டீ-யில் இவ்வளவு பயன்களா? இது தெரியாம போச்சே!

ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கும் அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொண்டால், டைப் 2 நீரிழிவு கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

இந்தியாவில் 72 மில்லியன் சுகர் பேஷண்ட்ஸ் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித் தான் ஆக வேண்டும். உலகில் சர்க்கரை நோயால் (வாய்ல அடிங்க, வாய்ல அடிங்க… அது நோய் இல்ல, இப்போலாம் அதுதான் கெளரவம்) அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு பிரபல ஆய்வு முடிவின்படி, 2030ல் இந்தியாவில் 98 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ‘டைப் 2’ டயபடிஸ் அடுத்த 12 வருடங்களில், உலகம் முழுவதும் 20 சதவிகிதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளில் 90-95 சதவிகிதத்தினர் டைப் 2 நீரிழிவால் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை நீரிழிவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மிக அதிகளவில் அதிகரித்துவிடும். இந்த டைப் 2 நீரிழிவை தற்போது உள்ள மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்பது மற்றொரு அதிர்ச்சி கலந்த உண்மை. இருப்பினும், நமது அன்றாட வாழ்க்கை முறை, சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உடல் எடையை அளவோடு வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகளால் டைப் 2 நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஆனால், நாம் தினமும் பருகும் டீ மூலம் ‘டைப் 2’ சுகர் பேஷண்ட்ஸ், இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது தெரியுமா?

ஆம்! நிச்சயம் முடியும்.

கிரீன் டீ.. சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இந்த கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், அதிகளவு பாலிஃபெனோல்ஸ்(polyphenols) அடங்கியிருக்கிறது. இந்த பாலிஃபெனோல்ஸ், antioxidants-ஆக செயல்பட்டு செல் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது. polyphenols, உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கும் அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொண்டால், டைப் 2 நீரிழிவு கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதயநோய் நிபுணர் Suzanne Steinbaum, “டீ, குறிப்பாக கிரீன் டீ சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது” என்கிறார்.

ஆகவே, உங்கள் குடும்பத்தில் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களில் யாருக்காவது டைப் 2 நீரிழிவு இருந்தால், கிரீன் டீ பார்சல் செய்து அசத்துங்க!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close