Tirupati Darshan Ticket Booking: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனக் கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவல்களை தேவஸ்தானம் மறுத்திருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, சிறுவானி அறக்கட்டளைக்கு நன்கொடை தருகிறவர்களுக்கு தரிசன முன்னுரிமை உண்டு என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
Advertisment
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். முக்கியமான விசேஷ நாட்களில் பாலாஜி தரிசனத்திற்கு மணிக்கணக்கில் காத்திருக்க நேர்வது வாடிக்கை. எனவே கட்டணம் அதிகமாக இருந்தாலும், பாலாஜி தரிசனத்திற்கான பக்தர்கள் முண்டியப்பது உண்டு.
அண்மையில் விஐபி தரிசன கட்டண முறைகளை நீக்கிவிட்டு, ஆலய அபிவிருத்திக்கான சிறுவானி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குவோருக்கு மட்டும் தரிசனத்தில் முன்னுரிமை வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே விஐபி தரிசன கட்டணத்தை ரூ 20000 அளவுக்கு உயர்த்தி தேவஸ்தானம் முடிவெடுக்க இருப்பதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இது குறித்து தேவஸ்தான செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அப்படி எந்த ஒரு திட்டத்தையும் ரகசியமாக தேவஸ்தானம் செய்வதில்லை. சிறுவானி அறக்கட்டளைக்கு நன் கொடை தருகிறவர்களுக்கு அவர்கள் தரும் தொகையைப் பொறுத்து, ஆயுள் முழுவதும், அல்லது ஒரு நாள் மட்டும் தரிசனத்தில் முன்னுரிமை கொடுக்கும் நடைமுறை உள்ளது’ என்றார்.
சிறுவானி அறக்கட்டளைக்கு லட்சங்களில் ஆரம்பித்து, கோடிகள் வரை பக்தர்கள் கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இந்த நிதி மூலமாகவே வெவ்வேறு இடங்களில் திருப்பதி கோவில்கள் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.