வேலூர் ஸ்பெஷல்.. சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும் ஆம்பூர் பிரியாணி!!!

மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான்

வேலூர் என்று சொன்ன உடனே, நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது ஆம்பூர் பிரியாணி.  ஆம்பூரில் தயாராகும் இந்த்ஜ  பிரியாணி உலகம் முழுக்க பிரபலமாகும். சிக்கன், மட்டன், பீப் மற்றும் மீன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு அசைவ உணவாகவே இது பரிமாறப்படுகிறது.

வேலூர் மாவட்டம் இஸ்லாமிய சகோதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவே உள்ளது. அதனாலேயே இந்த பகுதி  பிரியாணிக்கு பெயர் போனதாகவும் மாறியது. ஒவ்வொரு பிரியாணிக்கு ஒவ்வொரு கதை சொல்லவார்கள் நம் முன்னோர்கள். அப்படி, இந்த வேலூர் ஆம்பூர் பிரியாணிக்கும் ஒரு குட்டிக் கதை உள்ளது.

ஆற்காடு நவாப்பிற்காக அவரது அரண்மனையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இந்த பிரியாணி. இதன் செய்முறையால் தான் இதற்கு ஆம்பூர் பிரியாணி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இது தமிழ்நாடு தவிர ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது.

இந்த பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருப்பது பார்ப்பவரின் கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.

இன்று தமிழர்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட உணவு எதுவென்றால் அது பிரியாணி தான். கிராமங்களில் கிடா வெட்டு நிகழ்வில் கூட பிரியாணி இடம் பெறும் அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான். ஆனால், அதேசமயம் அடிக்கடி ஹோட்டல்களில் சென்று பிரியாணி சாப்பிடுவதும் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.

அதனால் தான் வெறும், ஹோட்டல் உணவாக மட்டுமே இருந்த பிரியாணி தற்போது வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை சமைக்கப்படும் உணவாக மாறியுள்ளது. சரி  அப்ப ஆம்பூர் பிரியானியை எப்படி வீட்டிலியே சமைக்கலாம்னு பார்த்திடலாமா???

ஆம்பூர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: 
1. மட்டன் கறி – 1 கிலோ

2.வெங்காயம் – 1/4 கிலோ

3.தக்காளி – 1/2 கிராம்

4.இஞ்சி பூண்டு விழுது

5.பச்சை மிளகாய்

6. எலுமிச்சை

7.நறுமணப்பொருட்கள்

8. தயிர்

9.பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி

10.கடலை எண்ணெய்

11.கொத்தமல்லி – புதினா

12.உப்பு

13. மிளகாய் தூள்

14. கரம்மசாலா தூள்

15.தனியா தூள்

16. சிவப்பு மிளகாய் தூள்

செய்முறை:

1. முதலில், குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும்.

2. பின்பு அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

4. பின்பு, அதில் மட்டனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.

5. இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

6. அதன் பின்பு, மிளகாய் தூள், கரம்மசலா தூள், தனியா தூள், நிறம் தரும் வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

7. பின்னர், தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.

8. இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.

9. இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து , குக்கரை மூடி அதன் ஓரத்தில் ஈரத்துணியை சுட்டி கட்ட வேண்டும்.

10. இப்படியே சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும்.

11. அப்புறம் திறந்து, நெய் தூவி மணக்க மணக்க பரிமாறினால் சுவையான வேலூர் ஸ்பெஷல் ஆம்பூர் பிரியாணி தயார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close