Advertisment

வள்ளுவர் கூறும் இல்லற உளவியல்

திருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thiruvalluvar Thirukkural, Thiruvalluvar Tamil Literature, திருவள்ளுவர், திருவள்ளுவர் இலக்கியம்

Thiruvalluvar Thirukkural, Thiruvalluvar Tamil Literature, திருவள்ளுவர், திருவள்ளுவர் இலக்கியம்

முனைவர் கமல. செல்வராஜ்

Advertisment

இவ்வையகத்தில் கிடைப்பதற்கரியப் பெரும் பேற்றினைப் பெற்றவர்கள் மனித குலத்தினர். சுயமாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைச் செயல்படுத்தவும் இவர்களால் மட்டுமே இயலும். பேச்சும் எழுத்தும் இவர்களுக்கேச் சொந்தம். சிரிப்பும் உணர்வும் இவர்களின் வரப்பிரசாதம்.

மனிதன் தன் உள்ளத்திற்குள் எழும் எண்ண அலைகளை வெளிக் கொணர்வதற்கு உதவும் ஒரு மிகப் பெரிய ஆயுதமே பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்வதுதான் இலக்கியமாகும்.

இவ்விலக்கியங்களுள் மனித வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் அடங்கிக் கிடக்கும். இவற்றைப் படித்துப் புரிந்து கொள்வதின் வாயிலாக மனித வாழ்க்கையை மாண்புடையதாக ஆக்கிக் கொள்ள இயலும்.

இலக்கியத்தைப் படைக்கும் ஒரு படைப்பாளி, அந்த இலக்கியத்தைப் படிக்கும் மக்களின் உள்ளோட்டத்தைப் புரிந்து கொண்டுப் படைத்தால், அவ்விலக்கியம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அதோடு இவ்வையகம் உள்ளளவும் நிலைபெற்றும் நிற்கும்.

அதுபோலவே இலக்கியங்களைப் படிக்கும் வாசகர்களும் அவ்விலக்கியத்தின் வாயிலாக, அப்படைப்பாளி வாசகர்களுக்கு எதை உணர்த்த விளைகிறார் என்பதை நன்குணர்த்தல் வேண்டும். இவ்விரு கூறுகளும் செவ்வனவே செயல்பட்டால் மட்டுமே, ஓர் இலக்கியம் முழுமையாக வெற்றிப் பெறவும், மக்களுக்குப் பயன்படவும் செய்யும்.

இவ்வண்ணம் மக்களின் உளவியலை உணர்ந்து கொண்டுப் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்கள், அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பது கண்கூடு.

உளவியல் என்பது “மனிதனின் புறச்செயல்களை உற்று நோக்கி, முறையாக ஆய்ந்து, அதன் மூலம், அவை எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்வு கொண்டுள்ளன என்பதை தெளிவு படுத்துவதே ஆகும்”. என்பது உளவியலார் கருத்து. இந்தக் கருத்தியல் கோட்பாட்டை இலக்கியத்தோடுப் பொருத்திப் பார்க்கும் போது தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் எவ்வளவு உளவியல் வல்லுநனர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பது புலப்படும்.

இந்தப் புலப்பாட்டை வள்ளுவத்தின் புலவி நுணுக்கத்திலிருந்து தொடங்குவதே பொருத்தமாகும்.

ஏனென்றால், இவ்வதிகாரம் முழுவதையும் பொய்யா மொழியார் உளவியல் அடிப்படையில் அலசியுள்ளார்.

ஓர் அருமையானக் குடும்பம், கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்பொழுது கணவனுக்கு இயல்பாகத் தும்மல் வந்தது… என்ன செய்வது அவன் தும்மியும் விட்டான்…!

அவ்வளவுதான் அருமை மனைவிக்கு ஆவேசம் வந்தது. அவள், அவனைப் பார்த்து, “நான் இங்கிருக்க உங்களை வேறு யார் நினைத்ததால் தும்மினீர்?” என்றாள். அப்படி வினவியதோடு மட்டும் நின்று விட்டாளா? இல்லை, அவனை விட்டு விலகியும் சென்றுவிட்டாள். அதோடும் நின்று விட்டாளா? இல்லை அழுதழது, புலம்பி புலம்பி ஒருவழியாக்கிவிட்டாள். இதோ கேளுங்கள் வள்ளுவர் கூற்றை.

“வழத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.”

பெரும் பாடுபட்டு ஒரு வழியாக அவளிடம் சமரசம் செய்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டு அப்பாடா தப்பித்தோம், பிழைத்தோம் என்றிருக்கும் போது, மீண்டும் அதே “தும்மல்” வந்து முட்டிவிட்டது அவனுக்கு.

அடா… ஆண்டவனே! இப்பொழுதுதானே ஒரு பூகம்பம் வந்து அடங்கி விட்டது. அதற்குள் மீண்டும் ஒரு சுனாமி வந்து விடுமோ என்றெண்ணி, தும்மலை வெளியே தெரியாமல், சத்தமில்லாமல் அடக்குவதற்கு முற்பட்டான்.

ஆஹா…! அப்படியே கொந்தளித்து விட்டாளே…! “நான் இங்கிருக்க உமக்கு வேண்டப்பட்டவர்கள் உம்மை உள்ளுவதை எனக்குத் தெரியாமல் இருக்கத் தும்மலை மறைக்கின்றீரோ” என்று அழுது புரண்டு அமர்களம் பண்ணி விட்டாளே…! இதனை,

“தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று.”

வள்ளுவனார் உளவியல் வல்லுநர் என்பதற்கு இதை விட வேறொரு சான்று பகர்தல் அவசியமோ?

உளவியல் என்பது இருவேறு மனங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நம் செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்வது. அதன் அடிப்படையில் மனைவியின் மனநிலையைப் புரிந்து கொண்ட கணவன் அவளின் மனநிலைக்கு ஏற்ப தன் செல்பாட்டை எப்படி மாற்றிக் கொள்கிறான் என்பதை வள்ளுவர் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இப்படி திருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை. இதன் மூலம் மனித குலத்திற்கு விளக்குவதற்கு அவர் முற்பட்டிருக்கும் உளவியற் கோட்பாடுகள் தொடரும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக : drkamalaru@gmail.com )

 

Thiruvalluvar Tamil Language Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment