Advertisment

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை உருவாக்குவது எப்படி?

author-image
Janani Nagarajan
New Update
குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை உருவாக்குவது எப்படி?

மக்களின் பெரும் எதிர்பார்ப்பான புத்தக கண்காட்சி சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னையின் 45ஆவது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கிவைத்தார்.

Advertisment

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் முன்னிலையில் அழ. வள்ளியப்பா நூற்றாண்டுக்கு கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. குழந்தை இலக்கியங்களுக்கே பிரபலமான கவிஞர் அழ வள்ளியப்பா, 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் குழந்தைகளுக்காகவே எழுதியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐ.ஏ.எஸ். இளம்பகவத் வருகை தந்தார். மேலும், பபாசியின் செயலாளரான எஸ்.கே. முருகன், (தசிஎகச)வின் பொதுச் செயலாளர் விழியன், செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செழியன், பால சாகித்ய அகாடமி விருதாளர் அழ.வ.அழகப்பன், தேவி. நாச்சியப்பன் மற்றும் பத்திரிக்கையாளர் ஆதி ஆகியோர் பங்கேற்றனர். 

இவ்விழாவில் பங்குபெற்ற பத்திரிக்கையாளர் ஆதி கூறியதாவது:

"நம்ம மண்ணின் சிறப்புகள் பற்றி, நம் நாட்டின் முக்கியத்துவத்தை பற்றி, காந்தி நேரு மாதிரியான நாடு தலைவர்களைப்பற்றி, மனிதர்கள் எப்படி சரியான பண்போடு இருக்கவேண்டும் என்பதைப்பற்றி பல பாடல்கள் எழுதியிருக்கிறார். இதிலும், வெவ்வேறான கதைப்பாடல் முயற்சிகள், குழந்தைகளுக்கான காவியம், நாவல்கள் போன்ற முயற்சிகளும் மேற்கொண்டுள்ளார். 

இதுமட்டுமல்லாமல், குழந்தைகளிடையே சிறார் புத்தகங்களுடைய வாசிப்பு அதிகரிக்கவும், சிறார் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் 1950யிலேயே சிறார் குழந்தைகள் இலக்கிய சங்கத்தை உருவாக்கியுள்ளார். 

இச்சங்கத்திற்காக தனது இறுதிக்காலம் வரை அவர் பாடுபட்டார். அவர் ஆசிரியராக பணிபுரிந்த இதழ்களில், தொடர்ந்து பல புதிய எழுதாளர்களின் படைப்பை வெளியிட உதவியுள்ளார். அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் குழந்தைகளை புரிந்துகொள்வதை அடிப்படையாக கொண்டதாக வைத்திருந்தார்." என்று கூறுகிறார்.

அழ வள்ளியப்பாவின் புதல்வியான பால சாகித்ய அகாடமி விருதாளர் தேவி. நாச்சியப்பன் கூறியதாவது:

"குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை எடுத்து செல்ல வேண்டும் என்று எனது தந்தையார் பல முயற்சியை மேற்கொண்டார். என்னுடைய அனுபவத்திலேயே நான் கண்ட ஒரு நிகழ்ச்சியை பகிர விரும்புகிறேன்.

என்னுடைய தோழி ஒருவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். கையிலே சில புத்தகங்கள் வைத்திருந்தேன்; அவள் வீட்டிற்கு சென்றவுடன் நாற்காலியில் அந்த புத்தங்களை வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அந்த வீட்டிலிருந்த ஒரு குழந்தை மெதுவாக வந்து அந்த நூலை தொட்டது. தொட்டவுடன் அந்த தோழி மிக சத்தமாக வைத்துவிட்டு, அந்த குழந்தையின் கையிலிருந்த அந்த புத்தகத்தை பறித்து அந்த குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிட்டார். 

அப்பொழுது அந்த குழந்தை என்ன நினைத்துக்கொள்ளும்? இந்த புத்தகம் நாம் தொடக்கூடாத ஒரு விஷயம் போல என்று நினைத்துக்கொள்ளும்.

publive-image

குன்றத்தூரை சேர்ந்த பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றினார்.

இப்படி செய்தால் குழந்தைகள் புத்தகம் அருகில் வரவில்லை என்று நம்மால் சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு புத்தகத்தை நாம் தான் அறிமுகம் செய்ய வேண்டும். அதுவே முக்கியமாகும். ஆனால், அந்த குழந்தை அந்த புத்தகத்தை கிழித்து விடுமோ என்று பயந்து புத்தகத்தை மறைத்து வைப்பதில் பயன் ஒன்றும் இல்லை. குழந்தைகள் புத்தகத்தை கிழித்தாலும் பரவாயில்லை, அவர்கள் படித்து பயன் பெறட்டும் என்று நினைத்து அவர்கள் இடத்தில புத்தகத்தை கொடுங்கள்.

குழந்தைகளுக்கு உண்ண தெரியாமல் இருக்கும்பொழுது அவர்களின் தாயார் ஊட்டிவிடும்பொழுது கதைகளும் பாடல்களும் சொல்லிக்கொடுப்பர். வளர்ந்த பிறகு, அக்குழந்தைகள் அவர்களே உணவை எடுத்து உண்ணும் பொழுது தான் கேட்ட கதைகள் மற்றும் பாடல்கள் எங்கிருக்கிறது என்று தேடி படிக்க முற்படுவார்கள். ஆகையால்,  பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று கூறுகிறார்.

இந்நிகழ்ச்சியில் குன்றத்தூரை சேர்ந்த பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்குபெற்று அழ. வள்ளியப்பா நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக பாடல்கள் பாடி பரிசு பெற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Chennai Book Fair
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment