின் தழுவல்தான். 1997-ம் ஆண்டு, சார்லி பார்சன்ஸ் என்பவரால் எக்ஸ்பெடிஷன் ராபின்சன் என்கிற பெயரில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் தமிழில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். ஆப்ரிக்காவின் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் 90 நாட்கள் விதவிதமான சவால்களை எதிர்கொண்டு இறுதிவரை யார் செல்கிறார்களோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் வெற்றிபெறுபவருக்கு, ₹ 1 கோடி ரொக்கப் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது.

தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 8 பெற ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மீதமுள்ள 8 பேர் யார் என்கிற தகவல் நிகழ்ச்சி ஒளிபரப்பின்போதுதான் தெரியவந்தது. அந்த வரிசையில், ஸ்டண்ட் நடிகர் பெசன்ட் ரவி, லக்கி நாராயண், அம்ஜத் கான், விஜே பார்வதி, நடிகை லக்ஷ்மி ப்ரியா, சிங்கப்பூர் ராப்பர் லேடி கேஷ், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி, தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா, விக்ராந்த், விஜயலக்ஷ்மி, விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா, சரண், நந்தா, ராம். சி மற்றும் இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்குபெற்றிருக்கும் கிரிக்கெட் வீராங்கனையும் நடிகையுமான லட்சுமிபிரியா பற்றி அதிகம் அறியப்படாதவை இனி பார்க்கலாம்.
படிப்பு
லக்ஷ்மி பிரியா மனித வள நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். மேலும், திரைத்துறையில் காலடி எடுத்துவைப்பதற்கு முன்பே, HR ஆகவும் பணியாற்றியுள்ளார்.

ஆர்வம்
லட்சுமி பிரியா புகழ்பெற்ற நடிகை மட்டுமல்ல தேசிய அளவிலான கிரிக்கெட் வீராங்கனையும்தான். தனது 10 வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பயிற்சி பெற்று வரும் லட்சுமி பிரியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அவர் தேசிய அளவிலான அல்டிமேட் ஃபிரிஸ்பீ சாம்பியனும்கூட.

திரைப்பயணம்
தொடக்கத்தில் இவர் ஏராளமான மேடை நாடகத்தில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ஒரு சில தொலைகாட்சிகளின் ஒரு பகுதியாக லட்சுமி பிரியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பல ஆடிஷன்களுக்கு பிறகு, சாரதா கதாபாத்திரத்தின்மூலம் தர்மயுத்தம் எனும் தொடரில் சின்னத்திரையில் அறிமுகமானார்.
லக்ஷ்மி பிரியா தனது நாடகக் குழுவுக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தபோது, இயக்குநர் மகிழ் திருமேனி அவரை கண்டு, தான் இயக்கிய முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தில் லட்சுமிப்ரியாவை அறிமுகம் செய்துள்ளார்.

பிறகு, சுட்டக் கதை திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார் லட்சுமி பிரியா. அதில், சிலந்தி என்ற பழங்குடி பெண்ணாக நடித்தார். இதனைத் தொடர்ந்து, தனுஷின் கர்ணன் (பத்மினி), டிக்கெட் மற்றும் மாயா ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு, ‘லட்சுமி’ என்ற குறும்படத்தில் நடித்ததற்காக ஏராளமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் கலவையாகப் பெற்றார்.
குடும்பம்
லட்சுமி பிரியா, ஒரு பெருநிறுவன ஊழியராக பணியாற்றி பின்பு எழுத்தாளராக உருவெடுத்த வெங்கடராகவன் சீனிவாசன் என்பவரை மணந்தார். நீண்ட நாள் காதலித்து வந்த லக்ஷ்மியும் வெங்கடராகவனும், 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ஏற்கெனவே விளையாட்டு வீராங்கனையாக இருக்கும் லட்சுமி பிரியா, சவால்கள் கொட்டிக்கிடக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil