காருக்குள்ளும் காற்று மாசுபாடு: ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவு

காருக்குள் நீங்கள் எல்லா கண்ணாடிகளையும் மூடிக்கொண்டு பயணம் செய்தாலும், மாசடைந்த காற்றின் துகள்கள் காரின் உள்ளேயும் உள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

காற்று மாசுபாடு இன்று எல்லா நகரங்களிலும் பெருகிவிட்டது. இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்து சென்றால் தான் மாசடைந்த காற்று நம்மை தாக்கும், அப்போதுதான் மூச்சுக்கோளாறுகள் முதல் நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படும் என்று நினைத்துக்கொண்டு, காரில் பயணம் செய்வது பாதுகாப்பானது என நினைப்பவர்களா நீங்கள்? ஆனால், நீங்கள் நினைப்பது உண்மை இல்லை. காருக்குள் நீங்கள் எல்லா கண்ணாடிகளையும் மூடிக்கொண்டு பயணம் செய்தாலும், காற்று மாசுபாட்டுக்கு நீங்கள் இரையாகக்கூடும். மாசடைந்த காற்றின் துகள்கள் காரின் உள்ளேயும் உள்ளன என்பது ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

காரின் உள்ளேயும் ஆபத்தான மாசடைந்த காற்றின் துகள்கள், மூலக்கூறுகள் உள்ளன. காரின் உள்ளே உள்ள இந்த துகள்கள் மூச்சுக்கோளாறுகள், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய், நரம்பு சிதைவு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் என வட கரோலினா மாகாணத்தில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ’பீக் ஹவர்ஸ்’ என சொல்லப்படும் நெருக்கடியான நேரங்களில் பயணம் செய்யும்போது அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு காரில் பயணம் செய்யும்போது காரின் உள்ளே இருப்பவர்களின் உடல் அவற்றை கையாளுவதற்கு ஏற்ற எதிர்வினை வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஆனால், அதேநேரத்தில் மாசுபட்ட காற்றின் துகள்களும் அதற்காக எதிர்வினையை ஏற்படுத்தும். அந்த துகள்கள் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்கள், டி.என்.ஏ. ஆகியவற்றில் அழிவை ஏற்படுத்த தூண்டும் என்ற அதிர்ச்சியான தகவலும் வளிமண்டல சூழல் எனும் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காலை நேரத்தில் வெயிலில் காரில் பயணிக்கும்போது மனித உடலில் உட்புகும் காற்றின் துகள்கள் மேலும் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை விட ஆபத்தான விளைவுகளை காரில் செல்லும்போது காற்று மாசுபாட்டால் ஏற்படும் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள், காரில் பயணப்படும்போது காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்கும் வகையில் தங்கள் பயண பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

×Close
×Close