102 வயது மருத்துவர், ரூ.30 மட்டுமே கட்டணம்: இறக்கும் வரை மருத்துவம் பார்க்க ஆசை

“பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன், இறக்கும் வரை மருத்துவம் பார்க்க ஆசை”, மருத்துவர் பால்வண்ட் காட்பாண்டே

காலையில் எழுந்து வேலைக்கு போவதென்றாலே நமக்கு எப்போதும் ஒருவித அலுப்பு இருக்கும். அப்படியே எழுந்து கிளம்பி அலுவலகத்திற்கு சென்றாலும், அரை மனதுடன் தான் வேலை பார்ப்போம். இளைஞர்களாக இருந்தாலும் சரி, முதியவர்களாக இருந்தாலும் முழுமனதுடன் மனதுக்கு நெருக்கமாக தங்களுடைய வேலையையும் தொழிலையும் பார்ப்பவர்கள் வெகுசிலரே.

ஆனால், புனேவை சேர்ந்த மருத்துவர் பால்வண்ட் காட்பாண்டே என்பவர் வாரத்தின் ஏழு நாட்களும், நாளின் 24 மணிநேரமும் தனது கிளீனிக்கில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டேதான் இருக்கிறார். மருத்துவர் என்றால் அப்படித்தானே இருக்க வேண்டும் என கேட்கிறீர்களா? ஆனால் அவருடைய வயதை அறிந்தால் நீங்கல் வாய் பிளப்பீர்கள். அவருடைய வயது 102. தோல் தளர்ந்து, ஓய்வெடுக்க வேண்டிய வயதில், இன்றளவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் எல்லோரிடமும் கட்டணமாக 30 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதியை அறக்கட்டளைகளுக்கு கொடுத்துவிடுகிறார் இந்த ‘இளம் மருத்துவர்’.

இவர் புனேவின் மிகவும் வயது முதிர்ந்த மருத்துவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

மருத்துவர் பால்வண்ட் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நான் இறக்கும் வரை மக்களுக்கு மருத்துவம் பார்க்கவே விரும்புகிறேன். மருந்தகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே நான் இறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்”, என தெரிவித்தார்.

மேலும், அவர் பேசும்போது, “மருத்துவர் தொழில் ஒரு உன்னதமான தொழில். அதில் மக்களின் மிகப்பெரும் தேவையை நாம் நிவர்த்தி செய்கிறோம். மருத்துவ சேவை பெரும் திருப்தியை அளிக்கும். இந்த மருத்துவப் பணியில் தான் நான் எல்லாவற்றையும் பெற்றேன். எனக்கு இந்த பணி நிதி பாதுகாப்பை அள்த்திருக்கிறது. புகழ், பணம் மற்றும் மக்களின் ஆசீர்வாதம் எல்லாவற்றையும்.”, என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

அவர் தன்னை தொழிலுக்கு அடிமை என கூறுகிறார். ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது அவருக்கு பிடிக்காது. நோயாளிகள் யாரும் வரவில்லையென்றால், மருத்துவம் சார்ந்த இதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்து தன் துறை சார்ந்த அறிவை இன்றளவும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறைகள், தினமும் உடற்பயிற்சி, நல்ல உணவு பழக்கங்கள் ஆகியவை இன்றளவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதற்கான காரணங்கள்.

மருத்துவர் பால்வண்ட் நினைத்திருந்தால் எப்போதோ தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க முடியும். ஆனால், மக்களின் மீது தீராத பாசமும், தன் தொழில் மீதான அளவற்ற காதலும்தான் அவரை இன்றளவும் உழைக்க செய்திருக்கிறது. இன்னும் படித்துபடித்து அறிவை பெருக்க வேண்டும் என்ற தாகமும் அவரிடம் நிறைந்திருக்கிறது.

உழைக்க வேண்டிய வயதில் இருக்கும் இளைஞர்களே, தமது தொழிலை கடமையாக பார்க்கும் வேளையில், தம் தொழிலை சேவையாக இன்றளவும் தொடரும் மருத்துவரின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் சிறந்த உதாரணம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close