காரைக்குடி அருகே குன்றக்குடி வளைவில் ஆத்தங்குடி சாலையில் செல்லும் பொழுதே இரு புறங்களிலும் நம்மை வரவேற்பது சிறிய பூ பெரிய பூ போட்ட ஆத்தங்குடி டைல்ஸ் தான். குடிசைத் தொழிலான ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பில் நேரடியாக 1000 பேரும் மறைமுகமாக 5000 பேரும் பலன் பெறும் ஆத்தங்குடி டைல்ஸ் குறித்த செய்தி தொகுப்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது ஆத்தங்குடி என்ற கிராமம். இங்கு எங்கு பார்த்தாலும் வாரி மண்ணால் உருவாக்கப்பட்டுள்ள டைல்ஸ் விற்பனை என்ற பதாகையை நாம் காண முடியும். இங்கு உள்ளவர்களுக்கு இது குடிசைத் தொழிலாக அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொழிற்சாலைகளாக ஆத்தங்குடி டைல்ஸ்சை உருவாக்கி தமிழக மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
காலையில் 6 மணிக்கு தொடங்கும் பணி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஆத்தங்குடி பகுதியில் கிடைக்கக்கூடிய வாரி மணலை சலித்து பதப்படுத்தப்பட்டு பிறகு அதனோடு டைல்ஸ் செய்வதற்கான சேர்மங்களை சேர்த்து உருவாக்கப்படுகிறது. உலகளாவிய இயந்திரங்கள் கொண்டு பலவிதமான தொழில்கள் செய்யப்பட்டாலும் ஆத்தங்குடி டைல்ஸ் இன்றுவரை மனிதர்களின் கைகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்த ஆத்தங்குடி டைல்ஸ் வாரி மண்ணில் உருவாக்கப்பட்டு கண்ணாடி பேழையில் வைத்து தேவையான அளவிற்கு மண் கலவையை ஊற்றி காய வைத்து பிறகு 10 நாள் முதல் 15 நாள் வரை நீரில் ஊறவைத்து அதன் பிறகு கவனமான முறையில் கண்ணாடி தனியாக டைல்ஸ் தனியாக பிரிக்கப்பட்டு மீண்டும் அதை பயன்படுத்தும் விதத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு பிறகு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆத்தங்குடி டைல்ஸ் சிறிய பூ, பெரிய பூ ,பறவைகள் போன்ற வடிவங்களுக்கு இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள வண்ணங்களை பயன்படுத்தி டிசைன் செய்யப்படுகிறது.
இது குறித்து ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி கூறியபோது, கிடைக்கக்கூடிய ஆர்டர்களுக்கு ஏற்ப அளவுகளை எடுத்துக்கொண்டு எங்கள் பகுதியில் கிடைக்கும் வாரி மண்ணை எடுத்து முறைப்படுத்திக் கொண்டு காலை 6 மணிக்கு தொழிற்சாலைக்கு வந்து விடுவோம். சிமெண்ட் மணலோடு சில சேர்மங்களை சேர்த்து இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. முதலில் மணலை சலித்து பிறகு அதற்கு ஏற்ப பதப்படுத்தி சிமெண்ட் போன்றவற்றை சேர்த்து எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் டிசைன்களை வைத்து நாங்கள் இதை உருவாக்குவோம்.
பிறகு 10 நாளில் இருந்து 20 நாள் வரை நீருக்கு அடியில் இந்த டைல்ஸ் கல்லை வைத்து விடுவோம். பிறகு 20 நாளிலிருந்து 25 நாள் அடுத்த முறைக்கு நாங்கள் அதை எடுத்து செல்வோம். இப்படியாக குறைந்தது 100 முதல் 200 டைல்ஸ் கற்களை எங்கள் கைகளால் மட்டுமே செய்கிறோம். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் இன்றைய நிலையில் மிஷின்கள் வந்துவிட்டது. ஆனால் நாங்கள் இன்று வரை எங்களது முன்னோர்கள் எப்படி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களோ அதன்படி கையில் மட்டுமே செய்கிறோம். அதனால் தான் அதனுடைய தரமும் அதனுடைய தன்மையும் மாறாமல் இருக்கிறது என்று பெருமிதமாக கூறினார்.
இதுகுறித்து ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியான அலெக்ஸ் கூறுகையில், நாங்கள் எங்கள் தாத்தா காலத்து முதல் அப்பா காலம் தொட்டு இன்றைக்கு நான் இந்த தொழிலை செய்து வருகிறேன். சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆத்தங்குடி பகுதியில் கிடைக்கக்கூடிய வாரி என்ற வகையைச் சேர்ந்த மண்ணை வைத்து தான் நாங்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகிறோம். எங்கள் அப்பா காலத்தில் சிறிய பூ அளவிலான டைல்ஸ்களை செய்து வந்தோம். அதன் பிறகு சற்று பெரிய டயல்ஸ்களை என் காலத்தில் உருவாக்கி செய்து வருகிறோம்.
ஆத்தங்குடி டைல்ஸுக்கு இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலத்தில் குளுமையாக இருக்கும். இதனால் கால் வலி மற்றும் உடல் உபாதைகள் வருவது தடுக்கப்படும். அதே நேரத்தில் மண்சார்ந்து இதை உருவாக்குவதால் எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை ஆத்தங்குடி டைல்ஸ் ஆனது வழுக்கவோ அல்லது நிறம் மங்குவதோ கிடையாது. இதற்கென்று பிரத்யோகமாக எந்த ஒரு பவுடரோ கெமிக்கலோ வைத்து இதை சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் உற்பத்தி செய்கிற இந்த டைல்ஸ் வெளி மாநிலங்களுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதேபோல் எந்த ஒரு வாடிக்கையாளரும் தங்களது வீடுகளில் டைல்ஸ் ஆர்டர் செய்தால் அவர்களுக்கு நாங்களே சென்று பதித்து தருகின்றோம் இதனால் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை ஆத்தங்குடி டைல்ஸ் பெற்றுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசு புவிசார் குறியீடு வழங்கினால் இன்னும் ஊக்கத்துடன் இத்தொழிலை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார். இத்தகைய சிறப்பு மிக்க ஆத்தங்குடி டைல்ஸ் இன்றளவும் செட்டிநாட்டு கட்டிடக்கலைகளில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.