Advertisment

வேலு நாச்சியார் வித்தை... பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் ஏன்? சிறப்பு நேர்காணல்

பெண்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் அனைத்து பெண்களும் இந்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
silambam

சிலம்பம் பயிற்சியாளர் பிரியா கோபிநாத்

இளையராஜா தண்டபாணி

Advertisment

பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் பல்வேறு வகையான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த பாரம்பரிய கலை முறையை போரிலும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் இது போன்ற தற்காப்பு கலையில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.

இந்த கலைகளில் முக்கியமானது சிலம்பம். கம்பு வைத்து சுற்றும் இந்த கலைக்கு தடியடி என்றும், கம்பு சுற்றுதல் என்றும் மாற்று பெயர்கள் உண்டு. மன்னர்கள் காலத்தில் பெரும் வளர்ச்சியில் இருந்த இந்த கலைகள் காலப்போக்கில் மக்களை விட்டு விலக தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெரும்பாலும் கராத்தே குங்பூ உள்ளிட்ட கலைகளில் மக்கள் தங்களது கவனத்தை திருப்ப தொடங்கினர்.

ஆனால் தற்போது தமிழர்கள் வரலாற்றை ஆன்லைனில் தேடி படிக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால், தமிழரின் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கற்றுவந்த இந்த கலைகளை தற்போது பெண்களும் அதிகளவில் கற்க தொடங்கியுள்ளனர். பெண்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் இந்த தற்காப்பு கலைகள் பெண்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்.

publive-image

இது குறித்து தற்காப்பு கலை பயிற்சியாளர் பிரியா கோபிநாத் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதித்து வரும் இந்த காலகட்டத்தில் திருமணத்திற்கு பின் ஒரு குழந்தைக்கு தாயான இவர், அதன்பிறகு கணவரின் துணையுடன் சிலம்பம் விளையாட்டில் பயிற்சி பெற்று பல போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.

சிலம்பம் விளையாட்டில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? எத்தனை வயதில் சிலம்பம் விளையாட தொடங்கினீர்கள்?

முதலில் சாதாரண பெண்கள் வாழ்ந்து வரும் வாழக்கையை தான் வாழ்ந்து வந்தேன். திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பிறகு சிலம்பம் மீது எனக்கு ஆர்வம் வர காரணம் எனது கணவர். அவர் ஒரு சிலம்பம் ஆசான். அவரின் ஊக்கம் மற்றும் ஆதரவினால் நான் சிலம்பம் கற்றுக்கொள்ள வந்தேன். ஒரு குடும்பத்திற்கு முதுகெலும்பு பெண்கள். பெண்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் சமுதாயத்தில் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்காக எனது கணவர் கோபிநாத் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக எனது 29-வது வயதில் நான் சிலம்பம் கற்றுக்கொள்ள தொடங்கினேன்.

பெண்களுக்கு இந்த மாதிரியான கலைகள் கற்றுக்கொள்வது சரியாக இருக்காது என்ற எதிர்ப்பு குறித்து உங்கள் கருத்து

இந்த தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள நிறைய பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் ஆதரவு இருக்காது. பெண்கள் தங்களை பாதுக்காத்துக்கொள்ள இந்த கலைகளை கற்றுக்கொள்ள முன்வந்தால் அதற்கு அவர்களின் உடன் இருப்பவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள அவர்கள் வீட்டில் உள்ள அப்பா, சகோதரர்கள் என ஆண்கள் முழு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். அப்போது தான் பெண்களால் சாதிக்க முடியும். என் கணவர் எனக்கு முழு ஆதரவு அளித்ததால் எனக்கு இந்த தற்காப்பு கலையை கற்றுக்கொள்வதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

publive-image

தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள தொடங்கும்போது உங்களது மனநிலை எப்படி இருந்தது?

திருமணத்திற்கு பின் இந்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள என் கணவர் ஊக்கம் அளித்தார். அதனால் என் குடும்பத்தில் இருந்து நான் எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. அதே சமயம் என் கணவர் எனக்கு சொல்லிக்கொடுக்கும்போது எனக்கு இந்த கலைகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லை. இதனால் என்ன பயன் என்று யோசித்தேன். ஆனால் கற்று்ககொள்ள தொடங்கிய சில நாட்களில் இந்த தற்காப்பு கலை மீது எனக்கு ஆர்வம் அதிகமாக வந்தது. அந்த ஆர்வம் இப்போதுவரை எனக்கு குறையவில்லை. பெண்களுக்கு இந்த தற்காப்பு கலைகள் பற்றி தெரியவில்லை. உடன் இருப்பவர்களும் இது முக்கியமானது என்று சொல்லி கற்றுக்கொள்ள ஊக்கம் தருவதில்லை.

சிலம்பம் கற்றுக்கொள்வதால் என்ன பயன்? (குறிப்பாக பெண்களுக்கு)

சிலம்பம் கற்கும்போது உடல் வலிமை பெற்று ஆரோக்கிமாக மாறுகிறது. புத்தி கூர்மை, சிக்கலான ஒரு விஷயத்தில் தெளிவான ஒரு முடிவு எடுக்க உதவும், நேர்மறையான எண்ணங்கள் வரும். முக்கியமாக தைரியம் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். கொரோனா காலகட்டத்தில் நாங்களும் பாதிக்கப்பட்டோம். ஆனால் சாதாரண சளி இருமல் போல் கடந்து வந்துவிட்டோம். அது ஒரு பெரிய நோய் என்ற எண்ணமே வரவில்லை.

எதிர்காலத்தில் இதைவிட பெரிய நோய் வரவும் வாய்ப்புள்ளது. அதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தற்காப்பு கலைகள் இதற்கு துணையாக இருக்கும். தற்காப்பு கலை பெண்களுக்கு மனவலிமையை கொடுக்கிறது. உடல் ஆரோக்கியம். ஆபத்து காலத்தில் தங்களை தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. இந்த கலைகள் மூலம் பெண்கள் அவர்களது வாழ்க்கையை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

இப்போது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் மனஉளைச்சலை சந்தித்து வருகின்றனர். அதேபோல் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற பழக்கங்களும் வைத்திருக்கிறார். இதில் பெண்களும் இந்த பழக்கங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் தற்காப்பு கலையை கற்றுக்கொண்டால் அவர்கள் இந்த பழக்கத்தில் இருந்து விடுபடலாம். தவறான பாதைக்கு செல்லும் எண்ணங்களே வராது. உடல் கழிவுகளை வெளியேற்றும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த தற்காப்பு கலை உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. அதேபோல் சர்க்கரைநோய், உடல் கொழுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட தற்காப்புக்கலை உதவும். புற்றுநோய் பாதிப்பில் இருந்து கூட குணமாகி இருக்கிறார்கள்.

சிலம்பம் விளையாட்டில் நீங்கள் சந்தித்த சவால்கள்

ஏற்கனவே நான் கொடுத்த ஒரு பேட்டியை பார்த்த பலரும் பெண்களுக்கு இது தேவையில்லாத வேலை. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் திருமணம் செய்துகொண்டு சமையல் செய்ய போறீங்க, குழந்தையை பார்த்துக்கொள்ள போறீங்க, உங்களுக்கு இது தேவையா என்று கமெண்ட் செய்தார்கள். அவர்களுக்கே தெரிய வேண்டும். இப்போ இருக்கும் சூழ்நிலையில், பெண்களுக்கு இந்த தற்காப்பு கலை அவசியம். அதனால் ஒரு பெண் இதை செய்கிறார் என்றால் அதை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர திருமணமான பெண்கள் சமையல் குழந்தைகள் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொள்ள கூடாது. இது போன்று நிறைய கமெண்ட்ஸ் வரும் ஆனால் நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு என்ன தேவையோ, இதில் இருந்து நான் என்ன மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் என்பதை மட்டுமே யோசித்தேன்.

சிலம்பம் விளையாட்டில் நீங்கள் பெற்ற முதல் வெற்றி

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதங்கங்கள் வென்றிருக்கிறேன். தேசிய அளவில் நான் பதக்கம் வென்றதை விட சர்வதேச அளவில் பதக்கம் வென்றபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. தேசிய மற்றும் சர்வதேச அளிவில் தங்கம்பதக்கம் வென்றிருக்கிறேன். மாவட்ட அளவில் பதக்கம் வாங்கியபோது அது எனக்கு சாதாரணமாகதான் தெரிந்தது. ஆனால் இதைவிட அதிகமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். திருமணத்திற்கு முன் ஒரு பெண் சாதிக்கிறார் என்பதை விட திருமணத்திற்கு பின் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண் சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் வெல்கிறார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு பெண்களும் இதை பற்றி யோசிக்க வேண்டும். தாயான ஒரு பெண் சாதிக்கிறாள் என்றால் இளைய தலைமுறை பெண்களால் ஏன் இதை செய்ய முடியாது என்று யோசிக்க வேண்டும். இந்த தற்காப்பு கலையை என்னை விட அனைத்து பெண்களும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். அதில் அவர்கள் பல சாதனைகள் பெற்றால் அதுவே எனது சிறந்த வெற்றி.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். இதை பற்றி உங்கள் கருத்து

உண்மைதான். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னெறி வருகிறார்கள். பல சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் பெண்கள் எந்த துறைகளில் முன்னுக்கு வந்தாலும் திடீரென்று அவர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அப்போது அவர்களை பாதுக்காத்துக்கொள்ள இந்த தற்காப்புக்கலை உதவும். ஆனால் பெண்கள் ஏன் இதை கற்றுக்கொள்ள முன்வரவில்லை என்பது வருத்தமாக உள்ளது. ஆண்களுக்கு நிகராக சாதித்து வரும் பெண்கள், ஆண்களிடம் இருந்து சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளலாமே.. மற்ற துறைகளை போல் இதிலும் சாதிக்கலாமே என்பது எனது விருப்பம். இதை பெண்கள் செய்தால் மிகவும் சந்தோஷம்.

நீங்கள் வீராங்கனையாக இருந்து தற்காப்பு கலை பயிற்சியாளராக மாறிய தருணம்

நான் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள தொடங்கிய உடனே எனது உடல் எவ்வாறு வலிமை பெற்றதோ, எனக்கு என்ன தைரியம் வந்ததோ, இதே தைரியம் மற்றவர்களுக்கு வந்தால் இந்த சமுதாயம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும்? இப்போது இருக்கிற சூழ்நிலையில், பெண்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். தாயான என்னாலே இவ்வளவு முடிகிறது என்றால் மற்ற பெண்களாலும் இந்த சாதனையை செய்ய முடியும். அவர்களுக்கும் இந்த கலையை நான் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய கடமை. அதனால் நான் இதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த முடிவை செயல்படுத்தி நான் பயிற்சியாளராக மாறியபோது நானும் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

வீராங்கனை முதல் பயிற்சியாளர் வரை இப்போது உங்கள் மனநிலை எப்படி உள்ளது?

வீராங்கனை என்பது நான் சாதித்தது. பயிற்சியாளராக இருக்கும்போது என்னிடம் பயின்ற மாணவர்கள் சாதிக்கும்போது நான் சாதித்தபோது இருந்த சந்தோஷத்தை விட அதிகமாக சந்தோஷம் கிடைக்கிறது. கும்பலாக ஆண்கள் நின்றால் அங்கு பெண்கள் தைரியமாக செல்கிறார்கள். அவர்களின் கேள்விக்கு தைரியமாக பதில் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களின் மனவலிமை அதிகரித்துள்ளது. இதை பார்க்கும்போது எனக்கு மேலும் சந்தோஷமாக உள்ளது. இதுதான் என்னுடைய பெரிய சாதனையாக நினைக்கிறேன்.

publive-image

பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தற்காப்புக்கலை, போர்க்கலை மட்டுமல்லாமல் இது உடல் ஆரோக்கியத்திற்கான கலை. மன ஆரோக்கியம், மேம்படுத்தும். இது ஒரு வாழ்வியல் கலை இதற்காகவே முக்கியமாக நான் பயிற்சி கொடுக்கிறேன். அதே சமயம் முன்மைவிட இந்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள இப்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு இதன் முக்கியத்துவம் மற்றும் வழிப்புணர்வு உள்ளது. இது பாரம்பரியமான போர்க்கலை கண்டிப்பாக ஆண்களும் பெண்களும் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசான்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த கலை அழிவை நோக்கி செல்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. இந்த தற்காப்பு கலைகளை சொல்லிக்கொடுக்கும் ஆசான்கள் பலரும் முறையாக பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர். அவர்களே தெளிவில்லாமல் பயிற்சி எடுத்துவிட்டு, தவறாக கற்றுக்கொடுக்கிறார்கள். இப்போது கராத்தே பயிற்சி பெற்றவர்கள் சிலம்பம் சொல்லிக்கொடுக்க வருகிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் 2 அல்லது 3 மாதங்களில் அவசர அவசரமாக பயிற்சி பெற்று மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு முறையாக பயிற்சியாக இருக்கும் என்பது சந்தேகம் தான்.

பள்ளியில் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்த சிலம்பம் விளையாட்டை கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் சிலம்பம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் அவர்கள் திடீரென ஆசான்களாக மாறி சிலம்பம் கற்றுக்கொடுக்க தொடங்கிவிடுகிறார்கள். முறையாக ஆசான் ஆக வேண்டும் என்றால் பல வருடங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நானும் சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற பிறகுதான் பயிற்சியாளராக மாறினேன்.

அதேபோல் உண்மையான கலை சார்ந்த பயிற்சியை கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்த கலை பாதுகாக்கப்படும். ஆனால் பணத்தை முன்னிறுத்தி இந்த கலைகளை சொல்லிக்கொடுத்தால் தற்காப்புக்கலை அழிவை நோக்கிதான் செல்லும். மேலும் பல இடங்களில் ரெக்கார்டு என்று சொல்லி 2 மணி நேரம் சிலம்பம் சுற்றுகிறார்கள் என்பது போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால் இது சாதனை கிடையாது. இந்த கலையை அவர்கள் பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படி செய்வது இந்த கலை அழிவை நோக்கி செல்லும் வழியை கொடுக்கும்.

மேலும் ஒரு கலையை சொல்லிக்கொடுக்கும்போது முறையாகவும், இந்த கலையை எதற்கு பயன்படுகிறது, இதன் பாரம்பரிய பெயர் என்ன என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த கலை காக்கப்படும். இல்லை என்றால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த கலை தவறாக கற்பிக்கப்படும் நிலைமை ஏற்படும். இதனால் முழுமையான தற்காப்புக்கலை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலே சென்றுவிடும்.

ஆன்லைன் முறையில் சிலம்பம் எப்படி கற்றுக்கொடுக்கிறீர்கள்?

முதலில் நேரடி வகுப்புகள் தான் எடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நேரடி வகுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மாணவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு டச் இல்லாமல் போய்விட்டது. இதனை தடுக்க ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடங்கினோம். சந்தேகத்துடன் தொடங்கிய இந்த ஆன்லைன் வகுப்புகள் இப்போது வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு நபருக்கும் தனியாக கேர் எடுத்து சொல்லிக்கொடுப்போம். ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆன்லைன் முறையில் சிலம்பம் கற்றுக்கொள்கிறார்கள். ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எங்களது மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

publive-image

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நமது பாரம்பரிய கலைகளை கற்றுக்கொள்ள இந்த ஆன்லைன் வகுப்புகள் பெரிதும் உதவுகிறது. ஆர்வமும், நேரமும் இருந்தால் யார் வேண்டுமானலும் இந்த கலையை கற்றுக்கொள்ளலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தற்காப்பு கலைகள் என்ன?

தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலையை பெண்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், வீர பெண்மணி வேலு நாச்சியாரின் பயிற்சி மற்றும் போர் முறைதான் இந்த தற்காப்புக்கலை. தமிழகத்தை ஆண்ட பல மன்னர்கள் இந்த கலையில் வித்தகர்களாக இருந்துள்ளனர். இந்த போர்க்கலையை கொண்டு அந்த பெண்மணி தனது நாட்டையும் தன்னையும் பாதுகாத்துக்கொண்டார். இந்த கலையை பயன்படுத்தி பல போர்களில் தமிழக மன்னர்கள் வெற்றி பெற்றுள்ளனர். போரில் அடிப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மருத்துவக்கலை. மிகவும் வீரமான பெண்மணி வேலு நாச்சியார் செய்த கலையை தான் தற்போது நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். இதைவிட வேறு எந்த கலை நமது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க போகிறது? ஆண்கள் 50 பேர் வந்தாலும் அவர்களை அடிக்க கூடிய வலிமை கொண்டவராக இருந்தவர் வேலு நாச்சியார். இப்போது ஒருவர் கைபிடித்து இழுத்தால் கூட பெண்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது பெண்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் அனைத்து பெண்களும் இந்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அதேபோல் யூடியூப் வீடியோக்களை பார்த்து தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டேன் என்று நினைத்து ஒரு பிரச்சினையின்போது அதை பயன்படுத்தினால் கண்டிப்பாக தோல்வி தான் கிடைக்கும். நேரில் அவர்கள் எப்படி அட்டாக் செய்வார்கள் என்பது தெரியாது. யூடியூப் வீடியோவை நம்பி ரியல் ஃபைட் செய்வது ஆபத்தானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment