Advertisment

புத்தக அறிமுகம் : அதிகார வர்க்கத்தை ஆட்டி பார்த்த சாமானியனின் கதை

உயர் அதிகாரியின் ஊழலை வெளிக்கொண்டு வர முயன்று, டெலிபோன் டேப் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சதிகளையும் அவர் சந்தித்த இன்னல்களையும் விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
savukku sankar

ச.கோசல்ராம்

Advertisment

தமிழக அதிகார வர்க்கத்துக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிம்ம சொப்பனமாக இருப்பது சவுக்கு இணைய தளம். அந்த இணைய தளத்தை நடத்தி வரும் சங்கரின் வாழ்க்கை வரலாற்றை அவரே எழுதியிருக்கும் புத்தகம் ஊழல் - உளவு - அரசியல். உயர் அதிகாரியின் ஊழலை வெளிக்கொண்டு வர முயன்று, டெலிபோன் டேப் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சதிகளையும் அவர் சந்தித்த இன்னல்களையும் விவரிக்கிறது.

அதிகார வர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம். கதையை மிஞ்சும் நிஜம். கற்பனைக்கு எட்டாத சாகசம். உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம் என்ற முகப்பு அடையிலேயே சொல்லியிருக்கிறார்கள். புத்தகத்தைப் படிக்கும் போது அது உண்மை என்பதை உணர முடிகிறது.

பத்தாம் வகுப்பு முடிந்த நிலையில் தந்தையை இழந்த சங்கருக்கு, அவரது தந்தை வேலை பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை கிடைக்கிறது. கள்ளம் கபடமில்லாத வயதில், ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் வாசிப்பில் இருந்து வந்தது என்பது புத்தகத்தைப் படிக்கு போது உணர முடிகிறது.

உயர் அதிகாரி ஆட்சியாளர்களிடம் சலுகை பெற எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை புட்டுபுட்டு வைத்துள்ளார். ஒரு வழக்கு வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும். வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க அதிகாரிகள் எப்படி உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்த்தவர் என்பதால் அதை படிக்கும் போது, இப்படித்தான் பல வழக்குகளில் பெரிய மனிதர்கள் விடுதலையானார்களோ என்பது தெளிவாகிறது.

பத்திரிகைகளின் உதவியோடு மாற்றத்தை கொண்டு வர அவர் கையாண்ட வழிகள் சாபாஷ் போட வைக்கிறது. வழக்கில் சிக்க வைக்கப்பட்ட போது, அவர் அனுபவித்த சித்ரவதைகளை படிக்கும் போது, நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் சிறை கைதிகளுக்காக அவரின் முயற்சியும் வியக்க வைக்கிறது.

காவல்துறையின் நடைமுறைகள், நீதிமன்ற நடைமுறைகள், ஜெயில் நடைமுறைகள், எதார்த்தத்தை அழகாக விவரிக்கிறார்.

புத்தகத்தை படிக்கும் போது மர்ம நாவலை படித்தது போன்று சுவையாக இருக்கிறது. வழக்கு, நடைமுறைகள் என ஆவணப்படுத்தியிருந்தாலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதியதற்காக ஆசிரியரை பாராட்டலாம். திரைப்படம் எடுக்கக் கூடிய அளவுக்கு வீரம், வீவேகம், செண்டிமெண்ட், நக்கல், நையாண்டி என பல சுவைகளை கொடுத்திருப்பது வசிகரிக்கிறது.

தன்னை கைது செய்து சித்ரவதை செய்த அதிகாரி பாலுவை, கோர்ட்டில் சந்தித்து ‘பாலு எப்படியிருக்கீங்க’ என்று கேட்கும் வலிமை நிரபராதிகளுக்குத்தான் வரும். தான் அடி உதை படுவதை அம்மாவுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சத்தம் போடாமல் இருந்தார் என்று சொல்லும் போது அவரது மன வலிமை நமக்கு புரிகிறது. நடுரோட்டில் ஓடவிட்டு சுட்டுவிடுவோம் என்ற எச்சரித்த போது, போலீசார் துப்பாகியில் குண்டே இருக்காது என்பதை சொல்லும் போது, சிக்கலான சூழலிலும் பதற்றமில்லாமல் எதிர்க்கொண்டதை காட்டுகிறது.

இந்த வழக்குச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இன்னமும் பணியில் இருக்கும் போதே, அவர்களைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் சாடியிருக்கிறார். அதற்கும் ஒரு தில் வேண்டும். அதை அப்படியே வெளியிட்ட பதிப்பாளருக்கும் தைரியம் வேண்டும். அதற்காக இருவரையும் பாராட்டலாம்.

96ம் ஆண்டில் இருந்து நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களின் பின்னால் ஒரு சாமானியனின் பங்கு இருக்கிறது என்பதை உணரும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அதற்காக அவர் தாங்கிக் கொண்ட வலியும் வேதனையும் படிக்கும் போது, எல்லாருக்கும் இந்த மன வலிமை வர வேண்டும். அப்போதுதான் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்க முடியும்.

புத்தகத்தின் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. அதை கவனமுடன் தவிர்த்து இருக்கலாம். அதே போல, அவர் தாயார் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றி இன்னமும் ஆழமாக எழுதியிருக்கலாம். ஒரிரு பாராக்களில் அதை முடித்திருக்க வேண்டாம். புத்தகத்தின் பின் பகுதியில் சொல்ல வேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொல்லியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. அதையும்

முழுமையாக எழுதியிருந்தால் புத்தகம் முழுமையான ஆவணமாகியிருக்கும்.

கடந்த 20 ஆண்டுகால (1996 -2016) அரசியல், அதிகாரவர்க்கத்தின் அராஜகங்களை சொல்லும் மிக முக்கியமான நூல் இது. ஆங்கலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம்.

ஊழல் - உளவு - அரசியல், சவுக்கு சங்கர், கிழக்கு பதிப்பகம் ரூ.200

உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை - 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment