திட்டமிடல் என்னும் மந்திரம்

நிதி விஷயங்களில் நல்ல அறிவு, அனுபவம் கொண்ட நண்பர்கள், உறவினர்களின் உதவியையும் நாடலாம்.

ராஜலட்சுமி சிவலிங்கம்

‘இலக்கு இல்லாதவனின் வாழ்க்கை காற்றில் அடித்துச் செல்லப்படும் படகு போன்றது’ என்று சொல்கிறார்கள் அறிஞர்கள். வாழ்க்கைக்கு எப்படி இலக்கு அவசியமோ, அப்படி நமது நிதி சார்ந்த தேவைகளுக்கும் இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை எட்டுவதற்கான திட்டங்களைத் தீட்டி, அதற்கான முறையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

நிதி திட்டமிடுதல் என்பது உங்களுடைய தற்போதய சூழ்நிலையை ஆய்வு செய்து புரிந்து கொள்ளுதலில் தொடங்கி, இது தொடர்பான தகவல்களை சேகரித்தல், குறிகிய மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயித்துப் பின்னர் விவரமான திட்டங்களை முடிவு செய்தலில் முடிகிறது. இதன் மூலம் தற்போதய சூழ்நிலைகளில் எவ்வாறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் எதிர்கால திட்டங்களையும் கையாள முடியும்.

எப்படித் திட்டமிடுவது?

நம்மால் சமாளிக்க முடிகிற மற்றும் காலம், காரணம், சூழல் அனைத்தையும் கருத்தில் கொண்டு இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும். அதை அலசி ஆராய வேண்டும், மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். முன்கூட்டியே திட்டமிடல் அவசியம். வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றோ ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதானே அந்தப் பிரச்சினை, மூன்றாவது ஆண்டிலிருந்து தொடங்கினால் போதும் என்ற மனப்பான்மை கூடாது. ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தயாரான மனப்பான்மை. பணவீக்கம், பங்குச் சந்தை நிலவரங்கள், மற்றும் வட்டி விகிதங்கள் உங்கள் திட்டங்களை பாதிப்பதோடு, உங்கள் கட்டுப்பாட்டிலும் இல்லாதவை. எனவே இது போன்ற எதிர்பாராத திருப்பங்களுக்குத் தயாராக இருங்கள்.

நாம் நமது வாழ்க்கையில் தற்போது இருக்கும் நிலை என்ன என்பதைப் பற்றிய மதிப்பீட்டுடன் தொடங்க வேண்டும். இப்போது கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதற்கான நிதித் திட்டம் ஒன்றை வகுத்து, அதன்படி செயல்படுவது நன்மை பயக்கும். எப்படி ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்னால், அந்தக் கட்டிடத்தின் மாதிரி வரைபடம் ஒன்றை உருவாக்கி, பின்பு அதற்குச் செயல்வடிவம் கொடுக்கிறோமோ, அதேமாதிரி நிதித் திட்டமும் நமது கனவுகளை நனவாக்க உதவி செய்யும்.

பயணம் முதற்கொண்டு எதற்குமே திட்டமிடல்தான் நமக்கு நிம்மதியைக் கொடுக்கிறது. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணம் செய்கிறோம் என்றால், அந்தப் பயணம் பாதுகாப்பாகவும், இனிமையாகவும் அமைய வேண்டும் என்றால் நாம் முன்கூட்டியே சில திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியமாகிறது. ரயில் அல்லது பஸ்ஸில் செல்கிறோம் என்றால், சற்று தொலைதூரம் என்றால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையான இருக்கை அல்லது படுக்கை வசதியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்கால பொருளாதார இலக்குகளை எட்ட சேமிப்பு அல்லது முதலீடு இரண்டில் எது கைகொடுக்கும் என்ற தெளிவும் அவசியம். முதலீடு என்றால், தற்போது நமது வயது என்ன, எதிர்கால நிதி இலக்குகளுக்கு எவ்வளவு ஆண்டுகள் இருக்கின்றன, நம்மால் எந்த அளவு ‘ரிஸ்க்’ எடுக்க முடியும் என்ற தீர்க்கம், துல்லியம் முக்கியம். இதற்கெல்லாம் ஆலோசனை வழங்கக் கூடிய நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள். நமது தேவைகளை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டால், அவர்கள் திட்டம் தீட்டிக் கொடுப்பார்கள்.

நிதி விஷயங்களில் நல்ல அறிவு, அனுபவம் கொண்ட நண்பர்கள், உறவினர்களின் உதவியையும் நாடலாம். பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் அல்லது தள்ளிப்போடும் மனோபாவம் கூடாது. இன்றே உங்களின் எதிர்கால நிதி இலக்குகள் குறித்து யோசித்து, திட்டமிட்டுச் செயலாற்ற ஆரம்பியுங்கள்!

*

×Close
×Close