ஒரு நிமிட கதை : முட்டாள்தனம்

கணவனை குறையோ குற்றமோ சொன்னால் மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து, யோசிக்க வைத்துள்ளார், அன்பரசன்.

அன்பரசன் ஞானமணி

பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தார், ஏட்டு தாமோதரன். நைட் ஷிப்ட் என்றால் நிதானமாக கிளம்புவதுதான் அவரது வழக்கம். ஸ்டேஷனில் இருந்து போன் வந்ததால், அவசர அவசரமாக கிளம்பி தயாரானார்.

‘‘நைட் வெளியே சாப்பிட டைம் இருக்காது… ரெண்டு தோசை சாப்பிட்டுட்டு போங்க…’’ என்று மனைவி கோமதியின் கட்டாயத்துக்காக, சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு, பால்கனியில் நின்று, நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான், மகன் விஜி. ‘இன்னைக்கு சிஎஸ்கே டாஸ் வின் பண்ணினா நிச்சயம் பீல்டிங் தான்… என்ன சொல்ற?’-னு போனில் பேசும் நண்பனிடம் கேள்வி எழுப்பினான்.

மூன்றாவது தோசையை சுட்டுக் கொண்டுவந்த மனைவி கோமதி, தன் கணவரிடம் ‘செமஸ்டர் பீஸ் கட்ட, வர்ற 4ம் தேதி தான் கடைசி நாளுன்னு விஜி சொன்னான்’ என்றாள்.

‘ஏற்பாடு பண்றேன்’ என்றார் தாமோதரன்.

அதற்குள், போன் பேசிவிட்டு வந்த விஜி, டிவியை ஆன் செய்தான்.

திரையில், டாஸ் வென்ற தோனி, பீலடிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். தான் சொன்னதே நடந்ததால் பூரிப்போடு சோபாவின் அமர்ந்தான், விஜி.

சாப்பிட்டு முடித்து, ஷூவை மாட்டிக் கொண்டிருந்த தாமோதரன் கேட்டார், ‘ஏம்பா, இந்த ஐபிஎல்-ல எல்லா நாடும் வந்து விளையாடுமா?’ என்றார்.

வாய்விட்டுச் சிரித்த விஜி, ‘அப்பா இது இந்தியாவுல உள்ள எட்டு நகரம் மட்டும் விளையாடுற விளையாட்டு. வேற நாடுலாம் இங்க வந்து விளையாடாது’ என்றான் சற்று நக்கலோடு.

தாமோதரன் சொன்னார், ‘இல்ல சில முகங்களை பார்க்கும் போது வெளிநாட்டு ஆளுங்க மாதிரி தெரிஞ்சாங்க.. அதான் கேட்டேன்’ என்று சொல்லி, ‘போயிட்டு வரேன் கோமதி’ என்று கிளம்பிச் சென்றார்.

கிச்சனில், மகனுக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சென்ற விஜி, ‘அப்பா என்னம்மா இவ்வளோ முட்டாளா இருக்காரு?. ஐபிஎல்-ல வெளிநாட்டு அணியெல்லாம் வந்து விளையாடுமா?-னு கேட்குறார்’ என்று சிரித்தான்.

அதற்கு கோமதி, ‘நீ சப்போர்ட் பண்ணுற டீமுல, எத்தனை பேர் நம்ம மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்?’ என்றாள்.

மவுனமாக நின்ற விஜியிடம், ‘உள்ளூர் வீரர்களே இல்லாத அணியை, எங்கள் மாநிலத்து அணி என நீங்கள் ஆதரித்து பார்ப்பது முட்டாள் தனம் இல்லனா, உன் அப்பா கேட்டதும் முட்டாள்தனம் கிடையாது’ என படபடவென பொறிந்த அம்மாவை ஆச்சரியமாக பார்த்தான், விஜி.

×Close
×Close