Advertisment

பொம்மலாட்டம், பொய்கால் குதிரை ஞாபகம் இருக்கிறதா? அழிந்துபோன கலைகளை மீட்டெடுக்க என்ன வழி?

6 மாதங்கள் தான் கலைஞர்களின் வாழ்வாதாரம். 6 மாதத்தில் கிடைக்கும் வருமானத்தை தான் கலைஞர்கள் அடுத்த 6 மாதத்திற்கு தங்களின் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொம்மலாட்டம், பொய்கால் குதிரை ஞாபகம் இருக்கிறதா? அழிந்துபோன கலைகளை மீட்டெடுக்க என்ன வழி?

இளையராஜா தண்டபாணி - கள்ளக்குறிச்சி

Advertisment

கலையும் கலாச்சாரமும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த எழுத்துக்காட்டு. அரசர் காலத்தில் இருந்தே மக்களை மகிழ்விக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது நாட்டுப்புற கலைகள்.நம் முன்னோர்களில் வரலாறு, அவர்களின் வாழ்வியலை பற்றி தெரிந்துகொள்ள பாரம்பரிய கலைகள் பெரிதும் உதவுகின்றன. இதில் மேடை நாடகங்கள் புராண கதைகள், மயிலாட்டம் ஒயிலாட்டம் என பல கலைகள் தமிழரின் வரலாற்றையும் பாரம்பரியத்தயும் பரைசாற்றும் வகையில் உள்ளன.

நமது முன்னோர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த இந்த கலைகள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த காலட்டத்தில்  டிவி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கைக்கு அடக்கமான சாதனங்களால், தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. போகிற போக்கில் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஸ்மார்ட்போன் இருக்கும்போது இந்த கலைகள் எதற்கு என்பதே இப்போதைய தலைமுறை மக்களின் எண்ணமாக உள்ளது.

publive-image

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் தலைவர் காணை சத்யராஜ்

இன்றைய தலைமுறை மக்கள் இது போன்ற நாட்டுப்புற கலைகள் மீது ஆர்வம் காட்டாததால், சில கலைகள் அழிந்துவிட்ட நிலையில், மேலும் பல கலைகள் அழிவின் விளிம்பில் உள்ளது. இதன் காரணமாக நாட்டுப்புற கலைஞர்கள் பலரும் தங்களது தொழிலை மாற்றிக்கொண்டு வரும் சூழலில், வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அழிவின் விளிம்பில் உள்ள நாட்டுப்புற கலைகளை மீட்டெக்க அரசு உதவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் தலைவர் தமிழக அரசு விருது பெற்ற காணை சத்யராஜ் அவர்களை தொடர்புகொண்டோம்.

நாட்டுப்புற கலைகளுக்கு மக்கள் மத்தியில் இப்போது வரவேற்பு எப்படி உள்ளது?

இடையில் ஒரு 10 வருடங்களுக்கு முன்பு தோய்வு இருந்தது. ஆனால் தற்போது சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது. டிவி, சீரியல் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களால் நாட்டுக்புற கலைக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் பழைய கலாச்சாரம் திரும்பியுள்ளது. நாட்டுப்புற கலைக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் சற்று பாதிப்பு இருந்தாலும் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதே நேரத்தில் அரசாங்கமும் இந்த கலைகளை வளர்க்க கைகொடுக்கிறது. கலைஞர்களுக்கு நிறைய நிகழ்ச்சிகள் கொடுக்கிறார்கள். இப்போதைக்கு நல்ல முன்னேற்றமாக சூழல் உள்ளது.

publive-image

நாட்டுப்புற கலைகளுக்கு வரவேற்பு இல்லதா காலகட்டங்கள் உங்களின் நிலை எப்படி இருந்தது?

10 வருடங்களுக்கு முன்பு பெரிய தோய்வு இருந்தது. தெருக்கூத்து, மேடை நாடகங்கள் எல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. இரவு 11 மணிக்கு தொடங்கினால் காலை வரை நாடங்கள் நடக்கும். இப்போதும் அதே சூழல் தான் உள்ளது. மகாபாரதம், ராமாயனம், நல்லத்தங்காள், அரிச்சந்திரா, இதுபோன்ற புராணங்களை நாடங்களக தெருக்கூத்தகளாக பண்ணும்போது மக்கள் அந்த நேரங்களில் ரசித்தார்கள். ஆனால் இப்போது 2 அல்லது 3 மணி நேரம் நிகழ்ச்சி பார்த்துவிட்டு சென்றுவிடும் பரபரப்பான சூழல் உருவாகிவிட்டது. இருந்தாலும் திருவிழா காலங்களில் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தோய்வுகள் இருந்தாலும் கொரோனாவுக்கு பின் நல்லபடியாக இருக்கிறது.  

திருவிழா நாட்களுக்கும் மற்ற நாட்களுக்கு நீங்கள் சந்திக்கும் வித்தியாசம்?

6 மாதங்கள் தான் கலைஞர்களின் வாழ்வாதாரம். தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை நிறைவு பெற்றுவிடும். விநாயகர் சதூர்த்தி வரை 6 மாதங்கள் நடக்கும் தொடர்ந்து திருவிழா காலங்கள். மாசி மாதத்தில் அம்மன் திருவிழா, பங்குனி மாதத்தில் முருகன் திருவிழா, ஆடி மாதத்தில் மீண்டும் அம்மன் திருவிழா இது போன்று கிராம அளவில் திருவிழாக்கள் நடக்கும். இந்த நாட்களில் மேடை நாடகங்கள், தெருக்கூத்து, நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, பம்பை. உடுக்கை, நிகழ்ச்சிகள் நடக்கும். இது சிறப்பான ஒரு காலமாக இருக்கும்.

publive-image

இந்த 6 மாதத்தில் கிடைக்கும் வருமானத்தை தான் கலைஞர்கள் அடுத்த 6 மாதத்திற்கு தங்களின் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்துகின்றனர். இதை மட்டுமே நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. ஒருசிலர் விவசாய வேலைக்கு சென்றாலும் பலருக்கும் இந்த கலையை விட்டால் வேறு எதுவும் தெரியாது.

காசி தமிழ் சங்க நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து?

அரசாங்கம் அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு எங்களை காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்றார்கள். நாங்கள் எங்கள் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் வரை அனத்து செலவுகளும் மத்திய அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. அங்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அங்கு நமது கலைக்கு அங்கு பெரிய எழுச்சி கிடைத்தது. இந்தி பேசும் மக்கள் மத்தியில் தமிழ் புரியாது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நமது கலைகளை அம்மக்கள் வெகுவாக வரவேற்றார்கள். அந்த பகுதியில் தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்பதே அங்கு சென்றதற்கு பின் தான் தெரிந்தது. ஒரு நாளைக்கு ஒரு அமைச்சர் என்று நிகழ்ச்சிக்கு வந்தார்கள். 30 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாங்கள் 100 பேர் பங்கேற்றோம். எங்கள் நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்றது.

வெளியூர் கலைநிகழ்ச்சிக்கு செல்லும்போது நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள்?

வெளியூர் நிகழ்ச்சிக்கு போகும்போது எங்களுக்கு போக்குவரத்து பிரச்சினைதான் அதிகம். இன்டியூமெண்ட் எடுத்துச்செல்ல முடியாது. இப்போது வேன் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பஸ்ஸை நம்பியே இருக்க வேண்டிய சூழல். அப்போது பஸ்ஸில் எங்களை ஏற்றமாட்டார்கள். இன்டியூமெண்ட் இருந்தால் பஸ்ஸில் கூட்டம் ஏறாது என்று சொல்லிவிடுவார்கள். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை இருந்துள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி போக முடியாமல் பல ஊர்களில் நிகழ்ச்சியை நடந்த முடியாத சூழல் கூட ஏற்பட்டுள்ளது.

publive-image

இது தொடர்பான அரசிடம் கோரிக்கை வைத்துள்ளீர்களா?

இது குறித்து அரசிடம் பல தீர்மானங்கள் கொடுத்திருக்கிறோம். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். தமிழக அரசு கலைத்துறைக்காக நிறைய செய்கிறார்கள். ஆனால் அரைக்கட்டணம் கொடுக்கிறார்கள். வெளியூர்களுக்கு தொலைவில் செல்ல வேண்டும் என்றால் முன்னாடியே ஆபீஸ்க்கு சென்று ஆதார் கார்டு கொடுத்து அனுமதி வாங்கினால் அரை கட்டணத்தில் பயணிக்கலாம். இதற்கு 2-3 நாட்கள் காலதாமதம் ஆகும் என்பதால் இதை யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை. நாங்கள் கேட்பது முழுமையான கட்டண குறைப்பு.

தமிழக அரசின் கலைபண்பாட்டுத்துறை சார்பாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளனர். அதேபோல் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 60 வயதை எட்டியவுடன் ரூ3000 ஓய்வூதியம் கொடுக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊக்கத்தொகையை வாங்குவதற்கு கலைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 50 வயதிற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் 60 வயதிற்கு மேல் ஓய் ஊதியம் கொடுக்கிறார்கள் இதனால் ஓய்வூதியத்தின் வயதை குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். அடையாள அட்டை கொடுக்கும்போது அனைத்தையும் சரிபார்த்துவிட்டு கொடுக்கிறார்கள். அதன்பிறகு ஓய்வூதியம் பெறுவதற்காக விண்ணப்பிக்க சென்றால் பல சான்றிதழ்கள் கேட்டு 2 வருடத்திற்கு மேல் காலதாமதம் ஆகிறது. இந்த ஊதியத்தை வாங்குவதற்குள் பலர் இறந்துவிடுகிறார்கள். இதை எளிமைபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். பெண் கலைஞர்களுக்கும் ஓய்வூதிய வயதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

publive-image

நலவாரியம் இருக்கிறது. ஆனால் அது செயல்படுகிறதா என்பது தெரியவில்லை. ஒரு கலைஞர் இறந்துவிட்டால் ரூ25000 ஈமச்சடங்கிற்காக கொடுப்பார்கள். ஆனால் கடந்த 3 வருடங்களாக எந்த கலைஞருக்கும் அதை கொடுக்கவில்லை. நலவாரியத்தில் ஃபண்ட் இல்லை என்று சொல்கிறார்கள். கண் கண்ணாடி, குழந்தைகளுக்கு கல்விச்செலவு என பல திட்டங்கள் உள்ளது. ஆனால் இந்த திட்டங்கள் நடைமுறையில் இல்லை. நலவாரியம் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை.

நிகழ்ச்சி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து உங்கள் கருத்து?

குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குதான் இது மாதிரியான கட்டுப்பாடுகள். ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு தான் அதிகம் கட்டுப்பாடுகள் உள்ளது. ஒருசிலர் நாடகம் என்ற பெயரில் ரொம்ப ஆபாசமாக செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரை இது போன்ற நிகழ்ச்சிகள் கிடையாது. ஆனால் தெற்கில் மதுரை திருநெல்வேலி வரை இது மாதிரியான சில நிகழ்வுகள், கரகாட்டம், நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளில் க்ளாமராக நிறைய நடக்கிறது. அவர்களுக்காக மட்டும் இந்த கட்டுப்பாடுகள். தெருக்கூத்து, ராமாயணம் மகாபாரதம் உள்ளிட்ட் புராணங்களை பண்றவங்களுக்கு இந்த மாதிரியான தடைகள் இல்லை.

நாட்டுப்புற கலைகள் வரவேற்பு இருந்த காலகட்டத்திற்கும் – தற்போதைய காலக்கட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?

அன்றைய காலகட்டத்தில் மக்கள் குறைவாக இருந்தால் நிகழ்ச்சிகள் முடியும் வரை இருந்து பார்ப்பார்கள். மகாபாரதம், ராமாணயம் போன்ற புராணக்கதைகள் எல்லாம் நாடகம் முடிந்த பின்பும் மக்கள் அங்கிருந்து செல்லாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது தலைமுறைகள் மாறியுள்ளது. இப்போது இருக்கும் தலைமுறைகளுக்கு ராமாயணம் மகாபாரதம் என்றால் என்ன என்பது தெரியவில்லை. இனிமையான பழைய பாடல்கள் கல்யாண வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது வர பாடலும் புரியவில்லை. இன்ஸ்யூமெண்ட சத்தம் மட்டும் தான் கேட்கிறது.

publive-image

அதேபோலத்தான் அப்போது இருந்த தலைமுறை நாடகத்தை ரசித்து பார்த்தார்கள். ஆனால் நாடகம் தொடங்கும்போது 500 பேர் இருந்தால் நடுவில் ஒரு சில மணி நேரம் கழித்து பார்த்தால் 100 பேர்தான் இருக்கிறார்கள். அவர்களின் வேலையும் அதன் சூழ்நிலையும் தான் இதற்கு காரணம்.

இப்போதைய தலைமுறை மக்களுக்காக நீங்கள் எதாவது மாற்றம் செய்துள்ளீர்களா?

நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். நேரத்தை குறைத்துள்ளோம். உடை, டைலாக், பாடல்கள் என அனைத்தையும் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தார்போல் மாற்றங்கள் செய்துள்ளோம். அதேபோல் மெட்டு ராகம் கூட மாற்றம் செய்திருக்கிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதம் கலைஞர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் கலைஞர்கள் இல்லாத கிராமமே கிடையாது. ஆனால் அவர்களிடத்தில் விழிப்புணர் இல்லை என்பதால் அரசு அடையாள அட்டையில் 50 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். நாங்கள் எங்கள் சங்கத்தின் மூலம் கலைஞர்களுக்கு அரசு அடையாள அட்டை வாங்குவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

நலிவடைந்துள்ள நாட்டுப்புற கலையை மீட்டெடுக்க அரசு தரப்பில் என்ன செய்ய வேண்டும்?

இந்த நாட்டுப்புற கலையை மீட்டெடுக்க அரசு எங்களை போன்ற கலைஞர்களை அழைத்து  கலையை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால் நிர்வாகத்தில் கலையை பற்றி தெரியாத அதற்கு தொடர்பில்லாதவர்களை அதிகாரிகளின் ஆலோசனை நடத்தி சில திட்டங்கள் வருகிறது. மாநில அளவில் அந்தந்த கலையில் சிறந்தவர்களை அழைத்து பேசி உங்கள் கலையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்து கலையை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும். நிறைய கலைகள் அழிந்துவிட்டது. பொம்மலாட்டம் ஒரு காலத்தில் மிக சிறப்பு. ஆனால் இப்போது பொம்மலாட்டம் எங்குமே அதிகம் இல்லை. அதேபோல் பொய்கால்குதிரை இதுபோன்ற அழிந்துபோன் கலைகளை மீட்டெடுக்க அரசு முயற்சிக்க வேண்டும். இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மூலம் அழிந்த கலைகளின் முன்னோடிகளை அழைத்து ஆலோசனை செய்து இந்த கலையை மீட்டெடுக்க முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment