பிரபஞ்சன் மரணம் : தமிழ் இலக்கியம் தன்னுடைய பிரபஞ்சத்தின் எல்லையை இன்று சுருக்கிக் கொண்டதாகவே உணர்கின்றேன். பிரபஞ்சன். புனைப் பெயரைப் போலவே தமிழ் எழுத்துலகின் பிரபஞ்சமாகப் பெற்றவர். இந்த ஊரில், இந்நாளில், இப்படியானவர்களுக்கு மகனாக பிரஞ்சபத்தில் உதித்தவர் என்று ஒரு கட்டுரை எழுதத்தான் ஆசை. ஆனால் எழுத்துகளும், உள்மனமும் அதற்கு இடம் தர மறுக்கிறது. பிறப்பு என்பது இறப்பு என்ற பதத்தை உடனழைத்துக் கொண்டே பிறந்து விடுகிறது. அதனால் தான் பிரபஞ்சன் மறைந்தார் என்று எழுத மனம் வரவில்லை.
‘என்ன உலகமடா’ என்று நடைமுறை வாழ்வை எள்ளி நகையாடும் வகையில் தான் முதல் சிறுகதைக்குத் தலைப்பு வைத்து பரணி என்ற பத்திரிக்கை மூலம் சிறு குழந்தையாய் இலக்கிய உலகில் நடைபயில தொடங்கினார் சங்கரபாணி வைத்தியலிங்கம் என்ற பிரபஞ்சன்.
காவியன் என்றும், பிரபஞ்ச கவி என்று, பொன்னித்துறைவன் என்றும் இன்ன பல செல்லப் பெயர்களை தன்னுடைய படைப்புகளுக்கு உரிமைப் பெயர்களாக்கிக் கொண்ட மனிதன், தமிழ்ச்செல்வி, தீபம், தினமணிக்கதிர், தாமரை, முல்லைச்சரம் என்று ஒவ்வொரு பத்திரிக்கைகளிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
தனிமைவாசி என்பதன் தன்னிகரற்ற அர்த்தமாகிப் போன பிரபஞ்சனின் கதைகள் பயணிக்காத தடமே இல்லை. பார்க்காத வாழ்வியல் பக்கங்கள் என்றும் கூட எதுவுமே இல்லை. நாளைக்கு வரும் கிளிகள் என்று கதை ஒன்றிற்கு தலைப்பிட்டிருந்தார் மனிதன். “துன்பத்துக்கு உள்ளாகிற மனுஷங்களுக்குத் தேவை ஒரு வார்த்தை. ஒரு வார்த்தை சார். எந்த மருந்தைக் காட்டிலும் பெரிய மருந்து அது”. என்று அங்கே அவர் எழுதியிருந்தார். வார்த்தைகள் தான் மனிதனுக்கு ஆறுதலைத் தருகிறது.
பிரபஞ்சன் மரணம் இன்று முகநூல், ட்விட்டர் என்று அனைத்து இடங்களிலும் பேசும் பொருளானது ஏனோ பிரபஞ்சனின் பூத உடல் பற்றியது அல்ல. மாறாக வலிக்கு வார்த்தைகள் நெய்ய ஒரு நெசவன் இல்லாமல் போனான் என்ற வருத்தம் தான்.
பார்க்கும் இடங்களில் எல்லாம் மக்களை மட்டுமே பிரதி எடுத்த மகத்தான கலைஞன் பிரபஞ்சன். மாபெரும் வித்தைகள் புரியும் பெரிய பெரிய வெற்றியாளர்கள் பற்றியோ, அதிசய செயல்கள் புரியும் மகத்தான கதாநாயகர்களோ இல்லாத எளிமையான, அடுத்த வீட்டில், உறவினர் வீட்டில், தன் வீட்டில், தனக்கென நடக்கும், நடந்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வார்த்தைகளை தான் மருந்தாக்கினார் பிரபஞ்சன். அந்த மருந்து தான் மனிதர்களின் வலி போக்கும் மாயையை மனதுள் விதைத்தது.
“நாம் ஏனோ எல்லாரிடமும் சிநேகம் பண்றமோ ? இல்லையே? அதே உணர்வு அந்த பறவைகளுக்கு இருக்க முடியாதா ? ” என்கிறார் ஏதோ ஒரு பக்கத்தில். பாரதியார் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில், கைதாக விருப்பம் இல்லாமல், புதுவையில் தங்கியிருந்த காலத்தில், காணும் மனிதர்கள் பற்றியெல்லாம் கவிதை எழுதுவாராம். ரயிலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பிள்ளையின் பாட்டு எந்த ராகத்தை கொண்டிருக்கிறது என்று அறிந்து, அந்த ராகத்திற்கு ஏற்ற வகையில் கவிதை வடித்து செல்லம்மாளுக்கும், குழந்தைகள் தங்கமாளுக்கும், சகுந்தலைக்கும் பாடிக்காட்டுவது வழக்கம்.
இவருடைய கதைகள் கூட, நடந்து போகும் மனிதர்களை கடந்து வந்த பின்பு மனம் என்ன சொல்லுமோ அதை பிரதிபலிப்பதாகவே இருக்கும். “பல்லாண்டுகளுக்கு முன் யாரோ ஒரு செல்வனுக்கும், செல்விக்கும் நடைபெற்ற திருமணத்தின் போது வழங்கப் பெற்ற சாயம் போன பை” – நாளை நான் பேருந்தில் ஏறி அமரும் போது, எத்தேச்சையாக யாரையாவது காண நேரிட்டால், இவ்வரிகள் உள்ளுக்குள் வந்து செல்லும். அல்லது இந்த வரிகளுக்கு சொந்தம் சொல்லும் வகையில் யாராவது இந்த சாலையில், இந்த பேருந்தில் பயணிப்பார்களாக என்று சுற்றும் முற்றிலும் தேடிப் பார்ப்பேன்.
தனிமையை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு திரிந்த கலைஞன் பிரபஞ்சன். தானாக தேடி விரும்பி அமைத்துக் கொண்ட தனிமையைத் தவிர அதுவாக வந்து அமையும் தனிமை கொடுமையானது என்று எப்போதும் சொல்வார். தனிமை என் மேல் திணிக்கப்பட்டது என சதாகாலமும் சொல்லும் மனிதன் தன் கதையில் விரும்பிய இடத்தில் தனிமையின் சாயலையும், எல்லாருக்குள்ளும் இருக்கும் வாழ்வினையும் வார்த்தைகளாக்கிவிடுவார்.
வெயில் எப்போது தான் நடந்து செல்பவர்களுக்கு இனிமையாக இருந்தது ?
இவர் புதினத்தில், படைப்புகளில் வரும் பெண்களும் கூட என் அத்தை போலவோ, அக்கா போலவோ, அம்மா போலவோ இருப்பதை மறுக்க இயலாது. இந்தியாவில் பெண்கள் பிறப்பதே பாவம் என்கிறார் .
எங்கோ. குடிகாரன் ஒருவனுக்கு கொடுத்தனுப்பிய 25 ரூபாயை திருப்பி கேட்கும் பொருட்டு, கதையின் நாயகன் அவன் வீடு நோக்கி நடக்கின்றான். வீட்டினுள் பதினைந்தும், இருபதும் என வயதை தொட்டு நிற்கும் பெண்களின் வாழ்வைக் கூட பழங்காலத்துப் போட்டோக்கள் போல நிறம் இழந்து இருக்கிறார்கள் என வலி இல்லாத சொற்கள் கொண்டு வலி கொடுத்த கலைஞன் பிரபஞ்சன்.
என்ன, ஏது என்று தெரியாமலேயே வெந்து வெந்து குமைந்து குமைந்து செய்த்துப் போன அத்தை, இருட்டிய பிறகு கோயிலுக்கு வந்து மாலை மாலையாக கண்ணீர் விட்டுச் சென்ற அத்தை
நம் வாழ்வை இதைவிட எப்படி கண்ணாடி போல் பிம்பம் காட்ட இயலும். இனி யார் வந்து காட்டுவார். விடை தெரியாமல் நிற்கிறது பிரபஞ்சத்தில், ஒரு நட்சத்திரம் எரிந்து விழுந்த நாளன்று.
கேன்சர், ஹெச்.ஐ.வி, ஏதோ ஒரு எழவு. வர வழி இருக்கும்னா, போகவும் வழி இருக்கும் தானே ? என்று எழுதியவரின் உயிரைத் தான் இன்று புற்றுநோய் கொண்டு சென்றுவிட்டது. புற்றுநோயில் பாதிக்கப்பட்ட பிரஞ்சன் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் பிரபஞ்சன். இலக்கிய உலகத்தினர் அனைவரும் தங்களின் வருத்தங்களையும் இரங்கல்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
வானம் வசப்படும் என்ற நாவலுக்காக 1995ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றார். புதுச்சேரி மற்றும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதினையும் அவர் பெற்றிருக்கிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Noted tamil writer prabhanjan passes away at
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு