Advertisment

மக்கள் விரும்பினாலும் கற்றுக்கொள்ள ஆள் இல்லை... அழிவின் விளிம்பில் பொம்மலாட்டம் : கலைஞர்கள் வேதனை

கலைநிகழ்ச்சி இருக்கும் காலகட்டத்தில் சிரமம் இருந்தாலும் இல்லாத அந்த 6 மாதம் பெரும் பாதிப்பாக இருக்கும்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bommalattam6

பொம்மலாட்ட கலைஞர்களுடன் நேர்காணல் பார்ட் 1

இளையராஜா தண்டபாணி

Advertisment

தமிழர் பாரம்பரியத்தின் பழமையான மரபு கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். கூத்து வகைகளை சார்ந்த இந்த கலையில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளின் கை, உடல் மற்றும் கழுத்தில் நூலை கட்டி திரைக்கு பின்னால் இருந்து மனிதர்கள் இயக்குவார்கள். இந்த கலைக்கு மரப்பாவை கூத்து என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இந்த பொம்மலாட்ட கலையை நடத்துவதற்கு 10 நபர்கள் தேவைப்படுவார்கள். 4 பேர் பொம்மைகளை இயக்குவதற்கும், 4 பேர் இசைக்கருவிகளை இசைப்பதற்கும் அவர்களுக்கு உதவியாக மொத்தம் 10 பேர் செயல்படுவார்கள். ஒரு மேடையில் முன்புறம் முழுவதும் அடைக்கப்பட்டு ஒரு மீட்டர் அளவில் திரை கட்டப்பட்டிருக்கும். அந்த திரைக்கு பின்னால் இருந்து திரைக்கு முன் உள்ள பொம்மைகளை கலைஞர்கள் இயக்குவார்கள்.

பழங்காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த பொம்மலாட்ட கலை தற்போது அழிவின் விளிம்பில் சென்றுகொண்டிருக்கிறது. இது குறித்து சேலம் மாவட்டம் காருவள்ளி கிராமத்தில் இயங்கி வரும் பொம்மலாட்ட குழுவை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது குழுவினரை சந்தித்தோம்.

பொம்மலாட்ட கலையை எத்தனை வருடங்ளாக நடத்தி வருகிறீர்கள்?

பொம்மலாட்ட கலையை எங்கள் தாத்தா காலத்தில் இருந்து நடத்தி வருகிறோம். எங்கள் தாத்தா காலம் முடிந்து எங்களது அப்பா இப்போது நாங்கள். 3 தலைமுறைகளாக இந்த கலையை நடத்தி வருகிறோம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி கிராமத்தில் நாங்கள் செயல்படுகிறோம்.

Bommalattam2

பொம்மலாட்டம் நடைபெறும் மேடை

உங்கள் முன்னோர்கள் காலத்திற்கும் இப்போது உள்ள காலத்திற்கும் பொம்மலாட்டத்தில் என்ன வித்தியாசம் பார்க்கிறீர்கள்?

எங்கள் முன்னோர்கள் காலகட்டத்தில் ஆட்கள் நிறைபேர் வந்தார்கள். இதை ஒரு கலை என்பதை நினைத்து ஆர்வமாக கற்றுக்கொண்டார்கள் ஆனால் இந்த காலகட்டத்தில் கலையை கற்றுக்கொள்ள ஆட்கள் இல்லை. படித்த பசங்க இதை எப்படி செய்யறது என்று யோசிக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில பசங்களை வைத்து இந்த கலையை நடத்திக்கொண்டு வருகிறோம்.

முன்னோர்கள் காலத்தை போன்று இப்போது பார்வையாளர்களை வரவழைக்க வித்தியாசமாக எதாவது செய்தீர்களா?

முன்னோர்கள் காலத்தில் கதையை விரும்பி பார்த்தார்கள். ஆனால் இப்போது யாரும் கதை விரும்பவில்லை. காமெடியை தான் விரும்புகிறார்கள். அதனால் படங்களில் வரவது போல் கொஞ்சம் காமெடியை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் நாங்கள் இப்போது அதிகம் காமெடி ட்ராக்கை உருவாக்கி நடந்தி வருகிறோம்.

பொம்மலாட்டத்திற்காக கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

புதிதாக கதை எதையும் நாங்கள் தேர்வு செய்யவில்லை. பார்வைக்கதை, ராமாயணம் இதைத்தான் முன்னோர்கள் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களின் வாத்தியார்களை வைத்து இந்த கதைகளை நாங்கள் தெரிந்துகொண்டு அதையே நாங்களும் கடைபிடித்து வருகிறோம். புதிதாக நாங்கள் எதையும் மாற்றவில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினருக்காக கதையில் காமெடியை சேர்த்துள்ளோம் அவ்வளவுதான். இந்த காமெடியும் புராண கதைகளுடன் இணைந்தே இருக்கும். ராஜா மந்திரி இருவரும் பேசுகிறார்கள் என்றால் ராஜா கேட்பதற்குதான் மந்திரி பதில் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது ராஜா கேட்பதற்கு மந்திரி கவுண்டர் கொடுப்பது போல் மாற்றியுள்ளோம்.

இன்றைய காலட்டத்தில் இந்த பொம்மலாட்ட கலையை நடத்துவதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்?

பாரம்பரிய பொம்மலாட்ட கதையை இப்போது நாங்கள் நடத்தி வருகிறோம். ஆனால் எங்கள் காலம் முடிந்த பிறகு இதை யார் நடந்துவார் என்று தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் இதை கற்றுகொள்ள முன்வரவில்லை. இதுதான் எங்களுக்கு சிரமமாக உள்ளது. நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கள் அப்பா நடத்தினார். அப்போது நாங்கள் அப்பாவிடம் கற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது எங்கள் பசங்க சும்மா பார்ப்பதற்கு கூட வர மாட்டேன்கிறார்கள். உங்கள் தொழில் உங்களுடன் இருக்கட்டும் என்று சொல்கிறார்கள்.

Bommalattam1

பொம்மலாட்ட ஆண் பொம்மைகள்

இந்த கலைதான் உங்கள் வாழ்வாதாரமா அல்லது வேறு ஏதேனும் தொழில் இருக்கிறதா?

வருடத்தில் 6 மாதங்கள் இந்த கலைதான் எங்களுக்கு வாழ்வாதாரம். அதன்பிறகு மழை காலத்தில் இந்த கலையை நடத்த முடியாது. அப்போது நாங்கள் கூலி வேலைக்கு சென்றுவிடுவோம். காட்டு வேலை விவசாயம் இப்படி எங்களுக்கு தெரிந்த வேலைகளுக்கு சென்றுவிடுவோம். பண்டிகைகாலங்களில் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறும். முன்னோர்கள் காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் 10-20 நாட்கள் சென்று கலை நிகழ்ச்சி நடத்துவோம். அப்போது தேவையான ஆட்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது ஆட்கள் அதிகம் இல்லை. இந்த கலையில் வருமானம் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் காட்டு வேலைக்கு சென்றால் கூட ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்த கலையில் அவ்வளவு வருமானம் இல்லை.

ஒரு ஊரில் நிகழ்ச்சி நடத்த வருகிறோம் என்றால் வண்டி வாடகை சாப்பாடு இதிலே பாதி பணம் காலியாகிவிடும். அப்படி இருக்கும் போது எங்களுக்கு இதில் ஒன்றுமே கிடைக்காது. அரசாங்கம் பார்த்து எங்கள் முன்னேற்றத்திற்கு ஏதாவது வழியை காட்டினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் வருடம் முழுவதும் இந்த கலையை எங்களால் நடத்த முடியாது. மழைகாலத்தில் எதுவும் செய்ய முடியாது. அந்த நாளில் பார்வையாளர்களும் அதிகம் வரமாட்டார்கள். அப்போது எங்களது வாழ்வாதாரம் பெரிய பாதிப்பாகும்.

முன்னோர் காலத்தில் பள்ளிகளில் பொம்மலாட்ட கலையை நடத்தியது போன்று இப்போது நடத்துகிறீர்களா? அப்போ இருந்த வரவேற்பு இப்போது இருக்கிறதா?

நாங்கள் பள்ளிகளில் இப்போதும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். முன்பு இருந்ததை விட இப்போது பள்ளிகளில் பொம்மலாட்ட கலைக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பள்ளியில் பசங்க இந்த கலையை பற்றி தெரிந்துகொள்ள நாங்கள் நிகழ்ச்சி நடத்துவதால் எங்களுக்கு வருமானம் குறைவாக உள்ளது. மற்றபடி பொம்மலாட்ட கலைக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பிள்ளைகளுக்காக கல்விக்காக நடத்துவதால் அவர்கள் என்ன தருகிறார்களே அதை வாங்கிக்கொள்வோம். சில சமயங்களில் போக்குவரத்து டீசல் மற்றும் சாப்பாடு செலவு மட்டும் தான் கிடைக்கும். அதை நாங்கள் பெரிதான எடுத்துக்கொள்வதில்லை.

Bommalattam3

பொம்மைகளுடன் பொம்மலாட்ட கலைஞர்கள்

இந்த பொம்மலாட்ட கலையை அடுத்து தலைமுறையினருக்கு கொண்டு செல்ல என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?

நாளடைவில் இந்த கலை அழிவை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறது. நாங்களும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறோம். இதற்காக பசங்களை கூப்பிட்டு சொல்லிக்கொடுக்க முயற்சித்தோம். பசங்க 4 நாட்கள் வந்தார்கள் என்றால் அந்த பாட்டு பொம்மை தூக்கி ஆட வேண்டும் என்று வரும்போது என்னால் முடியவில்லை என்று சொல்லி கிளம்பிவிடுகிறார்கள். எங்கள் பிழைப்பு கெட்டு எங்களால் எதையும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

ஒரு தெருக்கூத்து நையாண்டி மேளமாக இருந்தால் ஒரே மாதிரி சென்றுவிடும். ஆனால் பொம்மலாட்ட கலை அப்படி இல்லை. தெருக்கூத்து என்றால் வேஷம் போட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் ஆடிவிட்டு அடுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பொம்மலாட்ட கலையில் பொம்மை வெயிட் தூக்க வேண்டும். பின்னால் மிருதங்கம் வாசிப்பதற்கு ஏற்ப ஆட வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். இத்தனை வேலைகள் இருக்கிறது. எங்களது காலத்தில் இருந்தவர்கள் செய்தார்கள். ஆனால் இப்போது உள்ள இளைஞர்களால் முடியவில்லை. ஆனாலும் 10 பசங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். அப்படி இருந்தாலும் அவர்கள் வருவதற்கு கொஞ்சம் சிரமப்படுகிறார்கள்.

கற்றுக்கொள்ள சிரமப்படும் பசங்களுக்கு எளிதாக கற்றுக்கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா?

புராண கதைகளை கற்றுக்கொள்ள எளிமையான வழி உள்ளது. அந்த காலகட்டத்தில் இருந்த புராணம் தான் என்பதால் அது எளிதானது. இப்போது அதில் காமெடியும் சேர்த்திருப்பதால் மிக எளிமையாக புரியும். ஆனால் பொம்மலாட்ட கலையை கற்றுக்கொள்ள எளிமையாக வழி என்பது முடியாத ஒன்று. பொம்மையின் வெயிட் தூக்கி மிருதங்கத்திற்கு ஏற்ப வாசித்து ஆடி குரல் கொடுத்து அனைத்தையும் செய்ய வேண்டும். இதற்கும் பயிற்சி கொடுக்கிறோம் சிலபேர் கற்றுக்கொள்கிறார்கள். சிலர் தங்களால் முடியவில்லை என்று கிளம்பிவிடுகிறார்கள்.

பொம்மலாட்ட பொம்மைகளை எப்படி செய்கிறீர்கள்?

தனக்கம் என்ற மரத்தில் இருந்து எடுத்த கட்டையில் தான் பொம்மைகள் செய்கிறோம். அந்த மரம் பச்சையாக இருக்கும்போது எடுத்து அதை காயவைக்க வேண்டும். அப்போதூன் அதன் வெயிட் குறையும். அதன்பிறகு அதில் மரத்தூள் வைத்து பொம்மைக்கான முகம் கொண்டு வருவோம். கல்லுமாவு பயன்படுத்தி முகத்திற்கு நைஸ் கொடுப்போம். அதற்கு மேல் பெயிண்டிங் செய்வோம். அதற்கு மேல் ட்ரஸ் மற்றும் அலங்கார பொருட்களை பயன்படுத்துவோம். முன்னோர்கள் காலத்தில் செய்ததை நாங்கள் அப்படியே கடைபிடித்து வருகிறோம். வருமானம் அதிகமாக இருந்தால் பொம்மைகளுக்காக ட்ரஸ் உள்ளிட்ட பலவற்றி மாற்றி அமைக்கலாம். ஆனால் இப்போது வருமானம் இல்லை. அரசாங்கம் பார்த்து ஊக்க தொகை கொடுத்தால் இந்த கலையை மேலும் வளர்க்க உறுதுணையாக இருக்கும்.

Bommalattam4

பொம்மைகள்

6 மாதம் நிகழ்ச்சி என்றால் அடுத்த 6 மாதம் உங்களது வாழ்வாதாரம் எப்படி?

நிரந்தரமான வேலைகள் இல்லை. கிடைத்த வேலைக்குதான் செல்ல வேண்டும். மூட்டை தூக்கும் வேலைக்கு கூட செல்வோம். கிடைத்த வேலைக்கு செல்வோம். கலைநிகழ்ச்சி இருக்கும் காலகட்டத்தில் சிரமம் இருந்தாலும் இல்லாத அந்த 6 மாதம் பெரும் பாதிப்பாக இருக்கும்.

பள்ளிகளில் பொம்மலாட்டம் நடத்தும்போது நீங்கள் சொந்ந முயற்சியில் நடத்துகிறீர்களா அல்லது பள்ளியில் இருந்து உங்களை தொடர்புகொள்கிறார்களா?

குழந்தைகள் அந்த பொம்மைகளை பாக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் இருந்து எங்களை அழைக்கிறார்கள். நாங்கள் இப்போது எங்கு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பொம்மலாட்டத்தை பார்த்துவிட்டு இது நாங்கள் 30 வருடத்திற்கு முன்பு பார்த்தது என்று சொல்கிறார்கள். எங்கள் ஊரில் பொம்மலாட்ட குழு மொத்தம் 10 குருப் இருந்தது. ஆனால் இப்போது 2 குருப் தான் உள்ளது. மற்ற 8 குருப்பும் கலைந்துவிட்டது. ஒரு குருப்-க்கு 10 பேர் வேண்டும். ஆனால் இருக்கும் இரண்டு குருப்பிலும் அவ்வளவு ஆள் இல்லை. அதனால் நாங்களே மாறி மாறி சென்று நடத்திக்கொண்டு வருகிறோம்.

தோல்பாவை – பொம்மலாட்டம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்?

தோல்பாவை வெள்ளை திரை கட்டி திரைக்கு பின்னால் இருந்து பொம்மைகளை இயக்குவார்கள். துணிக்கு வெளியில் லைட் செட்டிங் வைக்கப்பட்டிருக்கும். தோல்பாவை பொம்மைகள் திரைக்கு உள்ளேதான் இருக்கும். ஆனால் பொம்மலாட்டம் (மரப்பாவை) திரைக்கு முன்பு பொம்மைகள் ஆடும்.. தோல்பாவையில் குச்சி வைத்து பொம்மைகள் செட் செய்திருப்பார்கள். இதற்கு ஒரு ஆள் மட்டும் இருந்தால் போதும் பொம்மைகளை ஆட வைத்துவிடலாம்.

ஆனால் பொம்மலாட்டம் அப்படி அல்ல. கை மற்றும் கருத்து பகுதியில் பொம்மைக்கு கயிறு கட்டி திரைக்கு முன்னாள் இயக்கப்படும். தெருக்கூத்தில் எப்படி ஆடுவார்களே அதேபோல் பொம்மைகள் ஆட வைப்போம். பொம்மைகளுக்காக பேச வேண்டும். பக்கத்தில் இருக்கும் பொம்மை பேசும்போது கை ஆட்ட வேண்டும். ஒரு பொம்மைக்கு ஒரு ஆள் குரல் கொடுக்க வேண்டும். பாட்டும் பாடனும், கதை சொல்லனும், பொம்மை ஆட்டனும், குரல் கொடுக்கனும் சுதி மாறாமல் பாட வேண்டும் ஆடவும் வேண்டும். இப்படி பல வேலைகள் இருக்கு. இதை எல்லாம் ஒரு பொம்மைக்கு ஒரு ஆள் என்று 4 வேலைகளை செய்ய வேண்டும். இத்தனையும் செய்தால் தான் அது பொம்மலாட்டம். ஆனால் தோல்பாவையில் அப்படி வராது.

publive-image

பொம்மலாட்ட குழுவின் ராஜேந்திரன்

அழிந்து வரும் இந்த பாரம்பரிய கலையை மீட்டெடுக்க அரசு என்ன உதவி செய்ய வேண்டும்?  

பாரம்பரிய கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு உண்டான முயற்சியை எடுக்க வேண்டும். அரசாங்கள் இதற்காக ஊக்கத்தொகை வழங்கினால் உதவியாக இருக்கும். ஊக்கத்தொகை வந்தால் அதற்காகவும் இதை கற்றுக்கொள்ள இளைஞர்களுக்கு ஆர்வம் வரும். பொம்மைகளுக்கு ட்ரெஸ் கற்றுக்கொள்ள வரும் பசங்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால் நன்றாக இருக்கும்.

தெருக்கூத்தில் ஒரு வாத்தியாரை வைத்து கற்றுக்கொண்டு 4 நிகழ்ச்சியில் ஆடிவிட்டால் அவர் கலைஞன் ஆகிவிடுகிறார். அப்போது அவருக்கு அரசாங்கத்திடம் இருந்து ட்ரஸ் வாங்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் பொம்மலாட்டத்திற்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை. தெருக்கூத்தில் இருக்கும் கலைஞர்கள் 1-2 மணி நேரம் பவுடர் பூசிக்கொண்டு ஆடினால் அவருக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது.

அதன்பிறகு அவர்கள் அரசாங்கத்திடம், உறுப்பினர் கார்டு பெற்றுக்கொள்கிறார்கள். அந்த கார்டை வைத்து அவரது ட்ரஸ் உள்ளிட்ட தேவைகளுக்கு அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால் எங்களுக்கு யாரும ஊக்கத்தொகை வழங்குவதில்லை. பொம்மைகளுக்கு 2 வருடத்திற்கு ஒருமுறை பெயிண்டிங் பண்ண வேண்டும். இதற்காக 1.5-2 லட்சம் வரை செலவாகும்.

இந்த பொம்மலாட்ட கலையை அழியாமல் பாதுகாக்க மக்களுக்கு நீங்கள் சொல்ல வருவது?

இந்த கலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்கு சென்றாலும் கலையை மக்கள் விரும்புகிறார்கள். இதை பார்க்க வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் பெரும்பாலான மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த கலையை வளர்ப்பதற்கு ஆட்கள் இல்லை. இதுதான் முக்கிய காரணம். இதனால் எங்கள் காலத்திற்கு பின் இந்த கலை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கே தெரியவில்லை. ஆனால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முயற்சி பண்ணுகிறோம். இருந்தாலும் அது செட் ஆக மாட்டேன்குது.

இப்போது எல்லா தொழிலுக்கும் வருமானம் என்பது முக்கியம். என்ன வேலை செய்தாலும் வருமானம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வருமானத்தை தேடி செல்கிறார்கள். ஆதனால் வருமானம் இல்லாத இந்த கலையை தேடி யாரும் வருவதில்லை. மக்கள் ஆர்வமாக இருந்தாலும் எங்களுக்கு வருமானம் இல்லை. அப்படி இருக்கும்போது நீ தான் கத்துக்கிட்ட நீதான் 6 மாதம் பிழைப்பு இல்லாமல் இருக்க போற இதை நாங்களும் கத்துக்கிட்டு எங்க குடம்பத்தை எப்படி காப்பாத்துறது என்ற கேள்விக்கு .இடம் வருகிறது.

அப்படி இருக்கும்போது நாமும் இதை யோசிக்க வேண்டிய நிலை வருகிறது. நாம் தான் கற்றுக்கொண்டு 6 மாதம் வேலை இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இந்த நிலையிலும் முன்னோர்கள் செய்த தொழிலை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் என்று நாங்கள் பசங்களுக்கு கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறேம். பாரம்பரிய கலையை மறக்க கூடாது என்று காப்பாற்ற முயற்சிக்கிறோம்.

தொடரும்...

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Lifestyle Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment