Advertisment

வெடி மருந்துக்குப் பிறந்தவனா?

அந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை; ஒரேயொரு கேள்வி மட்டுமே இருந்திருக்கும். பிள்ளத் தாய்ச்சி பெண்ணுக்கு பிடித்ததெல்லாம் தருவது போல எனக்கு அன்னாசிப் பழம் தந்தானே அவன் விந்துக்குப் பிறந்தானா இல்லை வெடிமருந்துக்குப் பிறந்தவனா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala Pregnant elephant death : Hunger elephant fainted and drowned in water says postmortem report

kerala Pregnant elephant death : Hunger elephant fainted and drowned in water says postmortem report

கவிஞர் க.சந்திரகலா, அதங்கோடு

Advertisment

அந்த யானைக்கும்

ஆயிரம் கனவிருந்திருக்கும்

தான்

கருத்தரித்த விபரம்

உள்ளூர உணர்ந்தவுடன்

எள்ளுச்செடி

பப்பாளி

உண்ணாமல் தவிர்த்திருக்கும்

அந்த யானைக்கும்

ஆயிரம் கனவிருந்திருக்கும்

யானையின்

கர்ப்ப காலம்

இருபத்திரண்டு மாதங்கள்;

காலண்டர் பார்க்க

யானைக்கு தெரியாது.

ஆனாலும்-

அதன் குட்டி

அசைவதைக் கொண்டே

அது கணக்குகள் வைத்திருக்கும்

அந்த யானைக்கும்

ஆயிரம் கனவிருந்திருக்கும்

பிறக்கப் போவது

ஆண் குழந்தையென்றால்

தந்தத்துக்கு தங்கப் பூண்;

பெண் குழந்தையென்றால்

தகதகக்கும் ஒட்டியாணம்.

சேமிப்பு எதுவுமில்லை

இருந்தாலும்..

இருந்தாலும்..

அந்த யானைக்கும்

ஆயிரம் கனவிருந்திருக்கும்

காட்டில் வழி தவறாமல்

கை பிடித்து நடத்த வேண்டும்;

கள்ளச்சாராயம் விற்பவன்

கஞ்சா வளர்க்க வந்தவன்

வைத்திருக்கும்

முள் வேலிக்கும்

மின் வேலிக்கும்

வித்தியாசத்தை சொல்லித்தர

வேண்டும்.

சர்க்கஸ் கூடாரத்தில்

குட்டி யானை ஓட்டுகிற

சைக்கிள் விலை

விசாரிக்க வேண்டும்.

அப்படியொன்றும் வசதியில்லை..

நாலு நாள்

வாடகைக்கு அதை

கேட்க வேண்டும்.

அந்த யானைக்கும்

ஆயிரம் கனவிருந்திருக்கும்

தலையில் மண்ணள்ளிப் போடும்

தகப்பனைப் போல் அல்லாமல்

நாலு புத்தி சொல்லித்தர

யானை வாத்தியார் தேடவேண்டும்

பிள்ளையை பிரிந்திருக்க

நம்மால் ஆகாது

ஆனாலும்-

சாமியை சுமக்கிற

கோயில் வேலை கிடைத்தால்

பட்டணம் அனுப்பலாமா

என பார்க்க வேண்டும்.

அந்த யானைக்கும்

ஆயிரம் கனவிருந்திருக்கும்

கருவுற்ற காலத்தில்

தாய் உண்ணும் பழச்சாறு

தொப்புள் கொடி வழியே

பாய்ந்தோடும் பழ நதி.

அப்படித்தானே

அப்படித்தானே

அன்னாசிப்பழம் பார்த்த போது

அந்த யானையும் நினைத்திருக்கும்.

முதன் முதலாய்

முலையூட்டி

முதன் முதலாய்

தாலாட்டி

முதன் முதலாய்

பிளிறும் சத்தம்

இனி

பெரிய காது கேட்பதெப்போ?

நதி நடுவே

மலை போல

உடல் சிதறி

நின்ற யானை

அடிவயிறு தடவிக்கொண்டே

அழுத போது-

அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை; ஒரேயொரு கேள்வி மட்டுமே

இருந்திருக்கும்.

பிள்ளத் தாய்ச்சி பெண்ணுக்கு

பிடித்ததெல்லாம் தருவது போல-

எனக்கு

அன்னாசிப் பழம் தந்தானே

அவன்

விந்துக்குப் பிறந்தானா

இல்லை

வெடிமருந்துக்குப் பிறந்தவனா?

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Elephant Kerala Poem K Chandrakala Kavignar Chandrakala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment