Advertisment

தமிழ்ச்சுவை 7 : ஆஹா... கம்பனைச் சுவையுங்கள்

கம்பனின் பாடல்கள், சொல்ல வரும் கருத்துக்கு ஏற்ப மென்மையாகவும், கோபமாகவும் இருப்பதை அவரின் பாடல்களின் உதவியோடு சொல்கிறார், குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்ச்சுவை 7 : ஆஹா... கம்பனைச் சுவையுங்கள்

இரா.குமார்

Advertisment

வெய்யோனொளி தன்மேனியில் விரிசோதியின் மறைய

பொய்யோயெனும் இடையாளுடன் இளையானுடன் போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

-இராமன் வனவாசத்தில் இருந்தபோது,சீதையுடனும் லட்சுமணனுடனும் காட்டு வழியில் சென்றதைச் சொல்லும் பாடல் இது. கம்பர் வர்ணிக்கிறார். எப்படி?

சூரிய ஒளி இராமனின் மேனியில் பட, சூரியனே மறைந்து போகிறான். அந்த அளவுக்கு கரிய மேனியை உடையவன் ராமன். அப்படிப்பட்டவன், தனது இளையவனான லட்சுமணனுடனும் மனைவி சீதையுடனும் போகிறான். சீதையோ மெல்லிடையாள். அந்த இடை எவ்வளவு மெல்லியது என்று சொல்ல வருகிறார் கம்பர்.

சிற்றிடை, மிகச்சிற்றிடை, மிகமிகச் சிற்றிடை என்று ஏதேதோ வார்த்தைகள் போட்டுப் பார்க்கிறார் ஒன்றிலும் சொல்ல முடியவில்லை. இறுதியாக சொல்கிறார் “பொய்யோ எனும் இடையாள்” என்று. இடை இருக்கிறதா? இருக்கிறது என்று சொன்னால் அது பொய்யோ? என்கிறார். அந்த அளவுக்கு இருப்பதே தெரியாத சிறிய இடை.

அண்ணா ஒரு இடத்தில், பெண்ணின் இடையை வர்ணிக்கும்போது, “அவள் இடையோ கடவுளைப் பொன்றது” என்பார். இருக்கிறதா....இல்லையா என சந்தேகம் என்பதையே இப்படிச் சொல்வார் அண்ணா. சரி, கம்பருக்கு வருவோம்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில், இராமனின் நிறத்தையும் வடிவத்தையும் மீண்டும் வர்ணிக்க முயல்கிறார் கம்பர். என சொல்கிறார்?

”மையோ, மரகதமோ, மறிகடலோ மழைமுகிலோ” என்கிறார். இவன் நிறம் இருட்டா? மரகதத்தின் கரும்பச்சையோ, கடலின் கருநீலமோ கார்முகிலின் கறுப்பு நிறமோ... அடடா எதிலுமே அடக்க முடியவில்லையே, ஐயோ... வடிவத்தில் இவன் அழியாத அழகுடைவன்என்று சொல்கிறார் கம்பர்.

மை, மரகதம், மறிகடல், மழை முகில் என்று எல்லாவற்றையும் சொல்லி, எதிலுமே இராமனின் அழகை அடக்க முடியவில்லை. இராமனின் அழகைச் சொல்ல வார்த்தை கிடைக்காமல் “ஐயோ” என்று கதறுகிறான் கம்பன். சொற்களுக்குள் இராமனை ஏன் அடக்க முடியவில்லை என்றால், சொற்பதம் கடந்த பரம்பொருள் அவன். அதனால் அவன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. ஐயோ என்று கதறுகிறார் கம்பர்.

இந்தப் பாடலில், இன்னொரு சிறப்பு உண்டு. பாடலைப் பொறுமையாகப் படியுங்கள். மெதுவாக, நடப்பது போல இருக்கும் இதன் சந்தம். பாடல் ஏன் மெதுவாகப் போகிறது?

முதலில் இராமன் போகிறான். கடைசியாக லட்சுமணன் போகிறான். நடுவிலே சீதை போகிறாள். போகும் வழி காட்டு வழி. மென்பஞ்சு பாதத்தாள் சீதையால் வேகமாக நடக்கமுடியாது. மெதுவாக நடக்கிறாள். அதனால், பாடலின் சந்தமும் மெதுவாகப் போகிறது. மூவரும் நடந்து போகும் காட்சி கண் முன் விரிகிறதல்லவா?

மென்மையான சந்தத்தில் ஒரு பாடலைப் பார்த்தோம். இதே கம்பன், கோபம் கொப்பளிக்க குகன் பேசுவதை சந்தத்திலேயே அழகாக வெளிப்படுத்துகிறார்.

முடி சூட்டிக்கொள்ள வேண்டிய இராமன், காட்டுக்குச் சென்றுவிடுகிறான், அங்கே வேடர்குலத் தலைவன் குகன் வந்து, ராமனை வரவேற்று வணங்கி மகிழ்ந்தான். குகனை ஆரத்தழுவி நீ என் சகோதரன் என்று கூறி, ”குகனோடு ஐவரானோம்” என்றான் இராமன்,

தன் படகில் இராமன், சீதை, லட்சுமணனை ஏற்றி, கங்கையாற்றைக் கடந்து அக்கரையில் கொண்டுபோய் விடுகிறான் குகன்.

இங்கே அயோத்திக்குத் திரும்பிய பரதன், இராமன் காட்டுக்குச் சென்றது அறிகிறான். அண்ணனை அழைத்துச் சென்று அரியணையில் அமர்த்த வேண்டும் என்று படையுடன் காட்டுக்கு வருகிறான். கங்கைக் கரையை அடைகிறான் பரதன். படையுடன் பரதன் வந்து நிற்பதை மறுகரையில் இருந்து பார்த்த குகன், இராமன் மீது போர் தொடுக்கவே பரத வந்துள்ளான் என்று தவறாக நினைத்து ஆவேசப்படுகிறான். அப்போது குகன் சொல்கிறான்...

ஆழ நெடுந்திரை ஆறுகடந்து இவர்போவரோ

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ

“தோழமை” என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ

“ஏழமை வேடன் இறந்திலன்” என்று எனை ஏசாரோ

என்னை மீறி இந்த கங்கை ஆற்றைக் கடந்து போக பரதனால் முடியுமா? என் உயிரைக் கொடுத்தேனும் பரதனைத் தடுத்து நிறுத்தி, இராமனைக் காப்பேன், என்னை ஒரு பொருட்டாக எண்ணி, “ நீ என் உயிர்த் தோழன்” என்று இராமன் சொன்ன சொல்லுக்கு அர்த்தம் வேண்டாமா? அப்படி நான் இராமனைக் காப்பாற்றாமல் போனால், “ அறிவில்லாத இந்த வேடன் இன்னும் உயிரோடு இருக்கிறானே” என்று ஊரார் என்னை ஏச மாட்டார்களா? என்று ஆவேசமாகப் பேசுகிறான் குகன்.

இந்தப் பாடலை, வேகமாக வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். கோபம் கொப்பளிப்பது, அதன் சந்தத்திலேயே தெரியும்.

அடடா...தமிழ் இனிது. அதிலும் கம்பனின் தமிழ் அமிழ்து.

கம்பநாடனே உன் காலடி சரணம்.

Ra Kumar Tamilsuvai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment