scorecardresearch

சிறுகதை : ஏன்டா இப்படி?

தொலைத்த இடத்தில்தான் பொருளைத் தேட வேண்டும் என்பதை சிறுகதை மூலம் ஆசிரியர் சொல்கிறார். ஒரு சிம் கார்டையும் சினிமா பாடலையும் இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

ஏ.கே.அனிருத்

காரில் ஏறி அமர்ந்ததும், எஃப்.எம்மில் பாட்டு பாட ஆரம்பித்தது.
‘’ஏன்டா இப்படி… எனக்கு மட்டும் ஏன்டா இப்படி…’’ பாடல் ஒலித்தது, எனக்காகவே போட்ட மாதிரி.
காலையில் அலுவலகம் கிளம்பும் போது, சிம் கார்டை 4ஜிக்கு அப்கிரேட் பண்ண நினைத்து முதல் நாளே புது சிம் கார்டு வாங்கி வந்துவிட்டேன். அங்கேயே அப்கிரேட் செய்ய முயன்றேன். ஆனால் ஏனோ அப்கிரேட் ஆகவில்லை. எப்படி அதை செய்வது என சொல்லிக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். வீட்டில் வைத்து முயற்சித்தும் முடியவில்லை. காலையில் முயற்சிக்கலாம் என்று முடிவெடுத்து அப்கிரேட் முயற்சியை கைவிட்டுவிட்டேன்.

லுவலகம் கிளம்பும் போது, சிம் கார்டை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து வர மறந்ததை ஆபிஸ் போன பின்தான் தெரிந்துகொண்டேன். மனைவிக்குப் போன் செய்து, ‘பேன்டை வாஷ் பண்ணிடாத. அதுக்குள்ள சிம் கார்ட் இருக்கு. அதை எடுத்து வச்சிடு’ என்று சொன்னேன். நல்ல வேளை அவளும் அதை அதுவரை வாஷ் பண்ணவில்லை. நிம்மதியாக வேலையில் மூழ்கிவிட்டேன்.
மாலை 4 மணிக்கு டீ குடிக்க போன போதுதான் சிம் கார்ட் அப்கிரேட் பற்றிய ஞாபகம் வந்தது. அறையில் வந்து அமர்ந்ததும், போனை அப்கிரேட் செய்தேன். முயற்சிக்கு பலன் கிடைத்தது.

‘உங்கள் சிம் கார்ட் அப்கிரேட் செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்ட் செயலிழந்துவிடும். அதன் பின்னர் புதிய சிம் கார்டை செலுத்துங்கள்’ என்று எஸ்.எம்.எஸ் வந்தது. ஆறு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிவிடுவோம். வீட்டில் போய் கார்டை போட்டுக் கொள்ளலாம். காரில் போகும் போது எப்படியும் ஃபோன் பேசப்போவதில்லை. சிம் செயலழிந்து போனதால் கவலை இல்லை’ என நினைத்துக் கொண்டேன்.

வீட்டுக்குள் நுழைந்ததும், ‘அந்த சிம் கார்டை எடுப்பா…’ என்றேன்.

‘‘உங்கள் பேன்ட் பாக்கெட்டில் சிம் கார்ட்டே இல்லையே…’’

‘‘இல்ல அதுலதான் வைச்சிருந்தேன்…’’

‘‘நான் என்ன பொய்யா சொல்றேன்?. வேணுன்னா நீங்களே பாருங்க…’’ என்று சொன்னபடியே பேன்டை எடுத்து கொண்டு வந்து கொடுத்தாள்.

‘‘இதுக்காகத்தான் அதை வாஷ் பண்ணாமல் வைத்திருந்தேன்…’’ என்று மனைவி மீண்டும் சொன்னாள்.

எரிச்சல். கோபத்தோடு பேன்ட் பாக்கெட்டை துழாவினேன். அங்கு சிம் கார்ட் இல்லை. பேன்டை தொங்கப்போட்ட இடத்துக்கு கீழே கிடக்குமோ என்று நப்பாசை. அங்கு பார்த்தேன். ம்ஹூம். இல்லை.

ஏமாற்றமும் எரிச்சலும் மிக்ஸ் ஆகி கோபமாக உருவெடுக்க ஆரம்பித்தது.
என்னையே அறியாமல் ‘ஏன்டா இப்படி… எனக்கு ஏன்டா இப்படி?.’ என்ற பாடலை முணு முணுத்தேன்.

‘‘சிம் இல்லைங்கிறதை காலையிலேயே எனக்கு சொல்லியிருக்கலாம்ல…’’ என்று மனைவியிடம் கேட்டதும், அவளுக்கு ஜிவ்வென்று கோபம் எட்டிப் பார்த்தது. அதை உடனே காட்டக்கூடியவர்களா அவர்கள்? பல்லை கடித்துக் கொண்டு முறைத்துப் பார்த்தாள். கண்களின் அனல் என்னை எரித்தது.

‘‘சரி விடு… நான் வேற சிம் கார்ட் வாங்க முடியுமான்னு பார்க்கிறேன்…’’ என்று சொல்லிவிட்டு, மனைவியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, டூவிலரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

எனக்கு சந்தேகம். புது சிம் கார்ட் வாங்க முடியுமா? இப்ப இருக்கிற சிம் செயலிழந்துவிட்டது. புது சிம் எப்படி போட முடியும். கம்பெனிகாரன் என்ன சொல்லப் போறானோ தெரியலியே?. என்ற கவலையோடு அந்த சிவப்பு வண்ணம் கொண்ட செல்போன் நிறுவனம் முன்பு டூவிலரை பார்க் பண்ணினேன். ஷட்டர் பாதி இறக்கி வைத்திருந்தார்கள்.

‘ஏன்டா இப்படி… எனக்கு ஏன்டா இப்படி’ என்ற பாட்டு மீண்டும் ஞாபகம் வர, தானாகவே முணுமுணுத்தேன்.

பாதி மூடிய ஷட்டர் வழியாக பார்த்தேன். உள்ளே ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் எப்படியும் வெளியே வருவார்கள். அவர்களிடம் சிம் கார்ட் கிடைக்குமா என்ற சந்தேகத்தை கேட்டுவிட்டுப் போகலாம் என்று காத்திருக்க ஆரம்பித்தேன். 15 நிமிடம், 30 நிமிடமானது. அவர்கள் வெளியே வருவதாக தெரியவில்லை. பொறுமையிழந்தேன்.

காத்திருந்த நேரத்தில், நேற்று சிம் கார்டை வாங்கிவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் என்ன நடந்தது என்று யோசித்தேன். டூவிலரில் போய்க் கொண்டு இருந்த போது, போன் வந்தது. பேன்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்துப் பேசினேன். அந்த இடமும் நன்றாக நினைவுக்கு வந்தது. அங்கு விழுந்திருக்குமோ? அப்படியே விழுந்திருந்தாலும், 24 மணி நேரமாகுது. இன்னுமா அங்கேயே கிடக்கும். காலையில் கார்பரேஷன் ஆட்கள் எப்படியும் குப்பையாக நினைத்து அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள். இப்படி பலவித எண்ணங்கள் ஓடியது.

சரி… அங்கு போய் பார்ப்போம். கிடைக்கவில்லை என்றால் நாளை வரலாம் என்று முடிவெடுத்தேன். சிம் கார்ட் கிடைக்கும் என்று நம்பிக்கை சுத்தமாக இல்லை.

மீண்டும் அந்த பாடல் நினைவுக்கு வந்தது. அதை ஹம் செய்தபடியே, டூவிலரை ஸ்டார்ட் செய்தேன்.
ஐந்து நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டேன். எந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்தேன் என்பதை மீண்டும் நினைவுப்படுத்தினேன். அதன் அருகே டூவிலரை நிறுத்தினேன். சாலை ஓரமாக மணல் பரப்பை அங்குல அங்குலமாக, ஸ்கேன் செய்தேன். எதுவும் தென்படவில்லை. டூவிலரில் இருந்து இறங்கி, மணலை காலால் கலைத்தேன். சிவப்பு கலரில் சின்னதாக ஒரு கவர் இருப்பது போன்று தெரிந்தது. குபீர் மகிழ்ச்சி என்னை அறியாமல் வந்தது.

குனிந்து அந்த கவரை எடுத்தேன். அதேதான்… சிம் கார்ட் கவர் அப்படியே கிடந்தது. கோபம் எரிச்சல் ஏமாற்றம் எல்லாம் மறைந்தது.

‘ஏன்டா இப்படி… எனக்கு ஏன்டா இப்படி?’ என்ற பாடலை சந்தோஷமாக முணு முணுத்தப்படியே வீட்டுக்குச் சென்றேன்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Short story why is it like this