பணி ஓய்வுக்குப்பின் டாக்ஸி ஓட்டி மாணவர்களுக்கு உதவும் நல் உள்ளம்

டாக்ஸி ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஸியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.

அன்றாடம் நாம் பேருந்திலோ, ரயிலிலோ, கால் டாக்ஸியிலோ பயணிக்கும்போது நமக்கு அருகில் அமர்ந்திருப்பவர்களின் கதைகளை கேட்டால் அவர்கள் நம்முடைய முன்மாதிரியாக மாறுவதற்கான வாய்ப்புகள் கூட ஏற்படலாம். எத்தனையோ முறை கால் டாக்ஸியில் பயணித்திருப்போம். ஆனால், அதன் ஓட்டுநரிடம் பேச்சு கொடுத்திருப்போமா? அவரிடம் பேசியிருந்தால் அவருடைய முற்கால கதைகள் நமக்கு ஆச்சரியத்தைக் கூட தரலாம்.

ஆம், டெல்லியில் ஜஸ்தேஜ் சிங் என்பவர், ஒருமுறை உபேர் நிறுவன கால் டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருந்தார். ஜஸ்தேஜ் சிங் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் என்பதால், கேஸ் ஸ்டடி எனப்படும் நிகழ்வு ஆய்வு குறித்து தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தனக்கு தான பேசிக்கொண்டு நொந்திருக்கிறார். அப்போது, கால் டாக்ஸியின் 60 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், “ஸ்வாட் அனாலிசிஸ் மூலம் கேஸ் ஸ்டடி மேற்கொண்டால், அதன் முடிவுகள் 5 வருடத்திற்கு மாறாமல் நிலைத்திருக்கும்.”, என கூறியுள்ளார்.

ஜஸ்தேஜ் சிங்கிற்கு ஆச்சரியம். கால் டாக்ஸி ஓட்டுநர் அவ்வளவாக படித்திருக்க மாட்டார் என்பதுதானே நம்முடைய பொதுபுத்தியில் இருக்கும். அதற்கு பிறகு ஜஸ்தேஜ் சிங், அந்த ஓட்டுநரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

அவ்வாறு பேசிய போதுதான், அந்த ஓட்டுநர் பெரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது. அதுமட்டுமல்லாமல், அவருடைய மனைவி மற்றும் மகன் இருவரும் நன்றாக சம்பாதிக்ககூடிய வேலைகளில் பணிபுரிகிறார்கள். ஆனாலும், பணி ஓய்வுக்குப் பின் வேலையே செய்யாமல் ஓய்வெடுப்பதை விரும்பாமல் டாக்ஸி ஓட்டி வருகிறார்.

மேலும், டாக்ஸி ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஸியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.

அந்த ஓட்டுநர் ஜஸ்தேஜ் சிங்கிடம் கல்வி எவ்வாறு சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், இன்ன பிற விஷயங்களைக் குறித்தும் பேசியிருக்கிறார். கடைசியாக, அவர் ஜஸ்தேஜ் சிங்கை தன் வீட்டிற்கும் அழைத்திருக்கிறார். எந்தவொரு உதவியாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை ஜஸ்தேஜ் சிங் தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், “அவருடைய வாழக்கையிலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கை குறித்த நம்முடைய பார்வையை மாற்றிவிடும். பணக்காரனோ, ஏழையோ நம்முடைய நேரத்தை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். வயது ஒரு எண் மட்டுமே. மோர் பவர் டூ எ மேன்”, என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

×Close
×Close