அச்சம் என்பது என்ன?

தன்னம்பிக்கை இன்மை மற்றும் மனத் தடுமாற்றம்தான் இதன் முதல் அறிகுறி.  

ராஜலட்சுமி சிவலிங்கம்

அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. ஆழ்மனதில்  பதிந்துவிட்ட நிரந்தர பயமாக இருக்கலாம். அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பயமாக இருக்கலாம். நம் மூளையில் உள்ள இரு பக்க டெம்பொரல் லோபின் உட்புறம் உள்ள அமிக்டலா என்ற திசுக்கூட்டம்தான் பய உணர்வை வெளிப்படுத்தும் அமைப்பு.  எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுதான் இதன் முக்கியச் செயல்பாடு. தன்னம்பிக்கை இன்மை மற்றும் மனத் தடுமாற்றம்தான் இதன் முதல் அறிகுறி.

அச்சத்தின் வேர்
பயம் என்பது பொதுவாகச் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு நோய் இல்லை. இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது அனைவருக்கும் இன்றியமையாததாக மாறிவிட்டது.

பெற்றோர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். சில சமயம் அலட்சியமான ஆயாக்கள் பராமரிப்பில் இருக்கிறார்கள். ஏன் கொடூரமான ஆயாக்கள்கூட அமைந்துவிடுவதுண்டு. வெளியே நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் பல அசாதாரணமான சூழல்களை எதிர்கொள்கிறார்கள்.

இவற்றை அவர்களால் மறக்கவோ அல்லது அந்த சூழல்கள் தரும் பயத்திலிருந்து வெளிவரவோ முடிவதில்லை. இவற்றைத் தெளிவாக வெளியே கூற முடியாமல், தங்கள் நடத்தையின் மூலம் இவற்றை வெளிப்படுத்துகின்றனர்.
கண்களை அகல விரிப்பது, கண் இமைகளைச் சுருக்குவது, வாய், உதடுகளைச் சுழிப்பது, கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வது இப்படி பல வகைகளிலும் பயம் வெளிப்படுகிறது. அதீத பயத்தால் உடல் தசைகள் விறைப்பாகி வேர்க்கும், உடல் நடுக்கம், படபடப்பு அதிகமாவதால் சில குழந்தைகள் மயங்கி விழுவதும் உண்டு, இவர்களது இதயத் துடிப்பும் அதிகமாகும்.

பெற்றோரிடையே நடைபெறும் சண்டைகள், சாவு, தீவிரவாதத் தாக்குதல்கள், சிலந்திகள், பூச்சிகள், தோல்வி பயம், போர், உயரங்கள், வன்முறை, தனிமை, வருங்காலம் குறித்த பயம், பெற்றோர் விவாகரத்து, விபத்துகள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றினாலும் குழந்தைகளுக்கு பயம் உண்டாகிறது என்று லண்டனைச் சேர்ந்த குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஜீன் இவான்ஸ் கூறுகிறார்.

உனக்கு என்னதான் பிரச்சினை?

சில குழந்தைகள் பயத்தைச் சமாளிக்க அன்பாக பேசும் வெளிநபர்களின் வலைக்குள் விழுகிறார்கள். வேறு சிலரோ தனக்குள் சுருங்கிப்போதல், வீடியோ கேம்கள், ஆல்கஹால், போதைப் பொருள்களுக்கு அடிமையாகிறார்கள். ‘உம் மனசில என்னதான் இருக்குன்னு சொல்லித் தொலையேன். எனக்கோ அப்பாக்கோ டைமே இல்ல, இதுல நீ வேற பைத்தியம் பிடிச்சா மாதிரி நடந்துக்கிறயே?” என்பன போன்ற அணுகுமுறைகளால், குழந்தைக்கு ஏற்கெனவே இருக்கும் பயங்களோடு, உங்களிடமும் பயம் சேர்ந்துகொள்ளும்.

மனதில் தோன்றும் பிரச்சினையை மன உறுதியுடனும், பெற்றோர் துணையுடனும் எதிர்கொண்டு செயல்படலாம், தனிமையில் இருப்பதைத் தவிர்க்கலாம், அப்படித் தனிமையில் இருக்கும்போது நல்ல பாடல்களைக் கேட்பது அல்லது சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களைப் படிப்பது எனப் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டால், தனிமை ஓடியே போய்விடும்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

அவர்களோடு உட்கார்ந்து, ‘எனக்கு உன்ன பத்தி கொஞ்சம் கவலையா இருக்கு. ஏதோ உனக்கு ஏதோ பிரச்சினைன்னு நெனக்கிறேன், அம்மாகிட்ட / அப்பாகிட்ட சொன்னியானா ரெண்டு பேரும் சேந்து என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம். என்று நட்புடன் கூறி அவர்களைப் பேச வைக்க வேண்டும். சமையல் செய்துகொண்டோ அல்லது மேட்ச் பார்த்துக்கொண்டோ இதைச் செய்யக் கூடாது. குழந்தைகள் நம்பிக்கையோடும் நட்போடும் நம்மிடம் பேசத் தொடங்கிவிட்டாலே பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நமது கவனமான அணுகுமுறையாலோ அல்லது மனநல ஆலோசகரின் உதவியாலோ சென்று மீதியையும் தீர்த்துவிடலாம்.

×Close
×Close