தமிழ் விளையாட்டு - 4 : சிலேடைச் சுவை

தமிழ் புலவர்கள் மட்டுமல்லாது, தமிழறிஞர்கள் சிலேடை பேச்சுக்கள் குறித்து, கிவாஜ, கருணாநிதி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து விளக்குகிறார், இரா.குமார்

இரா.குமார்

சிலேடைப் பாடல்கள் என்பது, ஒரே பாடல் இரண்டு பொருள் தரும்படி எழுதுவது. சிலேடை எழுதுவதில் வல்லவர் கவி காளமேகம். அவர் ஒருமுறை, நாகப்பட்டினத்தில் சாமி கும்பிட கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தார். கோயில் அருகே சிறுவர்கள் பலர், கொட்டைப் பாக்கை வைத்து கோலி விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு கொட்டைப் பாக்கு காளமேகப் புலவர் தலையில் வந்து விழுந்தது. கோபமடைந்தார் அவர். உடனே, சாபம் விடுவதுபோல…

“பாக்குத் தரித்து விளயாடும் சிறுபாலர்க்கு
நாக்குத் தறித்துவிட நாகேசா’’

என்று சொல்லிவிட்டு, அதை கோயில் சுவரில் கரியால் எழுதத் தொடங்கினார்.

பாக்குத் தரித்து விளயாடும் சிறுபாலர்க்கு
நாக்குத்
என்று எழுதியபோது கோயில் மணி ஓசை கேட்டது. தீபாராதனை முடிந்துவிடுமே என்று, எழுதுவதை பாதியில் விட்டுவிட்டுக் கோயிலுக்குப் போய்விட்டார்.

கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இதைப் பார்த்தனர். அதில் ஒரு சிறுவன், இன்னொரு சிறுவன் மேலே ஏறி, காளமேகப் புலவர் பாதியில் விட்டுச் சென்ற வாசகத்தின் மீதியை எழுதி முடித்தான்.. எப்படி தெரியுமா?

“பாக்குத் தரித்து விளயாடும் சிறுபாலர்க்கு
நாக்குத் தமிழ்மணக்க நாகேசா”
என்று எழுதி முடித்தான். திரும்பி வந்து பார்த்த புலவர், சிறுவர்களின் தமிழ்ப் புலமையை வியந்து பாராட்டினார்.

சிலேடையாகப் பேசுவதில் வல்லவர் தமிழறிஞர் கி.வ.ஜகன்னாதன். ஒருமுறை, நண்பர்களுடன் காரில் போய்க்கொண்டிருந்தார். இவரைத் தவிர மற்ற எல்லாரும் இளைஞர்கள். இவருக்கு வயது 70.
திடீரென்று கார் நின்றுவிட்டது. தள்ளிவிட்டுதான் மீண்டும் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றார் டிரைவர். எல்லாரும் காரைவிட்டு இறங்கி தள்ளப் போனார்கள். அப்போது ஒருவர், கி.வ.ஜ.வைப் பார்த்து, “நீங்க தள்ள வேஎண்டாம். இருங்க” என்றார்.

கி.வ.ஜ. உடனே. “என்னைத் ’தள்ளாதவன்’னு நினைச்சிங்களா?” என்று சிலேடையாகச் சொன்னார். எல்லாரும் ரசித்துச் சிரித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியும் சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசுவார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு; வீட்டில் நாற்காலியைவிட்டு எழுந்து, வேட்டியை சரி செய்து கட்டிக்கொண்டிருந்தார் கருணாநிதி. முதுமை காரணமாக நிற்க முடியவில்லை அவரால். கீழே தள்ளியது. அருகில் இருந்த துரைமுருகன் தாங்கிப் பிடித்துக்கொண்டார். அப்போது கருணாநிதி அடித்த கமெண்ட்….

“என்னய்யா…தள்ளாத வயசுன்னு சொல்றாங்க..இப்படி தள்ளுது..”

(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close