Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : டினு மோரியா

இப்படியெல்லாமா திட்டம் போட்டு திருடுவார்கள் என்று வியக்க வைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aravindkumar - short story

aravind kumar

Advertisment

அரவிந்த் குமார்

வழக்கம்போல் டினுவிடம் இருந்து துப்பு கிடைத்தது. கடந்ததுமுறை சொதப்பியது போல் இந்தமுறையும் வீணடித்தால் இனி அவர்களுக்கு துப்பு கொடுக்கப் போவதில்லை என்று எச்சரித்து இருந்தான் டினு. ஏற்காட்டில் இப்போதுதான் அடியெடுத்து வைத்து தொழில் செய்ய ஆரம்பித்துள்ளோம், ஆரம்பமே சொதப்பல் என்றால் இனி எளிதாக மாட்டிக் கொள்வோம் என்ற திட்டி தீர்த்து விட்டான் டினு. இந்தமுறை அதுபோல் ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அப்படி ஆனால் எங்களை கழட்டிவிட்டு புதிய டீமை அவன் ஏற்பாடு செய்து கொண்டாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

நாங்கள் என்றால் நான்தான் சார்லஸ் அப்புறம் ரவிசங்கர் ஆனா கூப்பிட்றது மொட்ட ரவி. வேலூர் ஜெயில்ல தான் மொட்ட ரவியை பார்த்தேன். தூங்கி வழிஞ்சா மாதிரியே நிப்பான். ஆனா ஜன்னல தொறந்து வூட்டுக்குள்ள புகுந்து சத்தமில்லாம அள்ளிட்டு வர்றதுல கில்லாடி. எந்நேரமும் செல்போனும் கையுமா தான் இருப்பான். ரெண்டுபேரும் ஒண்ணா வெளிய வந்தோம். "நீ கெட்டது பத்தாதுனு, இவனையும் கூட்டு சேத்துக்கிட்டியா" என்று விடுதலை ஆன தினத்தில் ஜெயிலர் மாணிக்கம் எங்களை பார்த்து பொதுவாக கேட்டபோது, "எங்கயோ பொறந்தோம், எப்பிடியோ வளர்ந்தோம், எங்களுக்கு தேவையானது கிடைக்காதப்போ இருக்கிறவங்க கிட்ட இருந்து எடுத்துக்கிட்டோம், திருடன்-னு பேர் வெச்சாங்க. வெச்சா வெச்சிக்கிட்டு போ, எனக்கு என்ன, யார்தான் திருடன் இல்ல இதுதான் எங்க பாலிசி" என்று சொல்லி சிரித்தோம். "நீங்க சொல்றதும் சரிதாண்டா" என்று கூடவே சிரித்தார் மாணிக்கம் சார்.

திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை மேம்பாலம் கட்ற வேலை நடந்துகிட்டு இருந்துது. அங்கதான் முதன்முதலில் டினு-வை பார்த்தோம். வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் கதவை திறந்து உள்ளே புடைப்புடன் இருந்த பர்ஸ் ஒன்றை எடுக்க முயன்று நான் மாட்டிக் கொண்டேன். அடி பின்னி எடுத்து விட்டார்கள். கூடவே மொட்ட ரவிக்கும் செம உதை. இரண்டு பேர் முகமும் ரத்தம். உதடெல்லாம் கிழிந்து விட்டது. கார் ஓனர் கூட ஒரு அடி தான் அடிச்சான். வேடிக்கை பார்த்தவன்ங்க தான் செம காட்டுகாட்டுனாங்க. தப்பி வந்து பிரிட்ஜ் கீழ விழுந்து கெடந்தோம். டினு தான் இட்லி வாங்கி கொடுத்தான்.

"என்ன பண்ண, எப்பிடி மாட்னீங்கனு" என்று நேரடியாக கேட்டான் டினு.

"நாங்க எதுவும் பண்ணல, கீழ விழுந்துட்டோம்னு" கோரசாக சொன்னோம்.

"உண்மைய சொன்னா உதவி செய்வேன், இல்லயா இட்லிய சாப்பிட்டு போய்ட்டே இரு" என்று கையைக் கட்டிக் கொண்டு சொன்னான் டினு.

அவனுடைய தமிழ் ஒருமாதிரி குழந்தை பேசுவது போல் இருந்தாலும் உறுதியாக இருந்தது வார்த்தைகள். நடந்ததை சொன்னோம். அடிவாங்கியது வரை. எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட டினு, கண்களை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

"மொதல்ல காருக்குள்ள திருட போறோம்னா பபிள்கம்-ல சின்ன ஸ்க்ரூ டைப் ஆணிய நாலு டயர்க்கு முன்னாடியும் போட்டு வைக்கணும், ஆத்திரம் அவசரம்னு நம்மள கார் எடுத்துக்கிட்டு தொரத்த முடியாது. அப்புறம் சிகரெட் லைட்டர் வைச்சு கார் கண்ணாடி ஓரமா இருக்குற ரப்பர் டியூப் கிட்ட காட்டணும், அது மெல்ல இளகி விரியும், அப்போ நெயில் கட்டர் வச்சி இழுத்தா டியூப் தானா வரும், அப்புறம் கதவை தொறப்பது ரொம்ப ஈஸி. கைல நெயில் ரிமூவர் இல்லனா பிராந்திய தடவிட்டு வேலை செய்யணும், கை ரேகையை அவ்ளோ சீக்கிரம் ட்ரேஸ் பண்ண முடியாது, அப்புறம் ஆல்கஹால் சீக்கிரம் ஆவியாகிடும் ஸ்மெல் வெச்சும் மோப்ப நாய் கிட்ட வராது" என்றான். இட்லி சாப்பிட்டு கிட்ட இருந்த நாங்க திடுக்கிட்டு எழுந்து ஆச்சர்யத்துடன் டினுவை பார்த்தோம்.

அவன் அசராமல் சொல்லிக் கொண்டிருந்தான். "கார் கிட்ட போறதுக்கு முன்னாடி டீக்கடையில வடை வாங்கி பேப்பர்ல நல்லா பிழிஞ்சிட்டு வடைய சாப்பிட்டு அந்த பேப்பர கார் கண்ணாடி மேல தேய்ச்சி விட்றனும், ஓனர் வண்டியை எடுத்தா ரோடு கிளீனா தெரியக்கூடாது, ஒருவேளை நீங்க காருக்குள்ள தேடிக்கிட்டு இருக்கும்போதும் வெளியே இருந்து பார்த்தா உள்ளேயும் தெளிவா தெரியக்கூடாது, அதுக்குதான்" என்றான். நானும் ரவியும் மிரண்டு போனோம். இத்தனை வருஷமா சின்ன சின்ன திருட்டா பண்ணிக்கிட்டு இருக்கோம், இப்படி தெளிவா ஸ்கெட்ச் போட்டு திருடியதே இல்லை, இவ்ளோ தெளிவா ஸ்கெட்ச் போட்ற ஒருத்தன பார்த்ததும் இல்லை. மொட்ட ரவி இட்லியை அப்படியே அள்ளி வாயில் போட்டுக் கொண்டு டினுவின் காலில் விழுந்தான். "தெய்வமே இனி நீ தான் எங்க குரு" என்று கத்தினான்.

"இவ்ளோ ப்ளான் பண்றானே, நாள பின்ன நம்மள மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆய்டுவானு யோசிக்கிறியா" என்றான் என்னைப் பார்த்து.

இதயத்தை எக்ஸ்ரே எடுத்தது போல் கேட்டு விட்டான் டினு. நான் ஒன்றும் பேசமுடியாமல் தலையை மட்டும் ஆட்டினேன்.

"நான் சொல்றத செஞ்சா, உங்களுக்கு லாபம், நான் சொல்றத சொதப்பிட்டிங்கனா உங்களுக்கு நட்டம் இல்ல, எனக்கு வாழ்க்கையே போச்சு, ஸோ உங்கள விட எனக்கு தான் இதுல ரிஸ்க். யோசிக்கிறதா இருந்தா நான்தான் யோசிக்கணும்" என்று அமைதியாக கூறினான் டினு.

"நீங்க சொல்லுங்க நாங்க செய்றோம்" என்று கூறினேன்.

அப்போது தூரத்தில் இருந்து யாரோ ஒருவர் அழைக்க டினு திரும்பி பார்த்து வருவதாக சொன்னான். எங்களுடைய செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு சீக்கிரம் கூப்பிடுவதாக சொன்னான்.

அப்படித்தான் டினு எங்களுக்கு பழக்கம். டினுவுக்கு பகலெல்லாம் பில்டிங் கட்ற வேலைதான். ஆனா எந்த கடையில் எவ்ளோ வியாபாரம், எந்த வீட்ல எத்தனை வண்டி, எந்த வீட்ல எத்தனை பொம்பளைங்க, எத்தனை ஆம்பளைங்க, எந்தெந்த சின்ன குழந்தைங்க நகையோட இருக்குது, எந்த தெரு முட்டு சந்து, எந்த வீட்ல நாய் இருக்கு, எந்த வீட்டு காம்பவுண்ட் சுவர் எவ்ளோ உயரம், எந்த வீட்டு காம்பவுண்டு சுவர் மேல கண்ணாடி பதிச்சி இருப்பாங்க, எந்த வீட்ல சிசிடிவி இருக்கு, சிசிடிவி கண்ல மாட்டாம முட்டைய எப்படி வீசணும், வீசிட்டு எப்படி பபிள் கம்மை ஒட்டணும், செருப்போ - ஷுவோ போடாம ஸ்டாக்கின்ஸ் போட்டு நடக்கணும்னு எங்களுக்கு தெரியாத எல்லா வித்தையும் சொல்லி கொடுத்தது டினு தான்.

"இவ்ளோ சொல்லித் தர்றியே, நீ ஏன் திருட மாட்ற" என்று ஒருநாள் மொட்ட ரவி டினுவிடம் கேட்க, சிரித்துக் கொண்டு மணிப்பூர் பக்கத்துல வாயில் நுழையாத ஒரு கிராமத்தின் பேரைச் சொல்லி அங்க உள்ள சாமி தன்னை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் திருடினால் அந்த சாமி மாட்டிவிட்டு விடும் என்று சொன்னான். அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் மொட்ட ரவி. "யோவ், சிசிடிவி கண்ல மண்ணு தூவுற வித்தையே சொல்லித்தர்ற, சாமிக்கு பயப்பட்ற, என்ன முட்டாக்... நெனச்சியா" என்று கேலி செய்தான். "இல்ல ரவி, நான் ஒருநாளும் என் கையால திருட மாட்டேன்" என்று முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு சொன்னான் டினு. அதற்கு பிறகு நானோ, ரவியோ டினுவை வற்புறத்தியதில்லை. முதலில் ஒரு ஊருக்கு டினு வேலைக்கு செல்வான். அந்த ஊரின் நீள அகலம் உட்பட எல்லாவற்றையும் முழுதாக மனதில் பதித்து எங்களுக்கு அழைப்பு விடுப்பான். அவனே ப்ளானும் போட்டுத் தருவான். அதனை செய்வது தான் எங்கள் வேலை. நகையோ, பொருளோ திருடியதை விற்று பணமாக கொண்டு வந்தால் வெள்ளைத்துணியை ஈரத்தில் நனைத்து அதில் பணத்தை வாங்கிக் கொள்வான். அதனை என்ன செய்கிறான் என்று தெரியாது. நாங்கள் வழக்கம்போல் டாஸ்மாக் அப்புறம் இத்யாதி, இத்யாதி.

போரூரில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தான் டினு. பிறந்தநாட்களின் போது நுரை போன்று ஸ்ப்ரே செய்வார்களே அந்த டப்பா ஒன்றையும், சாலையோரத்தில் விற்கப்படும் இன்ப்ரா ரெட் விளையாட்டு பொருள் ஒன்றையும் வாங்கச் சொன்னான். இன்ப்ரா ரெட் என்றால் ஒரு பட்டனை அமுக்கினால் அடர்சிவப்பு நிறத்தில் வெளிச்சம் ஒரு கற்றை போல் வருமே அதுதான். 10 ரூபாய் தான். இரண்டையும் வாங்கிக் கொண்டோம். எப்போதும் திருடப்போகும் போது இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டில் இருந்து வாசலில் விடப்பட்டிருக்கும் செருப்புகளை போட்டுக் கொள்ள வேண்டும். திருடிய வீட்டிலேயே அந்த செருப்புகளை போட்டு விட வேண்டும். இந்தமுறை மந்திரித்து ஏவல் செய்தது போல் உள்ளங்கையளவு பொம்மை ஒன்றையும் கொடுத்து விட்டிருந்தான் டினு. திருடிய பின்னர் பால் பாக்கெட்டுகள் போடுவதற்காக போடப்பட்டுள்ள பாக்சில் அந்த பொம்மையை போடச் சொன்னான்.

டினு போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி போரூருக்கு சென்றோம். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 50 அடி தூரத்தில் நின்றுகொண்டு இன்ப்ரா ரெட் ஒளியை குறிபார்த்து சிசிடிவி மீது அடித்தான் மொட்ட ரவி. நான் நடந்து சென்று சிசிடிவி மீது நுரையை ஸ்ப்ரே செய்தேன். அதன் கதை முடிந்தது. கையளவு எடுத்து வந்த லாரி டயருக்கு போடப்படும் கிரீசை பின்பக்க கிரில் கேட்டில் தடவினேன். பூட்டின் மீதும், சாவி துவாரத்திற்குள்ளும் சர்க்கரையை கொட்டினேன். சிறிய டெஸ்ட் டியூபில் ரப்பர் மூடிபோட்டு டினு கொடுத்திருந்த சல்ப்யூரிக் ஆசிட்டை கவனமாக எடுத்து கைகளில் படாமல் திறந்து சர்க்கரை மீது மெதுவாக ஊற்றினேன். மூக்கைப் பொத்திக்கொண்டு, கண்களில் படாமல் எட்டநின்று கவனமாக ஊற்றச் சொன்னான். அதுபோலவே செய்தேன். என்னமோ மந்திரம் போட்டது போல சர்க்கரை கருப்புநிற பாம்பு போல பொங்கி எழுந்தது. கூடவே பூட்டின் இரும்பு வளையமும் உருகி வழிந்தது. தொப்பென்று விழப்போன பூட்டை தரைக்கு முன்னதாக பிடித்து ஓரம் வைத்தேன். கிரில் கேட் சத்தமில்லாமல் திறந்தது. உள்ளே குமிழ் போட்ட கதவு. பாக்கெட்டில் இருந்த கிரெடிட் கார்டு ஒன்றை எடுத்து குமிழுக்கு நேராக கதவிடுக்கில் வைத்து அழுத்தி, சிறிய ஸ்க்ரூ ட்ரைவரால் குமிழுக்கு நடுவே உள்ள ஓட்டையை அழுத்த கதவும் திறந்தது.

உள்ளே யாருமே இல்லை. மிக இயல்பாக நடந்து படுக்கையறைக்கு சென்றோம். இரண்டு கைப்பிடிகள் கொண்ட பெரிய பீரோ இருந்தது. மொட்ட ரவி பாக்கெட்டில் இருந்து இரண்டு சிறிய கம்பிகளை எடுத்து எட்டு வடிவில் பிணைத்து உள்ளே விட க்ளக் என்ற சத்தத்துடன் பீரோ லாக்கர் விடுபட்டது. அதற்குள்ளே இருந்த சிறிய லாக்கரின் இடைவெளியில் ஸ்க்ரூ ட்ரைவரை கொண்டு வேகமாக பிதுக்க கதவு நெளிந்து திறந்தது. 20 சவரன் நகைகள் இருக்கும். கூடவே 50 ஆயிரம் ரூபாய். கமுக்கமாக எடுத்துக் கொண்டு வந்த வழியே கதவுகளை மூடி விட்டு வெளியேறி பால் பாக்கெட் பெட்டிக்குள் மந்திரித்த பொம்மையை போட்டு விட்டு நழுவினோம். போரூர் ஜங்ஷனுக்கு வந்து நடைபாதையில் பிச்சைக்காரர்களுடன் படுத்துக் கொண்டோம். அதிகாலை கிண்டியை நோக்கி ஷேர் ஆட்டோக்கள் செல்ல துவங்க அதில் ஏறி கிண்டி சென்று அங்கிருந்து செங்கல்பட்டு ரயிலேறி அதன்பிறகு உளுந்துர்பேட்டை வந்து சேர்ந்தோம். வழக்கம்போல் வெள்ளைத்துணியை ஈரமாக்கி தன் பங்கை வாங்கி கொண்டான் டினு.

"நகை, பணம் இல்லாம வேற ஏதாச்சும் எடுத்தீங்களா" என்று கேட்டான் டினு.

"இல்லையே" என்று நான் சொன்னேன்.

மொட்ட ரவி மெதுவாக "இல்லையென்று" சொல்ல, "என்ன எடுத்த ரவி" என்று கேட்டான் டினு.

"பென் ட்ரைவ் ரெண்டு இருந்தது. அத எடுத்தேன்" என்று சொன்னான்.

"ஆயிரம் பர்சனல் வச்சி இருப்பாங்க, அத பார்த்து நீ என்ன செய்யப் போற ரவி, எப்போ தேவையில்லாத விஷயங்களுக்கு மனசு கவனம் கொடுக்குதோ, கவனமா செய்ய வேண்டிய வேலைகளில் பிசகிடுவ, ஞாபகம் வச்சிக்க" என்று கோபபட்டான் டினு.

"நகை, பணம் கரைஞ்சிடும், ஆனா போட்டோ, வீடியோ, செல்போன், கம்ப்யூட்டர் இதெல்லாம் காட்டி கொடுத்துடும், ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டு காணாமல் போனான். அடுத்த இரண்டு மாதங்களுக்கு டினுவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

அப்போது தான் ஏற்காட்டுக்கு வரசொல்லி டினுவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. எப்போதும் போல் ஏதோஒரு லேண்ட்லைன் நம்பர் தான். அவன் செல்போன் வைத்திருந்து நாங்கள் பார்த்தது இல்லை.

ஏற்காட்டில் சக்ர மஹா மேரு கோயில் தாண்டி மலைச்சரிவில் புதிதாக கட்டப்பட்ட ரிசார்ட் ஒன்றின் அருகில் சந்தித்தான் டினு. ஓட்டல்களில் சமையல் வேலை செய்பவர்கள் போன்று கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அதற்கு மேலே கருப்பு நிற வி வடிவிலான கோட் என்று பார்ப்பதற்கே ஆள் அம்சமாக இருந்தான். "ஓட்டல்ல வேலைக்கு சேர்ந்துட்டியா டினு" என்று மொட்ட ரவி கேட்க, மையமாக தலையை மட்டும் ஆட்டினான். எந்த ஓட்டல் என்று நானும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை.

திப்பரேரி காட்சிமுனைக்கு அருகில் உள்ள இண்டிகோ ரிசார்ட்டில் 2-வது தளத்தில் ரூம் நம்பர் 301-ல் அறை எடுக்கச் சொன்னான்.

"அந்த ரூம் தருவாங்கனு எப்படி கேரண்டி டினு?" என்று மொட்ட ரவி கேட்டான்.

"நாளைக்கு காலையில் நீங்க 11 மணிக்கு போங்க, நார்த் இண்டியன் பேமிலி ரூமை காலி பண்ணிட்டு வெளியே வருவாங்க,.. அப்போ போயிட்டு செக் இன் பண்ணுங்க, ரூம் கிடைக்கும்."

"அங்க சிசிடிவி-ல மாட்டிக்கிட்டா முகம் தெரிஞ்சிடுமே" என்று கேட்டான் மொட்ட ரவி.

"அந்த ரிசார்ட்ல பேருக்கு தான் சிசிடிவி இருக்கு. அது ரிப்பேராகி 2 மாசம் ஆச்சு. இன்னும் சரி பண்ணல" என்றான் டினு.

"அப்போ சரி" என்று தலையாட்டினான் ரவி.

"ரூம் நம்பர் 302-ல் நெதர்லாந்து நாட்டுக்காரன் ஒருத்தன் இருக்கான். அவன்தான் டார்கெட்."

"உங்க ரூம் டாய்லெட்டும், அந்த ரூம் டாய்லெட்டும் வெறும் மர ப்ளைவுட்-ல தான் பிரிச்சி இருக்கு. அதோட ஸ்க்ரூவை எம்பி தள்ளுனா ப்ளைவுட் தனியா வந்துடும். அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. திரும்பி வரும்போது அதேபோல வெச்சி அழுத்திடுங்க."

"சேலம் ஜங்ஷன்ல ப்ளாட்பார்ம்ல விக்குற பழைய ட்ரெஸ் நாலஞ்சி வாங்கி புது பேக்ல போட்டுக்குங்க. ஐடி கார்டு கேப்பாங்க, யாராச்சும் ஒருத்தர் கொடுங்க, யார் கொடுக்க போறீங்களோ அந்த ட்ரைவிங் லைசென்ஸ் மேல நெயில் ரிமூவர் தடவிட்டு கொடுங்க. ஸ்கேன் செஞ்சா போட்டோ கருப்பதான் வரும். நீங்களே முந்திக்கிட்டு டோனர் மாத்தணும் போல என்று சொல்லுங்க" என்று தெளிவாக சொல்லிக் கொடுத்தான். "செல்போன் நம்பர் மாத்திக் கொடுங்க" என்றான்.

அவன் சொன்னது போலவே எல்லாமே நடந்தது. 302 ரூமுக்குள்ளும் போய் விட்டோம். டிவி ஸ்டேண்ட் ட்ராவிலேயே கொத்து கொத்தாக வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. எவ்வளவு என்று தெரியவில்லை. கூடவே நம்ம ஊரு நோட்டுக்களும் ஒரு கட்டு. இரண்டையும் எடுத்துக் கொண்டேன். புத்தம்புது லேப்டாப் ஒன்று அங்கு இருந்தது. மொட்ட ரவி அதனை தடவி பார்த்து எடுத்தான். "டேய் அது எதுக்குடா" என்று நான் திட்டினேன். "ஆசையா இருக்கு மச்சி" என்று சொல்லிய மொட்ட ரவி அதனை திறந்து பவர் ஆன் செய்தான். "வாடா போலாம்" என்று நான் மர ப்ளைவுட் அருகே சென்றேன். அவன் லேப்டாப்பில் எண்டர் பட்டனை அழுத்த கேமரா க்ளிங் என்று அவனை படம் பிடித்தது. பயந்துபோன மொட்ட ரவி லேப்டாப்பை கீழே போட்டுவிட்டு என்னுடன் ஓடிவந்தான். "மச்சான் ஏதோ போட்டோ புடிச்சா மாதிரி இருந்தது" என்று பயந்து போய் சொன்னான். மர ப்ளைவுட்டை எடுத்தது போலவே வைத்துவிட்டு, கொண்டு வந்திருந்த பைகளையும் அறையிலேயே போட்டுவிட்டு ரூமை பூட்டிக்கொண்டு அவசரம் அவசரமாக வெளியேறினோம்.

நேராக கரடி பார்க் சென்று பகல் முழுக்க உட்கார்ந்து இருந்தோம். டினுவிடம் இருந்து அழைப்பு வந்தது. வந்தவன் மரத்தில் சாய்ந்து கொண்டு "என்ன நடந்தது" என்று கேட்டான். நடந்ததை சொன்னோம்.

"நீங்க வந்தபிறகு அங்க என்ன ஆச்சுனு தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியாது" என்று மொட்ட ரவி பயந்து போய் கூறினான்.

"அந்த லேப்டாப்-க்கும் செல்போனுக்கும் ஒரு கனெக்ஷன் போட்டு வச்சி இருந்து இருக்கான் நெதர்லாந்துகாரன். நேரா வந்து ஓட்டல் ரிசப்ஷன்-ல கத்தி ஒரே கலாட்டா. எல்லோரும் ரூமை திறந்து பார்த்து இருக்காங்க, உள்ளே பணம் இல்லை. போலீஸ் கம்ப்ளைண்ட் ஆகிருச்சு" என்று பெருமூச்சு விட்டான்.

"நான் எத்தனை தடவ சொல்லி இருக்கேன், போனா போன வேலைய மட்டும் பாக்கணும்னு" என்று கண்களை இடுக்கியபடி சொன்னான்.

தலையில் கைவைத்து அமர்ந்த மொட்ட ரவி, "மன்னிச்சுடு டினு" என்றான்.

"சரி" என்று தலையை ஆட்டிய டினு,

"மலைக்கு மேலே போங்க, சேர்வராயன் கோயில் பக்கத்துல கொஞ்ச தூரம் போனீங்கனா பச்சப்பட்டி-னு சின்ன கிராமம் இருக்கு. அங்க எந்த வீட்டுக்கு போய் ஆயிரம் ரூபா கொடுத்தாலும் தங்க வச்சி சாப்பாடு போடுவாங்க. அவங்களுக்கு தொழிலே அதுதான். ரெண்டு நாள் கழிச்சி நான் கூப்பிட்றேனு" சொல்லிவிட்டு எங்களிடம் இருந்த எல்லா பணத்தையும் ஈரத்துணியில் வாங்கிக் கொண்டு போனான். அதற்கு பிறகு இன்றுதான் பேசுகிறான். இந்தமுறை சொதப்பக் கூடாது என்று தெளிவாக கூறிவிட்டான்.

டினு பேசி வைத்தபிறகு, "இப்போதான் பிரச்னை ஆகி இருக்கு, இந்தமுறை வேணாம் ரவி, அடுத்தமுறை பார்த்துக்கலாம்" என்று கூறினேன்.

"இல்ல மச்சி, டினு என்னை தப்பா நெனச்சிட்டான், அது இல்லனு நான் ப்ரூப் பண்ணி ஆகணும்" என்று மொட்ட ரவி உறுதியாக கூறினான்.

வேறுவழியின்றி லேக்வியூ ரிசார்ட்டுக்கு சென்றோம். இந்தமுறை ரிசார்ட்டில் ரூம் புக் செய்யவில்லை. ஹோட்டலுக்கு பின்னால் இருந்த சமையல்கட்டின் கதவு திறந்து இருக்கும். மதியம் ஒரு மணிக்கு உள்ளே நுழைந்து சிலிண்டர் பக்கத்தில் உள்ள மர ஷெல்பில் ஒளிந்து கொள்ள வேண்டும். பகல் முழுக்க அடங்கி இரவு வரை அங்குதான். செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ய சொல்லி இருந்தான். அதற்கு முன்னதாகவே பாத்ரூம் போய்விட்டு வந்துவிட வேண்டும். 8 மணிநேரம் குடிக்க நீரின்றி படுத்துக் கிடக்க வேண்டும். அதன்பிறகு வெளியே வந்து சமையல் கட்டில் இருந்து வெளிவந்து டைனிங் ஹாலை தாண்டி மேனேஜர் அறைக்கு செல்ல வேண்டும். வாரம் ஒருமுறை தான் மேனேஜர் வங்கிக்கு செல்வது வழக்கம். எனவே கண்டிப்பாக ரொக்கம் இருக்கும். எடுத்துக்கொண்டு கம்பி நீட்ட வேண்டும் என்று சொல்லி இருந்தான். அதைத்தான் இந்தமுறை சொதப்பக் கூடாது என்று கூறியிருந்தான்.

டினு சொன்னது போலவே பதுங்கி காத்திருந்து, நடந்து மேனேஜர் ரூமுக்கும் வந்துவிட்டோம். மேஜை டிராவை திறந்தோம். ட்ரீங்ங்ங் என்று அலாரம் அடித்தது. அமைதியான அந்த இரவில் அலாரம் எழுப்பிய ஒலி வயிற்றுக்குள் பக்கென்று சத்தத்துடன் பற்றிக் கொண்டது. மொட்ட ரவிக்கு சிறுநீரே வந்துவிட்டது. தபதபவென்று திரும்பி ஓடினால் சமையல் கட்டின் பின்பக்க கதவு மூடப்பட்டு இருந்தது. முன்பக்கம் செல்வதற்குள் வெளியில் லைட் போடப்பட்டது. நாலைந்து பேர் ஓடிவரும் சத்தமும் கேட்டது. மொட்ட ரவி அழ ஆரம்பித்தான். சோர்ந்து போய் டைனிங் ஹாலின் தரையில் அமர்ந்து விட்டேன். கதவை திறந்து செக்யூரிட்டிகள் நான்கு பேர் கைகளில் தடியுடன் வந்து முதல் அடி எனக்கு மண்டையில். மொட்ட ரவி அலறல் ஒலி நாய் குரைப்பது போல் கேட்டது.

ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டோம். முதல் அரைமணிநேரம் அடி பின்னியெடுத்து விட்டார்கள். "காலையில் ஐயா வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்" என்று அறைக்குள் தள்ளி பூட்டினார்கள். கை, கால், மண்டை என்று எல்லா இடத்திலும் ரத்தம். தூங்கினேனா, மயங்கினேனா என்று தெரியாது. காலையில் ஒருவர் எட்டி உதைக்க எழுந்து அமர்ந்தேன். எனக்கு முன்னாடியே மொட்ட ரவி வீங்கிய முகத்துடன் அமர்ந்து இருந்தான். சப் - இன்ஸ்பெக்டர் வந்து "என்ன நடந்தது" என்று கேட்டார்.

"ஐயா நாங்க தெரியாம பண்ணிட்டோம், இதுதான் முதல்முறை" என்று சொன்னேன்.

ஓங்கி ஒரு அறை விட்டார். காதுக்குள் கொய்ங் என்று சத்தம் கேட்டது.

அவர் கையில் இருந்த வெள்ளைப் பேப்பரில் என்னுடைய ட்ரைவிங் லைசன்ஸ் கருப்பு நிறத்துடன் பெரிய சைசில் இருந்தது. மற்றொரு பேப்பரில் மொட்ட ரவி திருதிருவென்று லேப்டாப்பை குனிந்து பார்க்கும் போட்டோ இருந்தது.

சரி, எல்லாத்தையும் தோண்டி எடுத்துட்டாங்க என்று புரிஞ்சிக்கிட்டேன்.

"ஐயா, ஐயா, எல்லாத்தையும் சொல்லிட்றோம்" என்று மொட்ட ரவி சப்-இன்ஸ்பெக்டர் காலில் விழுந்தான். காலை உதறிக்கொண்ட அவர் "சொல்லு" என்றார்.

டினுவை சந்தித்தது முதல் நேற்றிரவு வரை சொல்லி முடித்தான் மொட்ட ரவி. அருகில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் அதனை வீடியோவில் ஷுட் செய்து கொண்டார். சப் - இன்ஸ்பெக்டர் யாருக்கோ செல்போனில் தொடர்பு கொண்டார்.

"வணக்கம் ஓட்டல் அசோசியேஷன் முருகானந்தம் சாரா?"

மறுமுனையில் ஏதோ ஒரு குரல் கேட்டது.

"டினு-னு யாராச்சாம் மணிப்பூர்காரனை நம்ம ஊர் ஓட்டல்-ல வேலைக்கு சேர்த்து இருக்காங்களா? எங்க ஸ்டேஷன்-க்கு அப்டேட் எதுவும் வரலியே" என்று கேட்டார்.

"ஹா 5 நிமிஷத்துல லைனுக்கு வாங்க" என்று சொல்லி கட் செய்தார்.

மீண்டும் செல்போனை எடுத்து விழுப்புரம் ஸ்டேஷனுக்கு போன் செய்து அங்கும் தகவல் கேட்டார்.

ஸ்டேஷனில் ஆள் ஆளுக்கு அவர்களுடைய வேலை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் குத்துக்காலிட்டு அமர்ந்து இருந்தோம். 5 நிமிடத்திற்கு பிறகு சப்-இன்ஸ்பெக்டரின் செல்போன் அடுத்தடுத்து அடித்தது. முதல் போனில் பேசிய ஓட்டல் முருகானந்தம், டினு என்ற பெயரில் சமீபத்தில் யாரும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கடந்த 2 மாதங்களில் எந்தவொரு வடஇந்தியரும் வேலைக்கு சேரவில்லை என்றும் கூறினார். விழுப்புரம் ஸ்டேஷனில் இருந்து வந்த தகவலில் டினு என்ற பெயர் வடஇந்தியர் பட்டியலில் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

இந்தமுறை மொட்ட ரவிக்கு மீண்டும் அடி. "ஒழுங்கு மரியாதையா உண்மைய சொன்ன விட்டுறுவேன். இல்லனா அவ்ளோதான்" என்று எட்டி எட்டி உதைத்தார். "ஐயோ அதான் சார் சொன்னான்" என்று மொட்ட ரவி குலுங்கி குலுங்கி அழுதான்.

சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் யாருக்கோ போன் பேச சென்று விட்டார். மொட்ட ரவி விழுந்து கிடந்தான். நான் சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். கண்களை மூடிக் கொண்டேன்.

திடீரென்று மண்டைக்குள் சுத்தியலால் அடித்த மாதிரி இருந்தது. முதன்முறை உளுந்தூர்பேட்டை பாலத்தின் கீழே எங்களிடம் டினு பேசிக்கொண்டு இருந்தபோது, தூரத்தில் அவனை "மோரியா" என்று சொல்லி அழைத்தது இப்போது தெளிவாக கேட்டது. "மோரியா, மோரியா, மோரியா" என்று மீண்டும் மீண்டும் கேட்டது. ஏற்காட்டில் பார்க்கும்போது சர்வர் உடையில் இருந்தான், ஆனால் அவன் கோட்டில் நேம் ப்ளேட் இல்லை. அவன் வெள்ளைக் கர்சீப்பில் பணம் வாங்கும் போதெல்லாம் அதன் ஓரத்தில் எம் என்று ஆங்கிலத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. ஞாபகங்கள் வரவர சோர்வுதான் ஏற்பட்டது. இனி ஒன்றும் செய்வதிற்கில்லை. எப்படி இருந்தாலும் ஜெயிலுக்கு போவது நானும், மொட்ட ரவியும் தான். இல்லாத டினுவை எங்கே என்று போலீசார் தேடுவார்கள். அவர்களுக்கு நாங்கள் கிடைத்து விட்டோம்.

கடைசியாக ஓட்டல் ப்ளான் போட்டுக் கொடுக்கும் போது வழக்கத்திற்கு மாறாக, செல்போனிலேயே எல்லாவற்றையும் சொன்னான். நேரில் வரவில்லை. ஏனோ, மோரியா என்ற பெயரை போலீசில் சொல்ல தோன்றவில்லை. மணிப்பூரோ அல்லது ஏதோ ஒரு ஊரோ ஏதாவது ஒரு ரயிலில் ஜன்னலோரம் முகம் புதைத்து டினு சென்று கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. டினு இல்லை, டினு மோரியா, டினு மோரியா.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment