Advertisment

தமிழ்ச்சுவை 5 : பூவோடு உயிரையும் செருகினாள்

காதலன் வீட்டு கதவை தட்டிய போதும், காதலி கதவை திறக்கவில்லை. பூவை திருகிய போதே காதலனின்த உயிரையும் பறித்த காதலியே கதவை திற என்கிறார், செயங்கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்ச்சுவை 5 : பூவோடு உயிரையும் செருகினாள்

தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, பரணி. வெற்றி வீரனுக்குப் பாடுவதுதான் பரணி. அதுவும் சாதாரண வீரனுக்கு அல்ல. ஆயிரம் யானைகளைக் கொண்ட மிகப் பெரிய போர்ப்படையை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறும் வீரனுக்குப் பாடப்படுவதுதான் பரணி.

Advertisment

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி

என்று சிற்றிலக்கிய இலக்கணம் கூறுகிறது.

பரணி இலக்கியங்களில் மிகவும் புகழ் பெற்றது செயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப் பரணி’. இதில் வரும் சந்தப் படல்களும் வர்ணனையும் கற்பனையும் நெஞ்சை அள்ளும். மொத்தம் 150 சந்தங்களில் பாடல்களைப் பாடியுள்ளார் செயங்கொண்டார். வேறு எந்த இலக்கியத்திலும் எவரும் இந்த அளவுக்கு அதிகமான சந்தங்களைக் கையாண்டதில்லை.

கலிங்கத்துப் பரணியில் வரும் கடை திறப்புக் காதை போல சிருங்கார ரசத்தைப் பாடும் இலக்கியம் ஒன்று இல்லை என்றே சொல்லலாம். போர் முடிந்து வீடு திரும்பும் வீரார்கள், தன் வீட்டுக் கதவைத் தட்டுகின்றனர். பிரிவால் வருத்தத்தில் இருக்கும் பெண்கள், கதவைத் திறக்க மறுக்கின்றனர். அவர்களைப் புகழ்ந்து பாடி, கதவைத் திறக்கச் சொல்கிறார் செயங்கொண்டார். அதுதான் கடை திறப்புக்காதை. அதில் இருந்து ஒரு பாடல்....

முருகிற் சிவந்த கழுநீரும்

முதிரா இளைஞர் ஆருயிரும்

திருகிச் செருகும் குழல் மடவீர்

செம்பொற் கபாடம் திறமினோ!.

தங்களை ஒப்பனை செய்துகொண்ட அழகிய இளம் பெண்கள், பூப் பறிக்கத் தோட்டத்துக்குச் செல்கின்றனர். அவர்களின் அங்க அழகை ஒவ்வொன்றாக ரசித்து உருகிக் கிடக்கின்றனர் இளைஞர்கள். அப்போது அந்தப் பெண்கள், தோட்டத்தில் உள்ள செங்கழுநீர்ப் பூவைத் திருகி எடுத்து தங்கள் கூந்தலில் செருகுகிறார்கள்.

செங்கழுநீர்ப் பூவை மட்டுமா திருகி எடுத்துச் செருகினார்கள்? இல்லை. உருகிக் கிடந்த இளைஞர்களின் உயிரையும் சேர்த்துத் திருகி எடுத்து கூந்தலில் செருகிக் கொண்டு போகிறார்களாம். உருகிக் கிடந்தவன் செத்தான். அவன் உயிர் அவளிடம் அல்லவா இருக்கிறது இப்போது.

அத்தகைய அழகிய பெண்களே போர் முடித்து உங்கள் காதலர் வந்துள்ளார், கோபம் தணிந்து, கதவைத் திறவுங்கள் என்கிறார் செயங்கொண்டார்.

இதே கருத்தை ”என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி” என்ற திரைப்பாடலில் வைத்துள்ளார் முனியம்மா நடராஜன். சேலை கட்டும்போது புடவைக் கொசுவத்தை, இடுப்பில் செருகுகிறாள். அப்போது அவன் மனசையும் சேர்த்து செருகுகிறாளாம். பாடலைப் பார்ப்போம்...

கண்டாங்கி சேலை கட்டி

கைநிறைய கொசுவம் வச்சு

இடுப்புல சொருவுறியே கண்ணாம்மா

அது கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா.

எப்புடி?

(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)

Ra Kumar Tamilsuvai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment