பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், கமல் ஹாசன் இந்த வாரம் ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புத்தகம் பற்றி எழுத்தாளர் அபிலாஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதையடுத்து, தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களைத் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனையும் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து பரிந்துரைப்பார். அந்த வகையில் இந்த வாரம், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) ஒளிபரப்பான எபிசோடில், விக்டர் ஃபிராங்கல் எழுதிய Man’s Search for Meaning என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி பரிந்துரைத்தார்.
இதையடுத்து, வாசிக்கும் ஆர்வமுடைய ரசிகர்கள் பலரும் விக்டர் ஃபிராங்கலின் Man’s Search for Meaning என்ற புத்தகத்தைப் பற்றி இணையங்களில் தேடினர்.

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான Viktor Frankl எழுதிய Man’s Search for Meaning புத்தகம், நாஜி வதை முகாமில் இவர் கண்டு அனுபவித்த நேரடியான கொடுமைகளையும் அதன் மீதான ஆய்வுக் கருத்துக்களையும் கொண்டு எழுதப்பட்டது.
பலருக்கும் “ஏன் இந்த வாழ்க்கையை வாழணும்” என்கிற சலிப்பு ஏற்பட்டு கேள்வி எழும்போது, ‘இந்த வாழ்க்கையை வாழ்வதற்கான காரணங்களை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்; அப்படி செய்ய முடியும் என்பதைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. வாழ்வின் அர்த்தத்தை நாமே உருவாக்கிக்கொள்வதற்காக Logotherapy என்கிற வழிமுறையை பிராங்கல் கூறுகிறார். இந்த புத்தகன் உலகின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
பிராங்கலின் Man’s Search for Meaning புத்தகம் தமிழில் ‘வாழ்க்கையின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலை ச.சரவணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
Man’s Search for Meaning புத்தகம் குறித்து எழுத்தாளர் அபிலாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “இன்றைய பிக்பாஸில் கமல் ஒரு அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் எளிமையாக சரியாக இருந்தது.
வாழ்க்கைக்கு என அர்த்தமென ஒன்றில்லை என இருத்தலியல்வாதிகள் இருபதாம் நூற்றாண்டில் கூற, உளவியலாளர் விக்டர் பிராங்கிள் தனது யூத வதை முகாம் அனுபவத்தை வைத்து அதற்கு ஒரு உளவியல் கோணத்தை கொடுத்தார். அர்த்தத்தை வெளியில் இருந்து உண்டுபண்ணுவதன் வழியாக மட்டுமே இவ்வாழ்வை வெற்றிகரமாக மகிழ்வாக வாழ முடியும் என ஒரு கோட்பாட்டை அவர் உருவாக்கினார். அதற்கு லோகோதெரபி என் பெயரிட்டார். அதைப் பின்னர் மனச்சோர்வுற்றோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தினார். அந்த காலத்தில் பலரை அவர் இதை வைத்து குணப்படுத்தினார்.
இன்றும் மனம் சோரும் போது படிக்க வேண்டிய நூலாக Man’s Search for Meaning உள்ளது – அதன் முக்கியமான பரிந்துரை: வாழ்வில் அர்த்தத்தை தேடிச் செல்லாதீர்கள். நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“