Advertisment

மொழியறிஞர் இளங்குமரனார் மரணம்; அரசியல் தலைவர்கள் இயக்கங்கள் இரங்கல்

தமிழ் மொழி பற்றுடன் பல நூல்களை எழுதி தமிழ்ப்பணி ஆற்றிய மொழியறிஞர், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று நேற்று இரவு (ஜூலை 26) மதுரை திருநகரில் காலமானார். அவருக்கு வயது 91.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Scholar Elangkumaranaar passes away, மொழியறிஞர் இளங்குமரனார் மரணம், இளங்குமரனார், இளங்குமரனார் மரணம், Elangkumaranaar passes away, tamil ligustic scholar Elangkumaranaar, vaiko, mdmk, taminadu progressive writers and artists association

தமிழ் மொழி பற்றுடன் பல நூல்களை எழுதி தமிழ்ப்பணி ஆற்றிய மொழியறிஞர், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று நேற்று இரவு (ஜூலை 26) மதுரை திருநகரில் காலமானார். அவருக்கு வயது 91.

Advertisment

பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு பணிகளில் தமிழ்ப் பணியை செய்தவர் இளங்குமரனார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் ஊரில் படிக்கராமர் – வாழவந்தம்மையார் இணையருக்கு 1930ம் ஆண்டு எட்டாவது மகனாகப் பிறந்தார். அதனால், அவருடைய பெற்றோர் அவருக்கு கிருட்டிணன் எனப் பெயர் வைத்தனர். பின்னர் இப்பெயரை அகற்றி இளங்குமரன் என்னும் தமிழ்ப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.

சிறு வயதிலேயே சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்ற இளங்குமரனார் தனது 18-ஆம் வயதில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

இளங்குமரனார் கிட்டத்தட்ட 400 நூல்கள் எழுதியுள்ளார். அதன் பின்னர் சொல் வளமே 80 தொகுதிகள் வெளிவந்துள்ளன. பல தொகுப்பு நூல்கள் வந்துள்ளன. இவர் கொண்டுவந்த “செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்” நூல் மட்டுமே நாலாயிரத்துத் தொண்ணூறு பக்கங்களைக் கொண்டதாகும். ‘காக்கைபாடினியம்’ என்னும் இலக்கண நூலை மீட்டுருவாக்கம் செய்து அளித்துள்ளார். திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு (10) என்னும் இவரது நூலை 1963 ஆம் ஆண்டு நேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது நூலை 2003 ஆம் ஆண்டு அப்துல் கலாம் வெளியிட்டார்.

மொழியறிஞர் 2012ம் ஆண்டு வாழ்நாள் அருவினையாளருக்கான பச்சமுத்து பைந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முதுமுனைவர் (D.Lit.) பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார் தலைவராகச் செயல்பட்ட தமிழ்க்காப்புக்கழகத்தில் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

இளங்குமரனார், திருநகரில் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் அமைத்தார்(1983). திருச்சிராப்பள்ளி அருகே அல்லூர் என்கிற இடத்தில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி செயல்பட்டார். அப்பொழுது கிட்டத்தட்ட 17000 நூல்கள் அங்கே நிறைந்திருந்தன. பின்னர், மீண்டும் திருநகருக்கு குடிபெயர்ந்தார். தமிழ் மொழிப் பற்று மிக்க இளங்குமரானார், தமது வாழ்நாளில் 3,000க்கும் மேற்பட்ட தமிழ் வழியில் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் மதுரை திருநகரில் வசித்து வந்த மொழியறிஞர் இளங்குமரனார் நேற்று இரவு (ஜூலை 25) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மொழியறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி-யுமான வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “ஆயிரம் பிறை கண்ட அண்ணல் இளங்குமரனார், உடலால் தளர்வுற்ற போதிலும், உள்ளத்தால் தளராமல், இளங்குமரனாகவே வாழ்ந்து வந்தார். அவர் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

கலிங்கப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். நீண்ட காலம் திருச்சியில் வாழ்ந்து, தமிழ்ப்பணி ஆற்றி, கடைசி ஐந்து ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார். அவருடன் பல மேடைகளில் பங்கேற்று இருக்கின்றேன்; அவரது குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன்.

தமிழ் என்று தோள் தட்டி ஆடு

நல்ல தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு

என்று, தமிழின் நுண்மையையும், தொன்மையையும் கண்ட பூரிப்பில், தமிழுக்காக அரும்பாடுபட்டதோடு, ஆனந்தக் கூத்து ஆடி, அகம் மகிழ்ந்தவர். தமிழ் இலக்கண, இலக்கியங்கள் அனைத்தையும் ஒருசேர அச்சிட்டு, தமிழ் மறை என்றே பெயர் சூட்டி, அவற்றை மொத்தமாக வெளியிட்டார். ஏறத்தாழ, 17000 ரூபாய் மதிப்பிலான நூல்களை, 8000 ரூபாய் என்று விலையிட்டு, அவற்றை நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார்.

தமிழுக்காகவே தன்னை வாழ்வித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகிய பெருமக்களுடன் தம்மை வாழ்வித்துக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார். இரண்டறக் கலந்தவராய், இந்தப் பெருமக்களின் வழியில், தம் வாழ்நாளைச் செலவிட்டார்; 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அத்தனைத் தமிழ் நூல்களையும் தொகுத்து, பிழை திருத்தி, எள் அளவும் குறை இன்றி வெளியிடுவது என்பது, எளிய பணி அல்ல. அந்தப் பணியை முழுமையாகச் செய்து முடித்த மகிழ்வில், தமிழுக்காகவே வாழ்ந்த நிறைவோடு இன்று இயற்கை எய்தி உள்ளார். இளங்குமரனார் பணிக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். அன்னாரை, எவ்வளவு போற்றினாலும் தகும்.

ஆண்ட தமிழுக்கு அழிவு உண்டோ? மீண்டும் தமிழின் பொற்கால ஆட்சியைக் கொண்டு வருவோம் எனச் சூளுரைத்து, அதற்காகத் தம் வாழ்நாள் முழுமையும் அலைந்து திரிந்து, நூல்களைத் தேடிப் பிடித்து அச்சிட்டுத் தமிழுக்கு ஆக்கம் செய்த இளங்குமரனாரின் புகழ் நீண்டு வாழும்; தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்றாலும், ஈடுபாட்டாலும் நிறை வாழ்வு வாழ்ந்த அப்பெருமகனாரின் புகழ், என்றென்றும் வாழ்க என்று வாழ்த்துவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

மொழியறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுகூர் இராமலிங்கம் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தின் மூத்த மொழியறிஞர், ஆய்வறிஞர், தமிழிய வரலாற்று வரைவாய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர் இரா.இளங்குமரனார் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி திட்டத்தில் மொழியறிஞராக செயலாற்றிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர். திருக்குறளுக்கு பேருரை எழுதியவர். காணாமல் போய்விட்டது எனக் கருதப்பட்ட தமிழ் இலக்கண நூலாம் காக்கை பாடினியத்தை கண்டுபிடித்து பதிப்பித்தவர். தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுகொண்ட அவர், தேவநேயப் பாவாளரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளை தொகுத்தவர். அதேபோன்று செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகளைக் கொணர்ந்தவர். சமஸ்கிருதச் சடங்குகளை மறுத்து குரள் வழியில் தமிழ் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழில் நடத்துவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர். அவருடைய தனித்துவமான ஆய்வுகள் அவருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் ஆய்வுலகத்திற்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Tamil Language
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment