Advertisment

தமிழ்ச் சுவை- 4 : நடை மாற்றும் கம்பன்

சீதை, சூர்ப்பனகை ஆகியோரின் நடையை வைத்து அவர்களின் குணத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதை கம்பனின் வர்ணனையில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்ச் சுவை- 4 : நடை மாற்றும் கம்பன்

இரா.குமார்

Advertisment

திருத்தக்கத் தேவரிடம் இருந்து ஓர் அகப்பை மொண்டுகொண்டேன் என்று கம்பர் சொன்னதாகச் சொல்வார்கள். உண்மைதான், சீவகசிந்தாமணியில், திருத்தக்கத் தேவர் பயன்படுத்திய சந்தங்களை அப்படியே எடுத்து இராமாயணத்தில் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.

சீவகசிந்தாமணியில் சுரமஞ்சரி நடந்து வருவதை வருணிக்கிறார் திருத்தக்கத் தேவர். அந்தப் பாடல்....

சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப

வேறுபடு மேகலைகண் மெல்லென மிழற்றச்

சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட

நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள்

இப்படிப் பாடுகிறார்.

அவள் சிற்றடியில் அணிந்துள்ள கிண்கிணியும் சிலம்பும் ஒலித்திட, இடையிலே அணிந்திருக்கும் மேகலை (ஒட்டியானம் அல்ல. கொலுசில் இருப்பது போல சின்னச் சின்ன பொன் முத்துகளால் ஆனது) பொன் முத்துகள் மெல்ல மிழற்ற, அவள் சூடியிருந்த மலரில் தேனும் மகரந்தமும் கலந்து சேறு போல ஆகிவிட்டதால் தேன் உண்ண முடியாமல் வண்டுகள் ரீங்காரமிட்டபடி, அங்குமிங்கும் பறக்க, பூங்கொத்துகளைக் கொண்ட ஒரு மலர்க்கொடி நடை பயில்வதைப் போல அவள் நடந்து வந்தாள்.

வேறுபடு மேகலை என்று சொல்வதற்குக்காரணம் உண்டு. கிண்கிணியும் சிலம்பும் காலில் அணிந்திருப்பாள். முழுவதும் வெளியில் தெரியும். மேகலையை இடையிலே அணிந்திருப்பாள். அது முழுவதும் வெளியில் தெரியாது. ஆடையில் கொஞ்சம் மறைந்திருக்கும்; கொஞ்சம். வெளியில் தெரியும் சிலம்பில் இருந்து மாறுபட்டு இருப்பதால் வேறுபடு மேகலை என்று சொன்னார்.

அது சரி...அது என்ன மெல்லென மிழற்ற....? ஆம்..மிக மிக மென்மையான ஒலியை எழுப்பும் மேகலை. வீணையை மீட்டினால் இசை பிறக்கிறது. மிழற்றினால், மென்மையான இசை பிறக்கும். அதிலும் மெல்ல மிழற்றினால் எழும் ஒலி எப்படி இருக்கும்? அப்படி, மேகலை மிக மிக மெல்லிய ஒலி எழுப்பும் வகையில் மிக மென்மையாக நடந்து வருகிறாளாம் சுரமஞ்சரி.

சுரமஞ்சரிக்குத் திருத்தக்கத் தேவர் எழுதிய பாடலின் சந்தத்தை எடுத்துக்கொனண்டைட்யு சூர்ப்பனகை நடையை வருணிக்கிறார்.

சூர்பனகை நடந்து வருகிறாள். அவளுடைய பாதம்

எப்படிப்பட்டது தெரியுமா?

பஞ்சு போன்று மென்மையானது..எந்த அளவுக்கு மென்மையானது தெரியுமா? கொடியின் தளிர் அவள் பாதத்தைப் பார்த்தால் வருத்தப்படுமாம். ஏன்? அடடா, இவள் பாதம் இவ்வளவு மென்மையாகவும் பளிச்சென்று ஒளிவீசுவதாகவும் இருக்கிறதே. நாம் அப்படி மென்மையாகவும் பளிச்சென்றும் இல்லையே என்று தளிர்கள் வருந்துமாம். அவளவும் மென்மையான பளிச்சென்ற பாதங்கள் சூர்ப்பனகையின் பாதங்கள்.

அவ்வளவுதானா? இன்னும் சொல்கிறார் கம்பர்.

செக்கச் சிவந்த தாமரை மலர் போன்று இருக்கிறதாம் அவள் பாதம்.

அப்படிப்பட்ட பாதங்களால் அடியெடுத்து வைத்து நடந்து வருகிறாள். எப்படி நடக்கிறாள்? டங் டங்குன்னு பூமி அதிர்வது போல நடக்கவில்லை. சீராக அடி வைத்து, மெல்ல மெல்ல அடிவைத்து, மயில்போல, அன்னம் போல நடக்கிறாள். அப்படி அவள் நடக்கும்போது, மின்னுகின்ற வஞ்சிக்கொடி போல அழகாக் காட்சியளிக்கிறாள்.

இப்படியெல்லாம் அழகாக நடந்து வரும் அவள் எப்படிப்பட்டவள் தெரியுமா? கம்பர் சொல்கிறார்.

முழுக்க முழுக்க நஞ்சு(விஷம்)ஆனவள். மனம் முழுக்க வஞ்சனையுடையவள். நஞ்சாகவும் வஞ்சனையின் வடிவமாகவும் வந்தாள் அவள்.

கம்பன் சொல்லும் இந்தப்பாடலைப் படித்துப் பாருங்கள்.

பாடலின் சந்தமே அருமை. சி(ரு)ங்கார நடை போட்டு வருகிறது பாடல்...

.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,

அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

ஆஹா...என்ன அருமையான சந்தம். முதல் அடியில் ’அனுங்க” என்ற சொல்லையும் கடைசி வரியில் ’’வஞ்ச மகள்” என்ற சொல்லையும் வாசிக்கும்போது பாடல் சந்தம் குலுங்குகிறது பாருங்கள். நான்கு அடியில் இரண்டு முறை குலுங்குகிறது பாடல். வஞ்ச மகள் அல்லவா? இராமனை மயக்கி அடைய வேண்டும் என்ற ஆசையில் தளுக்கி குலுக்கி நடக்கிறாள் சூர்ப்பனகை. அதனால் பாடலும் தளுக்கி குலுக்கும் சந்தத்தில் உள்ளது.

சீதை நடப்பதையும் சொல்கிறார் கம்பர்...

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,

மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,

அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,

மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.

இதன் பொருள் ஒருபுறம் இருக்கட்டும் இப்போது சந்தத்தை மட்டும் பாருங்கள். பாடல் குலுங்குகிறதா? இல்லையே. அன்ன நடை போல அமைதியாகப் போகிறது.

சீதை நடந்தாள். அழகாக இருந்தது. அது இயல்பானது.

சூர்ப்பனகையோ அழகாக நடந்தாள். அதில் வஞ்சம் இருந்தது.

சந்தத்திலேயே நம்மை சிந்திக்க வைக்கிறான் கம்பன்..

அடடா... அருமை அருமை.

கம்ப நாடனே உன் காலடி சரணம்.

Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment