Advertisment

அணுகுண்டு பிதாமகன் ராபர்ட் ஓப்பன்ஹைமர்: விண்ணைத் தொட்டு வீழ்ந்த கதை

அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் ஓப்பன்ஹைமரின் உன்னத போர்த்துறை விஞ்ஞானப் பணிக்கு 1963 டிசம்பர் 2 இல் அமெரிக்காவின் மதிப்பு மிக்க ‘என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தை’ [Enrico Fermi Award] அளித்து அவரைப் போற்றினார்.

author-image
WebDesk
Feb 04, 2022 08:30 IST
New Update
அணுகுண்டு பிதாமகன் ராபர்ட் ஓப்பன்ஹைமர்: விண்ணைத் தொட்டு வீழ்ந்த கதை

ஹிட்லரை பயமுறுத்த  அணுகுண்டு தயாரித்த  ராபர்ட் ஓப்பன்ஹைமர்

மனப்பிறட்சி  நோயால் மாண்டு போன அவலம் 

Advertisment

த . வளவன் 

"விண்வெளியில் ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரமம் படைத்த வல்லவன் பேரொளியும்  இருக்கும்.  உலகத்தைத் தூள் தூளாக தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்," இப்படி  சொன்னது பகவத் கீதையின் சூத்திரதாரி கிருஷ்ணன்.  இதையே திருப்பி சொன்னார்  அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் , 1945 ஜூலை 16ம்  நாள்  முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய  அமெரிக்க விஞ்ஞானி  ராபர்ட் ஓப்பன்ஹைமர் . அவர் தான் அணுகுண்டின் பிதாமகன்.  இதைத் தான் ஜப்பானின் முக்கிய நகரங்களின் மீது அமெரிக்காவும் சோதித்து பார்த்தது. அது தான் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அணுகுண்டு

பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலேயே  எரிந்து சாம்பலாயின.  ஓடிய அணில்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின.  நகர் முழுவதும் ஒளி மயமாக  பளிச்சென்று ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது. தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் என அனைத்தும்  கரிந்து வளைந்து போயின. காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும் மனிதச் சடலங்கள்.

விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியவர்களின் கண்கள்  அவிந்து போய்க் குருடாயின.  ஒரு  இளம் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும் எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்.  எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்.  

மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது.  ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.  எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்.  குளத்தின் நீர் சூடாக இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன.  அனலில் கரிந்த மாது ஒருத்தி, எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்.

ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது.  உள்ளிருந்த மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்.  ஓரிடத்தில், கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது. அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் போதாது.  

ஹிட்லர் என்ற  சர்வாதிகாரியை  வீழ்த்த பல லட்சம் ஜப்பானியர்களை  கொல்ல  நேர்ந்தது  எண்ணியே அணு ஆயுதம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி   ராபர்ட் ஓப்பன்ஹைமர்  மனப்பிறழ்ச்சி நோயால் இறந்து போனார். இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு சில விஷயங்கள் புரிய வரலாம். வராமலும் போகலாம்.  

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வழி வகுத்தவர்கள்  ஐந்து விஞ்ஞான மேதைகள், மற்றும் ஓர் இராணுவத் தளபதி.  முதலில் கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி.  அடுத்து செயற்கைக் கதிரியக்கம்  உருவாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி. அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் புரிந்த என்ரிகோ ஃபெர்மி.  அடுத்து, இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னர்  அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முடிவில் போர் முடியும் தருவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மற்றும்  இராணுவத் தளபதி லெஸ்லி குரூஸ் போன்றோர்.

ஜப்பானின்  ஹிரோஷிமா,  நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின்னர்  உலகின் வல்லரசுகள் அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன.  1945 இல் அமெரிக்கா  தயாரித்த அணுகுண்டை தனது  ஒற்று  நடவடிக்கை மூலம் மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டை சோதித்தது. அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல்  சீனா,  1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அணு ஆயுதப் பந்தயங்கள் தொடர்ந்தன.  உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன.  ஆனால் அர்ஜென்டினா , பிரேசில், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட  மறுத்து விட்டன.

ஓப்பன்ஹைமர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த  ஒரு ஓர் பெளதிக விஞ்ஞானி.  அவரே உலக அணு ஆயுதங்களின் பிதா. நெருங்கிய நண்பர்களுக்கு அவர் ஒரு பெரும் தீரர்.  சிலருக்குப் புரிந்து கொள்ள முடியாத ஓர் புதிர் மனிதர். பலராலும் துரோகி  என்று தூற்றப் பட்டவர். அமெரிக்கா சோவியத் ரஷ்யாவுக்கு இடையே எழுந்த ஊமைப் போர் அரசியல் ஊழலில் பழி சுமத்தப்பட்ட ஓர் பலியாளி என்று அவர்மேல் அனுதாபப் பட்டவர்களும்  உண்டு.  1942 முதல் 1954 வரை அவர் புகழ் வானளவு உயர்ந்து பின்பு, அமெரிக்க அரசின் பாதுகாப்பில்  சந்தேகப்  படும் ஒரு நபராக , அணுசக்திப் பேரவையிலிருந்து வெளியே தள்ளப் பட்டவர். வான வில்லாய் போன அவரது அரிய வாழ்க்கை முள்ளும் மலரும் நிறைந்த ஓர் விந்தை வரலாறு.

ஓப்பன்ஹைமர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்த ஓர் செல்வந்த யூத குடும்பத்தில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் 1904 ஆம் ஆண்டு  பிறந்தார்.  தந்தை ஜூலியஸ் ஓப்பன்ஹைமர் துணிகள் இறக்குமதியில் பெருநிதி திரட்டிச் செல்வந்தராக பெயர் எடுத்தவர். தாயார் எல்லா பிரெட்மன் ஓர் உன்னத ஓவியக்கலை மாது.  சிறிய வயதிலேயே ராபர்ட் கணக்கிலும், பௌதிகத்தில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார்.   உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, கால்குலஸ் கணிதத்தில் கைதேர்ந்த வல்லுநராக இருந்தார்.  ஒழுக்கவியல் கலாச்சாரப் பள்ளியில் படிப்பு முடிந்ததும், ராபர்ட் முதலில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். ஹார்வேர்டில் படிக்கும் காலத்தில் லத்தீன், கிரேக்க மொழிகள் பயின்றார்.  பெளதிகம், ரசாயனம்  இரண்டிலும் சிறந்து விளங்கினார்.  மேலும் அவர் கிழக்காசிய வேதாந்தம் , மனிதவியல் , சமூக விஞ்ஞானம் ஆகியவற்றையும் படித்து தேர்ந்தார்.  அப்போது அவர் எழுதிய முதல் கவிதைத் தொகுதி வெளியானது.

1925 இல் B.A. பட்டம் பெற்ற பிறகு, இங்கிலாந்தில் மேற்படிப்பிற்கு சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் காவெண்டிஷ் ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அங்கே அப்போது பேராசிரியராக இருந்தவர், அணுவின் அமைப்பை முதலில் விளக்கிய நோபல் பரிசு விஞ்ஞான மேதை, எர்னஸ்ட் ரூதர்போர்டு

அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் போர்ன்  என்பவர்  ஓப்பன்ஹைமரை காட்டிங்கன் பல்கலைக் கழகத்திற்கு வரும்படி அழைத்தார். மாக்ஸ் போர்ன் கதிர்த்துகள் யந்திரவியலில் சிறப்பாக ஆராய்ச்சிகள் செய்து, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை. அங்கே விஞ்ஞான மேதைகள் நீல்ஸ் போர், பால் டிராக் , என்ரிகோ பெர்மி , வெர்னர் ஹைசன்பர்க் , ஜேம்ஸ் பிராங்க் , யூஜீன் விஞ்னர் ஆகியோருடன் ஆய்வுகள் செய்து பழகும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அவர்களில் பலர் பின்னால் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து, ரகசிய மன்ஹாட்டன் திட்டமான அணு ஆயுதப் படைப்பில் சேர்ந்து ஒப்பன்ஹைமரின் கீழ் பணியாற்றினார்கள்.

ஓப்பன்ஹைமர் ஜெர்மனியில் மாக்ஸ் பார்னுடன் ஆராய்ச்சிகள் செய்து,  துகள்களின்  மோதல்களை விளக்கி ‘மோதல் நியதி ‘ ஒன்றை எழுதி, 1927 இல் தனது 23 வயதில்   Ph.D. பட்டம்  பெற்றார். அதன் பின் 1929 இல் அமெரிக்கா  திரும்பி, கலிபோர்னியா பொறியியல் கூடத்திலும் , கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  

இந்தக் காலங்களில்தான் ஓப்பன்ஹைமர் பல முக்கிய விஞ்ஞானப் படைப்புகளை வெளியீடு செய்தார். குறிப்பாக கதிர்த்துகள் யந்திரவியல் , அணுவியல் கோட்பாடு ஆகிய பெளதிகப் பகுதிகளில் தனது புதிய  கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அவர் எழுதிய  ‘விஞ்ஞானமும்   புரிதலும் ‘ , ‘மின்னியல் சொற்பொழிவுகள் ‘ என்று பெயர் பெற்றது. 1940 ஆம் ஆண்டு  குடும்ப வாழ்க்கையில் நுழைந்த ராபர்ட் ஓப்பன்ஹைமருக்கு  காதிரைன் என்னும் மனைவியும் இரு குழந்தைகளும் உண்டு. 

அமெரிக்காவில் முதல் அணு ஆயுதச் சோதனை

1939 இல் ஹிட்லர் போலந்தை கைப்பற்றியதும், ஐரோப்பாவிலிருந்து ஓடிவந்த முப்பெரும் ஹங்கேரியன் விஞ்ஞானிகள் லியோ ஸிலார்டு , எட்வர்டு டெல்லர் , யூஜின் விக்னர்  போன்றவர்கள்  உலகப் புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  கையொப்பமுடன் ஒரு கடிதத்தை, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்கு அனுப்பினர்.  ஹிட்லர் அணு ஆயுதத்தை தயாரித்து உலகை அழிப்பதற்கு  முன்னர் அமெரிக்கா அணு ஆயுதத்தை உருவாக்கி இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த வேண்டும் என  அக்கடிதத்தில் எழுதியிருந்தது.  உடனே மன்ஹாட்டன் மறைமுக திட்டம் உருவாகி, அதற்கு ராணுவத் தளபதியாக லெஸ்லி குரூஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடைய அறிவியல் ஆலோசகராக  ராபர்ட் ஓப்பன்ஹைமர் நியமிக்கப் பட்டார்.  மன்ஹாட்டன் அணு ஆயுதப் பணிக்கு அறுபதுக்கும் மேற்பட்ட அமெரிக்க, பிரிட்டிஷ், கனடா நாடுகளின் அரும்பெரும் விஞ்ஞான மேதைகள் அழைத்து வரப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மன்ஹாட்டன் திட்டம் உருவாகி அழிவுக்கும், ஆக்கத்திற்கும் வழி வகுத்த அணு யுகம் உதயமானது, மாபெரும் ஓர் ஒப்பற்ற விஞ்ஞான சாதனையாக கருதப்படுகிறது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஒரே சமயத்தில் அணு ஆயுத ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டன.  முப்பெரும் தளங்கள் W,X,Y என்னும் மறைவுப் பெயர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன. யாவரையும் ஓரிடத்திலிருந்து கண்காணிக்க மறைவு தளம் Y, லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவில் குறிக்கப்பட்டது.  டென்னஸி மாநிலத்தில் ஓக் ரிட்ஜ் ஆராய்ச்சித் தொழிற்கூடங்களில் இரண்டு தளங்கள் W & X நிர்ணயமாயின.  அணு ஆயுதப் படைப்பிற்கு நான்கு முக்கிய பணிகள் நிறைவேற வேண்டும். முதலில் அணுப்பிளவு நிகழ்த்தத் தேவையான அளவு யுரேனியம் 235 தயாரிக்க வேண்டும்.  இயற்கை யுரேனியத் தாதுவில் மிகச் சிறிய அளவு <0.714%> இருக்கும் யுரேனியம் 235 உலோகத்தை   வாயுத் தளர்ச்சி முறையில் சேர்த்து மின்காந்தக் களத்தில் பிரித்து பிரித்தெடுக்க வேண்டும்.

இந்தப் பணியை அமெரிக்க விஞ்ஞானி எர்னஸ்ட் லாரன்ஸ் , ஆஸ்திரேலிய விஞ்ஞானி மார்க் ஒலிபன்ட் இருவரும் தளம் X இல் 440 மில்லியன் டாலர்  செலவில்  முடித்தார்கள். இரண்டாவது பணி அணு உலையில் நியூட்ரான் கணைகள் கொண்டு இயற்கை யுரேனியத்தை தாக்கி புளுடோனியம் 239 உலோகத்தை உண்டாக்கிப் பிரித்தெடுக்க வேண்டும்.

இந்தப் பணியை கெலென் சீபோர்க் குழுவினர் 500 மில்லியன் டாலர் செலவில் செய்து  புளுடோனியம் 239 தயாரித்தார்கள். மூன்றாவது பணி சிகாகோவில் முதல் ஆய்வு அணு உலையை அமைத்து 1942 டிசம்பர் 2 இல் முதல் அணுக்கரு தொடரிக்கத்தை இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ பெர்மி வெற்றிகரமாகச் செய்து காட்டினார். நான்காவது பணி அணுகுண்டு சோதனை.  20 கிலோ டன் TNT அழிவாற்றல் உள்ள முதல் அணுகுண்டு தயாராகி 1945 ஜூலை 16 இல் நியூ மெக்சிகோ அலமொகாட் ரோவுக்கு அருகில் வெடிப்புச் சோதனையை வெற்றிகரமாக முடித்தது.  நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டு வெடித்த இடம் ‘டிரினிடி ‘ என்று அழைக்கப் பட்டது!

புளுடோனியம் தயாரிப்பதில் மாபெரும் சிரமங்கள் இருந்தன.  புளுடோனியம் இயற்கையாகப் பூமியில் கிடைப்பதில்லை! அந்த உலோகம் அணு உலைகளில் தான் உண்டாக்கப்பட வேண்டும்.  ஒரு டன் <1000 kg> இயற்கை யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் அடித்து அதன் அணுக்கருக்களைப் பிளந்தால், சுமார் 100 கிராம் புளுடோனியம் 239 கிடைக்கிறது. அத்துடன் தீவிரமாகத் தீங்கிழைக்கும் 10 மில்லியன் கியூரி காமாக் கதிரியக்கமும் எழுகிறது.  ஆதலால் புளுடோனியம் பிரித்தெடுக்க தூரக் கையாட்சி முறைகளைக் கையாள வேண்டும்.  யுரேனியம் 235 உலோகம் இயற்கை யுரேனியம் தாதுக்களில் மிகச் சிறிய அளவு <0.714%> பூமியிலேயே கிடைக்கிறது.

ஜப்பானில் உண்டான அணுயுகப் பிரளயங்கள்!

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் அணு ஆயுதச் சோதனை முடிந்து சரியாக 21 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டது.  எனோலா கே B29 வெடி விமானத்தில் கொண்டு சென்ற ‘லிட்டில் பாய் ‘ என்னும் யுரேனியம் அணுகுண்டு விழுந்து உலகில் முதல் பிரளயம் உண்டானது.  அடுத்து மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி ‘ஃபாட் மேன் ‘ என்னும் புளுடோனியம் அணுகுண்டு நாகசாகியில் போடப்பட்டு இரண்டாம் பிரளயம் உண்டானது. ஹிரோஷிமாவில் நொடிப் பொழுதில் 80,000 பேருக்கும் மேலாக வெடிப்பிலும், தீப்புயலிலும், அதிர்ச்சியிலும், கதிரியக்கத்திலும் தாக்கப்பட்டு  மாண்டனர்.   அடுத்து 135,000 பேருக்கும் மேல் படுகாயமுற்று செத்துக் கொண்டு, சாவை எதிர் பார்த்துக் கொண்டும் துடித்தனர்.  அடுத்து நாகசாகியில் 45,000 பேர் மாண்டு, 64,000 பேர் படுகாயப் பட்டனர் என்று 1946 ல் கணக்கிடப்பட்டது.

ஜப்பானுக்குச் சென்ற  ‘அமெரிக்க வெடி வீச்சுத் திட்டப் பதிவுக்குழு ‘ 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள் ‘  பல்வேறு விதமாக பட்டியலிடுகின்றனர்.  முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழ்ந்த மித மிஞ்சிய மரண எண்ணிக்கை. அடுத்து   முதலில் அளவற்ற வெப்பம்.  இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்.  மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்.  பாதிக்கப் பட்டவர்களில்  20-30 %  பேருக்கு தீக்காய மரணங்கள்.  அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் 50-60 % மரணங்கள்.   15-20 %  பேருக்கு கதிரியக்கக் காய்ச்சல் பாதிப்பு . இவற்றில்  மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல். கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாக பல்லாண்டுகள் பாதித்துக் கொண்டே இருக்கும். பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்கஹீனமாக பிறக்கும். மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கையை அதிகரிக்கும்.

ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஜப்பானில் விளைந்த கோர மரணங்களைப் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். ஹிரோஷிமா, நாகசாகி மரண விளைவுகளுக்கும், கடும் கதிரியக்கத் தாக்குதலுக்கு காரணமான தான் ஒரு குற்றவாளி என்று மனசாட்சி சொன்னதால்  மனப் போராட்டத்தில் வேதனையுற்றார்.  அணு குண்டுகள் போட்டு இரண்டு மாதங்கள் கழித்து, 1945 அக்டோபர் 16 ஆம் தேதி லாஸ் அலமாஸ் அணு ஆயுதக் கூடத்தின் ஆணையாளர் பதவியிலிருந்து, ஓப்பன்ஹைமர் காரணம் எதுவும் கூறாமல் திடீரென விலகினார்.

பல்லாண்டுகள் முயன்று இமயத்தின் சிகரத்தில் ஏறியவர் அங்கேயே தங்கி இருக்க முடியாது. உச்சியை அடைந்த பின் ஒருவர் கீழே இறங்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது.  ஓப்பன்ஹைமர் 1945 நவம்பரில் தான் முன்பு வேலை பார்த்த கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். 1946 இல் ஐக்கிய நாடுகளின் அணுசக்திப் பேரவையின் அமெரிக்க ஆலோசகராக பணியாற்றினார். 1947 இல் ஓப்பன்ஹைமர் பிரின்ஸ்டன் மேற்துறை விஞ்ஞானக் கூடத்தின் ஆணையாளராக  நியமிக்கப் பட்டார்.  1947-1952 ஆண்டுகளில் அமெரிக்க அணுசக்திப் பேரவையின்  தலைவரானார்.

அந்தச் சமயத்தில் ரஷ்யா புளுடோனியம் பயன்படுத்தி, 1949 செப்டம்பர் 3 இல் தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.  1947 இல் ரஷ்யக் குழுவினர் இகோர் குர்சடாவ் தலைமையில், ரஷ்ய அணுவியல் மேதை பீட்டர் கபிட்ஸா , அமெரிக்காவில் என்ரிகோ பெர்மி செய்து காட்டிய அணுக்கருத் தொடரியக்கத்தைத் தானும் ரஷ்யாவில் செய்து முடித்தார்.  முக்கியமான ரகசியம் என்ன வென்றால், 1942-1945 ஆண்டுகளில் லாஸ் அலமாஸ் மறைமுக இடத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும், சோவியத் உளவுத் தொடர்பு மூலம் ரஷ்யாவில் உள்ள பீட்டர் கபிட்ஸாவின் மேஜைக்கு வந்தடைந்தன.

1953 டிசம்பர் 21 ஆம் தேதி ஓப்பன்ஹைமருக்கு எதிராக அமெரிக்க ராணுவ உளவாளிகள் ஓர் ஒற்று மனுவைத் தாக்கல் செய்தனர். அமெரிக்க அணுசக்திப் பேரவையின் அதிபதியாக இருந்த சமயத்தில், அமெரிக்கா 1949 அக்டோபரில் திட்டமிட்ட ஹைடிரஜன் குண்டு தயாரிப்பை  இவர்  நிராகரித்தார்.  அது அவர் செய்த முதல் குற்றம்.  சென்ற காலங்களில் ஓப்பன்ஹைமர் பொதுவுடமைத் தோழர்களோடு நட்பு கொண்டிருந்ததாகவும், அதைப் பற்றிக் கேட்கும் போது, சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுத உளவு செய்த ஒற்றர்களின் பெயரை தருவதில் அவர் காலம் கடத்திய தாகவும் பழி சுமத்தப் பட்டார்.  அது அவர் செய்த இரண்டாவது குற்றம்.  ஒரு காலத்தில் ஓப்பன்ஹைமர் பொதுவுடமைக் கட்சிக்கு அன்பளிப்பு பணம் தந்து கொண்டிருந்தார்.  அடுத்து ஒரு சமயம், அவர் ஹாகன் செவலியர் என்னும் பொதுடமைத் தோழருக்கு சோவியத் இடைநபர் மூலம் கதிரியக்க ஆய்வுக்கூடம் பற்றி தகவல் அனுப்பியிருக்கிறார்.  அத்துடன் லாஸ் அலமாஸ் திட்டத்தில் கம்யூனிஸ்டுகள் வேலை செய்ய வாய்ப்புகள் அளித்தார்.  ராபர்ட் ஓப்பன்ஹைமர் தனையனும், அவரது மனைவியும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்கனவே 1930 முதல் உறுப்பினராக சேர்ந்து உள்ளவர்கள்.  மேலும்  இவரது  மனைவி காதிரைனும், அவளது பழைய கணவனும் பொதுடமைக் கட்சியின் அங்கத்தினராக இருந்தவர்கள்.   அமெரிக்க ராணுவ உளவாளிகளுக்கு  ஓப்பன்ஹைமர் பொதுவுடமைத் தோழன் என்று நிரூபிக்க  பல காரணங்கள் கிடைத்தன.

உடனே அமெரிக்கா அணுசக்திப் பேரவை  தலைவர் அதிபதிப் பதவியை பிடுங்கி, ஓப்பன்ஹைமரை அரசாங்கப் பங்கெடுப்புகளிலிருந்து அகற்றியது.  1954 ஏப்ரல் 12 ல் அமெரிக்க அணுசக்திப் பேரவையின் பாதுகாப்புக் குழு ஓப்பன்ஹைமர் மீது அரசியல் வழக்கு  தொடர்ந்தது. தொடர்ந்து, விசாரணை ஆரம்பமானது.  1954 மே மாதம் 6 ஆம் தேதி விசாரணை முடிவில்  ‘நாட்டுத் துரோகி ‘ என்று குற்றம் சாட்டப் படாமல், ‘பாதுகாப்பு முறையில் நம்பத் தகுதியற்றவர்’ என்ற  நமக்காரணத்தையும்  விஞ்ஞான மேதை ஓப்பன்ஹைமருக்கு அமெரிக்க அரசு  சூட்டியது.  அந்த அபாண்டப் பழியை எதிர்த்து, அமெரிக்க விஞ்ஞானிகளின் ஐக்கிய சபை அவருக்குப் பக்கபலமாக இருந்து, பேரவைக்கு கண்டனம் தெரிவித்தது.

இரண்டாம் உலகப் போர் நெருக்கடியில் பன்னாட்டு விஞ்ஞான மேதைகளைப் பணிபுரிய வைத்து, சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உண்டாக்கிப் பந்தயத்தை ஆரம்பித்த ஓப்பன்ஹைமர்  பல்வேறு வகைகளில்  அவமதிக்கப் பட்டாலும், உலக வரலாற்றில் அவருக்கு ஓர் உன்னத இடம் நிச்சயமாக உள்ளது.  உலகில் ஊமைப் போர் சற்று குளிர்ந்து போனதும், ஓப்பன்ஹைமரின் மதிப்பு மறுபடியும் தலை தூக்கியது.  அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் ஓப்பன்ஹைமரின் உன்னத போர்த்துறை விஞ்ஞானப் பணிக்கு 1963 டிசம்பர் 2 இல் அமெரிக்காவின் மதிப்பு மிக்க ‘என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தை’ அளித்து அவரைப் போற்றினார். ‘நீங்கள் இந்த தேசத்தில் நீண்ட காலமாய் விஞ்ஞான மேன்மைக்கு செய்த சாதனைகளுக்கு, இப்பரிசு அளிக்கப் படுகிறது. விஞ்ஞான அடிப்படைப் பணிகளை நீங்கள்  செய்த  பங்கு, உங்கள் சாதனைகளை உலகில் ஒப்பில்லா நிலைக்கு உயர்த்தியுள்ளது’, என புகழ் மாலை சூட்டினார் அவர். 

இதன் மத்தியில் நீண்ட காலம் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால்  புற்று நோயால் பாதிக்கப் பட்டார் ராபர்ட் ஓப்பன்ஹைமர். இதை தொடர்ந்து  தனது 63 ஆவது வயதில் மனப் பிறழ்ச்சி நோயுடன் கழுத்துப் புற்று நோயால்  பாதிக்கப் பட்டு  பிரின்ஸ்டன் நியூ ஜெர்ஸியில் 1967 பிப்ரவரி 18 ஆம் தேதி காலமானார். ஜப்பானில் முதன் முதலாக போடப் பட்ட  அணுகுண்டுகளே, உலகின்  கடைசி அணுகுண்டுகளாக இருக்கட்டும் என்று தனது  இறுதி  நாட்களில்  ராபர்ட் ஓப்பன்ஹைமர் புலம்பியதாகவும் ஒரு தகவல் உண்டு. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment