முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிற்கான ஏற்பாடும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவானது உலகத்தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் வகையில் கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, திருவள்ளுவரின் சிலையை கன்னியாகுமரி கடலின் நடுவே நநிறுவினார். சுனாமி ஆழிப்பேரலை மற்றும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி திருவள்ளுவர் சிலை எந்த ஒரு சேதாரமும் ஏற்படாமல் கம்பீரமாக இன்றைக்கும் காட்சி தந்து கொண்டிருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வியந்து பார்க்கும் அளவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வருகின்ற டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி, திருக்குறள் நூல்கள் அமைக்கப்பட்ட ஒரு கண்காட்சி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கப்பட உள்ளது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் துணை முதலமைச்சர் 10 பேருந்துகளில் அய்யன் திருவள்ளுவர் பற்றிய புகைப்படங்கள் ஒட்டிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.
அதேபோன்று பெரிய பலூன்கள் அனைத்து மாவட்டத்தின் தலைநகரத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் (23.12.2024) அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் திறந்து வைத்து, பார்வையிட்டு குறளுக்கு ஓவியம் வரைந்தவர்களிடம் அது குறித்து கேட்டறிந்து பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் மாதிரி வடிவ சிலை செய்தித்துறையின் சார்பில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் மாதிரி சிலை வடிவத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (28.12.2024) நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான் கவியரசு, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.