Advertisment

தமிழ் விளையாட்டு 20 : சொல்லின் செல்வர்கள்

திருமுருக கிருபானந்த வாரியார் உபன்யாசத்தின் போது வார்த்தை விளையாட்டு நடத்துவர். சொல்லின் செல்வர்கள் குறித்து அவர் சொன்ன சிலேடை ரசிக்கக் கூடியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thirumurugakiribanatha variyar

இரா.குமார்

Advertisment

திருமுருக கிருபானந்த வாரியார் உபன்யாசம் செய்யும்போது, அவ்வப்போது வார்த்தை விளையாட்டு நடத்துவர். ஒரு சொற்பொழிவில் அந்த காலத்துப் பெரியவர்களுக்கும் இந்த காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் பற்றிக் குறிப்பிட்டார்.

“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்." என்றார். கூட்டத்தினர் ரசித்தனர்.

கந்தபுராணச் சொற்பொழிவு நடத்திக்கொண்டிருந்தார். காமதகனப் படலத்தில் காமனை (மன்மதன்)ப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது, "இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் என ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு காமன் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common” என்றார்.

ஒருமுறை, கிருபானந்த வாரியார் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, சிலர் எழுந்து வெளியே சென்றனர். அதைப் பார்த்து விட்டு வாரியார் சொன்னார்.

”சொல்லின் செல்வர் என்று அனுமனைக் குறிப்பிடுவார்கள். இங்கேயும் சொல்லின் செல்வர்கள் இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களை சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்தான் சொல்கிறேன்”. என்றார்.

இசை விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களிலும் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்வான் பாடினார். அன்று அவருக்கு லேசாகதொண்டை கம்மியிருந்தது. அவருடைய சங்கீதத்தை விமர்சனம் செய்த சுப்புடு, “இன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்" என்றார்.

தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன், தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் பேசிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு அறிவாளியாகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. விளக்கினார்: ”இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'”

தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள். “ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ. எல்லாரும் ரசித்துச் சிரித்தனர். (ஜகன்னாதர் கோயில் இருக்கும் ஊர் பெயர் பூரி.)

Tamil Game Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment