எப்படி இருக்கிறது உதயநிதி அமைத்த நூலகம்? அன்பகம் விசிட்

“திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளையும், வரலாற்றையும் நன்கு அறிந்த, படித்த மக்களைக் கொண்ட கழகம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று; அதனால் தான், நாங்கள் இந்த நூலகத்தை அமைத்து, மக்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க உத்வேகப்படுத்துகிறோம்.”

சென்னை தேனாம்பேட்டையின் முக்கிய அடையாளம் அறிவாலயம் என்பதை அறிவோம். அதே தேனாம்பேட்டை சிக்னல் அருகே தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகமும் இருக்கிறது. இந்த அலுவலகம் இப்போது தனது முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக நூலகம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. 

கலைஞர் கருணாநிதி பெயரிலான அந்த நூலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தி.மு.க.வினர் மட்டுமல்லாது பொதுமக்களும் இங்கு வந்து இந்த நூலகத்தை பயன்படுத்தலாம் என அவர் அறிவித்தது சிறப்பு. எப்படி இருக்கிறது அந்த  நூலகம் என அறிந்துகொள்ள அங்கு விசிட் அடித்தோம்.

திமுக இளைஞர் அணி தலைமையகம் – அன்பகம்

‘அன்பகம்’ என்ற இளைஞர் அணி தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் இந்த நூலகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, திராவிட இயக்க சிந்தனைகள், பொது கட்டுரை, சிறுகதை நாவல், கவிதை, மொழி சார்ந்த நூல்கள், மற்றும் பல்வேறு தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இளைஞர்களின் முற்போக்கு சிந்தனைகளை கலந்துரையாடுவதற்கு, நூலகத்திற்கு கீழே ஓர் அரங்கம் அமைப்பதாக இருக்கின்றனர்.

கலைஞர் நூலகத்தை அமைத்ததற்கான காரணம் கேட்டபோது:

“திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளையும், வரலாற்றையும் நன்கு அறிந்த, படித்த மக்களைக் கொண்ட கழகம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று; அதனால் தான், நாங்கள் இந்த நூலகத்தை அமைத்து, மக்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க உத்வேகப்படுத்துகிறோம்.

“”எனக்கு மாலை வழங்குவதற்கு பதிலாக புத்தகங்கள் வழங்குங்கள்”” என்று கூறியவர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதன் அடிப்படையில் கழகத்திற்கு நிறைய புத்தகங்கள் பரிசாக வந்தடையும்;  அதில் அதிகம் வருவதை அரசு பள்ளிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வழங்குவது இயல்பு.

நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவாக அவரின் சகோதரர் மணிரத்னம், அறக்கட்டளையை உருவாக்கி, குழந்தைகளுக்கான நூலகத்தை குழுமூரில் நடத்தி வருகிறார். அந்த நூலகத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆயிரம் புத்தகங்களும், நூலகத்தை நிர்வகிப்பதற்காக நிதியும் வழங்கியிருக்கிறார்.

‘அன்பகம்’ என்ற இளைஞர் அணி தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம்

இப்படி புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதன் காரணத்தால், தி.மு.க. இளைஞரணி தலைமையகத்திலேயே ஒரு நூலகம் வைக்கும் யோசனை எழுந்தது; ஆகையால் இங்கு பத்தாயிரம் புத்தகங்களை கொண்டுள்ள எளிய நூலகத்தை தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் பெயரில் ஆரம்பித்திருக்கிறோம்”, என்று அங்கு வேலை செய்பவர் கூறுகிறார்.

இந்த இணையதளமானது – http://www.youthwingdmk.in – கட்சி தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தளமாகவும், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களின் பிரிவால் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் கலைஞர் நூலகத்தில் வைக்கப்படும் புத்தகங்களின் தகவல்களை வெளியிடும் என்பது குறிபிடத்தக்கது.  

மேலும், மக்கள் தங்களின் புத்தக வாசிப்பை அதிகரிப்பதற்கும், திராவிட அரசியல் மற்றும் அதன் திட்டங்களைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அவர்களை திறமையான பேச்சாளர்களாக மாற்றுவதற்கும் நூலகத்தைப் பயன்படுத்த கட்சித் தொண்டர்கள் ஊக்குவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Udhayanidhi stalin opened a new library at dmk youthwing headquarters anbagam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com