ஆசிரியர்கள் கடவுள்களை உருவாக்குபவர்கள் – ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை

Teachers Day Essay: இப்படிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டாடுவதற்காகத்தான் செப்டம்பர் 5 ஆம் தேதியை தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

Happy Teachers Day Wishes 2018 Wishes
Happy Teachers Day Wishes 2018 Wishes

முனைவர் கமல. செல்வராஜ்

Teachers Day Celebration: சமீபத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, சாதாரண மாணவர்களை எப்படி தலைசிறந்த மாணவர்களாக மாற்றுவது? (HOW TO BRING ZERO TO HERO) என்னும் பொருளில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தும் ஓர் அருமையான வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது.


பயிற்சியின் இறுதியில் ஒரு செயல்முறை விளக்கத்திற்காக, அதில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்களைப் பல்வேறுக் குழுக்களாகப் பிரித்து, அக்குழுக்களிடம் அடியேன் எடுத்துச் சென்றிருந்த வண்ணம் கலந்தக் களிமண்ணைக் கொடுத்து ‘நாளை உங்களிடம் ஒன்றும் தெரியாத, எதற்கும் தகுதியற்ற, இந்தக் களிமண்ணைப் போன்ற மாணவர் ஒருவர் கிடைத்தால், அவரை எப்படி நீங்கள் மாற்றுவீர்கள் என்பதை ஒரு கற்பனையாகச் செய்துக்காட்டுங்கள்’ எனக் கூறி, அதைச் செய்து முடிப்பதற்காக ஒரு பத்து நிமிடத்தையும் அறிவித்தேன்.

சரியாகப் பத்து நிமிடம் முடிவதற்குள் ஒரு குழுவிலிருந்த ஓர் ஆசிரியர் எழுந்து, அந்தக் குழுவில் இருந்தவர்கள் உருவாக்கியக் கற்பனை மாணவனை என்னிடம் காட்டினார். அதனைப் பார்த்த நான் வியந்து போனேன். ஏனென்றால் அந்தக் கற்பனை மாணவன் ஓர் அருமையான, அற்புதமான விநாயகப்பெருமானாக இருந்தார்.

teachers day essay, teachers day wikipedia, ஆசிரியர் தினம், teachers day speech, teachers day quotes
Teachers Day Essay

ஒரு சில நிமிடங்கள் மௌனமாகிப்போன நான், அந்த ஆசிரியரிடம் கேட்டேன் ‘எந்த நோக்கத்தின் அடிப்படையில் இப்படி விநாயகனாகச் செய்தீர்கள்’ என்று. அதற்கு அவர் அளித்தப் பதில் மேலும் அடியேனை ஆச்சரியப்படுத்தியது. இதோ அந்தப் பதில் ‘சாதாரணமாக இருக்கும் ஒரு கல்லைத்தானே ஒரு சிற்பி, சிறிது சிறிதாகச் செதுக்கிக் கடவுளாக வடிக்கிறார். அந்தக் கல்லைத்தானே பின்னர் அனைவரும் கடவுளாக வணங்குகிறார்கள். அதைப்போன்றுதான் ஆசிரியர்களும் சாதாரண மாணவர்களை, தங்களின் அறிவுத் திறத்தாலும் அனுபவ ஆற்றலாலும் நல்ல திறமைசாலிகளாகவும், சிறந்த பண்பாளர்களாகவும் மாற்றும் போது பிற்காலத்தில், இவர்களும் கடவுளுக்கு நிகராக மதிக்கும் அளவுக்கு மாறுவார்கள்’ என்று விளக்கமளித்தார்.

அப்போதுதான் அடியேனுக்கு, அப்துல்கலாம் அவர்கள் தனது சுயசரிதை நூலான அக்னிச் சிறகுகள் என்னும் நூலில் தமது ஆசிரியரைப் பற்றி எழுதியிருந்த வரிகள் நினைவுக்கு வந்தன. இதோ அந்த வரிகள் அப்படியே இங்கே “இராமேஸ்வரத்தில் வாழ்ந்த சிறிய சமுதாயமோ தனித்தனித் தீவுகளாகப் பிளவுபட்டுக் கிடந்தன. ஒவ்வொரு குழுவினரும் தத்தம் நடைமுறைப் பழக்க வழக்கங்களில் விடாப்பிடியாக இருந்தனர். எனினும் எனது விஞ்ஞான ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் வித்தியாசமானவர். ஆச்சாரமான பிராமணராக இருந்தும் புரட்சிகரமானச் சிந்தனைக் கொண்டவர். அவரது மனவியோ பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்ள விரும்பாதவர். பலதரப்பட்ட பின்னணி கொண்ட மக்களும் இரண்டறக் கலந்து இணக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக சமூகத் தடைகளைத் தகர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார் சிவசுப்பிரமணிய ஐயர். என்னுடன் நீண்ட நேரம் செலவழிப்பார் “பெரிய நகரங்களில் உள்ள மெத்தப் படித்தவர்களுக்குச் சமமாக நீ உயர வேண்டும் கலாம்…” என்று பிரியமுடன் அவர் சொல்லுவார்.” இதுதான் அந்த வரிகள்.

தனது மாணவனை கடவுளாகப் பாவித்த அந்த ஆசிரியரின் வாக்குகளும், அப்துல்கலாம் தனது ஆசிரியர் பற்றி எழுதியுள்ள வரிகளும் எப்படி ஒத்திருக்கின்றன பார்த்தீர்களா?

குடிப்பதற்குக் கஞ்சியும், உடுப்பதற்குத் துணியும், படிப்பதற்குப் புத்தகமும் இல்லாமல் இருந்த அப்துல்கலாமை இத்தேசத்தின் மிக உன்னதமான முதல் குடிமகனாக (ஜனாதிபதியாக) மாற்றியப் பெருமை சிவசுப்பிரணிய ஐயர் என்னும் ஆசிரியரைச் சாரும். இப்பொழுது புரிகிறதா ஒவ்வொரு ஆசிரியரும் தனது மாணவர்கள் பற்றி எவ்வித உன்னதமானக் கற்பனையைக் கொண்டிருக்கிறார் என்று?
இப்படிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டாடுவதற்காகத்தான்
செப்டம்பர் 5 ஆம் தேதியை தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.


ஏன் இந்த நாளை ஆசிரியர் தினமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பின்னணியிலும் ஓர் ஆசிரியர்தான் இருக்கிறார் என்பதும் ஆச்சரியம்தானே? யார் அந்த ஆசிரியர்?

சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், இரண்டாவது ஜனாதிபதியாகவும் உன்னத பதவி வகித்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தான் அவர். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து… வறுமையில் வாடி… படிப்பில் சிறந்து… பண்பில் உயர்ந்து… பல பதவிகள் வகித்து… கல்வியின் தத்துவ வித்தகராகத் திகழ்ந்த அன்னாரின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளைதான் 1962 ஆம் ஆண்டு முதல் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஒரு தலைசிறந்த ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது, அவர் புத்தகத்தில் இருப்பதை கற்பிக்காமல், தனது இதயத்திலிருந்து கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பித்தால் அவர் மாணவர்களின் இதயத்தில் இடம் பிடிப்பார் என்பதுதான் கற்பித்தல் பற்றிய தத்துவ வித்தகர்களின் கருத்து. அக்கருத்துக்கு ஒட்டுமொத்த இலக்கணமாகத் திகழ்ந்தவர்தான் நமது கதாநாயகன் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள்.

தனது இதமான கற்பித்தல் ஆற்றலால், தங்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த தன்னிகரில்லா ஆசிரியரின் பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய சிந்தையோடு தன்னை அணுகிய மாவர்களிடம், எதற்காக எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்? அதற்குப் பதில் அந்த நாளை ஒட்டுமொத்த ஆசிரியர் தினமாகக் கொண்டாடலாமே? என தனது இதயம் கவர்ந்த மாணவர்களிடம் வினவினார் அந்த களங்கமற்ற உள்ளத்திற்குச் சொந்தக்காரர் இராதாகிருஷ்ணன் அவர்கள். அதிலிருந்து தொடங்கியதுதான் இந்த ஆசிரியர் தினம்.

இந்த நாளை வெறும் பெயரளவிலான ஆசிரியர் தினமாகக் கொண்டாடாமல், கற்பித்தலில் தலைசிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணனின் பெயரில் நல்லாசிரியர் என்ற விருதை வழங்கி மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர்களை கௌரவிப்பது போற்றுதலுக்குரியது.

இந்த நன்னாளில் கல்லாகவும் மண்ணாகவும் இருந்த நம்மை நல்ல பண்பாளர்களாக்கி சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக உயர்த்திய, என்றும் அணையா தியாக தீபங்களாகத் திகழும் ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டியது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். களியக்காவிளை கிரேஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Teachers day sarvepalli radhakrishnan birthday teachers day essay

Next Story
ராபிடோ பைக் செயலியில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன?rapido, rapido app, rapido bike app, rapido chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com