Tamil Lifestyle Perfect Idly Mavu Making : தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இட்லி தோசை பிரபலமான உணவாக உள்ளது. குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இட்லி தோசை உணவுகள் செய்யப்படுவது வழக்கமான ஒரு உணவுமுறையாக கடைபிடித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். பிரபலமான இந்த உணவை சமைப்பது சுலபம் என்றாலும் கூட இதற்கான மாவை பதமாக தயார் செய்வதில் பலரும் கோட்டை விட்டுவிடுகின்றனர்.
பதமாக தயாராகாத மாவை வைத்து இட்லி செய்யும்போது அது கடினமாகவோ அல்லது சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாத நிலையிலோதான் நமக்கு கிடைக்கிறது. சரி இந்த மாவை வைத்து தோசை செய்யலாம் என்றாலும் கூட தோசைக்கல்லில் மாவை ஊற்றிவிட்டு சிறிது நேரத்தில் கல்லோடு ஒட்டிக்கொண்டு திருப்புவதற்குள் தீய்ந்துவிடும் நிலைக்கு சென்றுவிடும். இந்த தொல்லையில் இருந்து விடுபட இட்லி மாவை அரைக்கும்போது கவனத்துடன் பதமாக அரைத்து எடுப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில் இட்லி மாவை பதமாக அரைப்பது எப்படி? அரைத்த மாவை பாதுகாப்பாக பல நாட்கள் வைத்து பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
முதலில் 4 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக 5 மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அவல் மற்றும் ஜவ்வரிசியை சேர்க்கலாம். அதன்பிறகு முதலில் உளுந்தை அரைக்க வேண்டும். உளுந்து நன்றான அரைந்து பொங்கி வரும் நிலையில், அதனை எடுத்துவிட வேண்டும். உளுந்து மாவு மிகவும் நைசாக இருக்க வேண்டியது அவசியம். அரைக்கும்போது இடையில் கடினமாக இருந்தால் மாவில் தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அரிசியை அரைக்க வேண்டும். அதேபோல் அரிசியை அரைக்கும்போதும் கடினமாக இருந்தால் தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும். அடுத்து உளுந்தம் மாவு மற்றும் அரிசி மாவை ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்பிறகு மாவை புளிக்க வைக்க ஒரு பிளாஸ்டிக் கண்டைனரை பயன்படுத்தலாம். ஒருநாள் இரவு முழுவதும் புளித்த மாவை எடுத்து மறுநாள் இட்லி தோசை செய்யும்போது மிருவாக கிடைக்கும்.
இந்த மாவை சுமார் 10 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். அவசரமான சூழலில் ஒரு மாதத்திற்கு மேல் மாவை பயன்படுத்த வேண்டும் என்று இருந்தால மாவை ஒரு பிளாஸ்டிக் கண்டைனரில் வைத்து காற்று புகாத அளவுக்கு முடிவைத்து ஒரு மாதம் கழித்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இதை செய்யும்போது காலையில் நீங்கள் இட்லி தோசை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன்பே மாவை பிரீசரில் இருந்து வெளியில் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil