திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட்டுகள் ரூ.300 ஆக தற்போது இருந்து வருகிறது. கோவிலுக்கு இணையதளம் மூலம் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் பல போலி இணையதளங்கள் இயங்கி வருவது தெரிய வந்தது.
இவற்றின் மூலம் தரிசன டிக்கெட்களுக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு, தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாக வந்து தரிசன டிக்கெட்களை வாங்கிக் கொள்ளும்படியோ அல்லது போலி டிக்கெட்களை அனுப்பியோ பக்தர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இது தொடர்பாக பக்தர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பெயரில் போலி இணையதளங்களை தொடங்கி பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கி வந்த 41 போலி இணையதளங்கள் மற்றும் 13 மொபைல் செயலிகளும் அடையாளம் காணப்பட்டு அவை போலீசாரால் முடக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த மோசடி கும்பல் இருக்கலாம் என்றும், இந்த இணையதளங்கள் மூலம் பல கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏழுமலையான் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யலாம்.
இதுதவிர TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியையும் பயன்படுத்தலாம் என்று பக்தர்களை தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“