Advertisment

இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம்!

வித்தியாசமான, அறிமுகம் இல்லாத புதிய புத்தகங்களின் அறிமுகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
book - 3

தொகுப்பு: மலர்விழி

Advertisment

சமீபத்தில் எழுத்தாளர்கள் என்ன வாசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிய பலரிடமும் தொடர்பு கொண்ட போது பல புதிய நூல்களையும் இதுவரை யாரும் அறிந்திடாத நூல்களையும் வாசித்துக் கொண்டிருப்பதுப் பற்றிய தகவல்கள் வந்தது. அதை ஐஇ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பகுதி.

அசதா: சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். திருவண்ணாமலை

இமையத்தின் ‘செடல்’ நாவல் சிறுமிப் பருவம் முதல் நடுவயது வரையிலான செடல் என்ற பெண்ணின் வாழ்வைப் பேசும் நாவல். பொட்டுக்கட்டுதல் எனும் சமூக வழக்கத்தின்படி அறியாப் பருவத்தில் கோயிலுக்கு நேர்ந்துவிடப்படும் தெய்வப் பெண்ணான செடலின் தனிமையும் துயரும் மிக்க வாழ்க்கையே இந்நாவல் களம். இலக்கிய ஆக்கங்கள்யாவுமே வாழ்வை கொண்டாட்டமாகப் பார்ப்பவை அல்ல என்றாலும் ஆகக்கூடிய துயர்மிக்க வாழ்வைப் பேசும் பிரதிகளும்கூட தம் போக்கில் நம்பிக்கையின் தெறிப்புகளையும், மகிழ்வின் சிறு ஒளிக்கீற்றுகளையும் வெளிப்படுத்திச் செல்பவை. இவ்வாழ்வு விதிக்கப்பட்டது என்ற கையளிக்கப்பட்ட தீர்மானத்துடன் ஒருபோதும் பொருந்த நினைக்காதவர்கள் பிழைத்திருப்பதற்கான போராட்டமாக மட்டுமே வாழ்வைக் கடத்துவதும் நாம் காணாதது அல்ல. ஆனால் இத்துயரங்களின் ஊற்றுக் கண்களாக சாதியும் சாதியின் பாற்பட்டு வழிவழியாக வரும் ஒடுக்குதலும் இருக்குமிடத்து இலக்கிய ஆக்கங்கள் பற்றிய சமன்பாடுகள் மறுபரிசீலனைக்கு ஆளாகின்றன. பிறப்பால் நிலைநிறுத்தப்படும் சமூகப் படிநிலைகளின் கடைசிக்குத் தள்ளப்பட்டு சமவாய்ப்பு மறுக்கப்பட்டு வாழ்வின் எல்லா நிலையிலும், எல்லாத் தருணங்களிலும் மனிதரினும் கீழானவராக நடத்தப்பெறும் மக்களது வாழ்வு குறித்த இலக்கியங்கள் அசலாகவும் நம்பகத்தன்மையோடும் அரிதாகவே படைக்கப்படுகின்றன. அவ்வகை அரிதான படைப்புகளில் ஒன்று இமையத்தின் மூன்றாவது நாவலான ‘செடல்’.

கவிஞர் சுரேகா : கவிஞர், முனைவர் பட்டஆய்வாளர், புதுக்கோட்டை

கவிஞனைப் போல பலமிக்கவனும் இல்லை. பலவீனமானவனும் இல்லை. அன்பிற்கு, அழகியலுக்கு பலவீனமடைகிறான். துன்பங்களை, வலிகளை எதிர்கொள்வதில் பலமிக்கவனாகிறான். இதில் எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் சிறுவித்தியாசம் ஒன்றினைச் சொல்வார் மு.மேத்தா ‘அனுபவங்களைக் கலந்து கொடுப்பவன் எழுத்தாளன். அனுபவங்களுக்குள் கரைந்து போகிறவன் கவிஞன்' என்று. கவிஞர் யாழிசை மணிவண்ணனின் இந்த “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்” கவிதைத் தொகுப்பில் அனுபவங்களுக்குள் அவர் கரைந்ததோடு மட்டுமல்லாமல் நம்மையும் கரையச் செய்கிறார். குறுங்கவிதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒரு காட்சிப்படுத்தல், ஒரு அனுபவப்பகிர்வு, ஒரு நினைவூட்டலாகவே இருக்கின்றன. எல்லாக் காட்சிகளையும் கவிதைகளாக்கிப் பார்ப்பது கவிஞனுக்கு வரம். அதில் இக்கவிஞர் மிளிர்கிறார்.

கை தவறிய

நெகிழிக் கோப்பைக்கு

தரையை இசைக்கத் தெரியவில்லை…

நீர் வற்றிய சேற்றில்

ஒளியிழந்த நட்சத்திரம்

கொக்கின் கால் தடம்

தன் நெடுவாழ்வினை

தோசைக்கல்லில் எழுதிப்பார்கிறார் அம்மா

பூஜ்ஜியமாகக் கிடைக்கிறது விடை …

இப்படியாக அழகியலும், படிமமும் இத்தொகுப்பு முழுதும் பொதிந்து கிடக்கின்றன. எளிதாக கடந்துவிட முடியாத தொகுப்பாக வாசகனுக்கு அமையும்.

மௌனன்யாத்ரீகா: கவிஞர்

நரனின் கேசம் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் என் வாசிப்பில் மிக முக்கியமானது. நரன் காட்டுகின்ற மனிதர்கள் நம்மால் பொருட்படுத்தப் படாதவர்களாக இருப்பதே இதன் மீதான ஈர்ப்பை அதிகரித்தது. இவர்களெல்லாம் நம் கூடத்தான் வாழ்கிறார்களா? ஏன் நாம் இவர்களை எப்போதும் ஒருபூச்சியைப் பார்த்து செல்வதைப்போல் கடந்துவிடுகிறோம் என்கிற கேள்வியையும் குற்றவுணர்ச்சியையும் அதிகப்படுத்திய கதைகளாக நரனின் கதைகள் இருக்கின்றன. உண்மையில் என்னை இவர்களையெல்லாம் தேடிப்போய் பார் என்று முதுகில் கை வைத்து கோபத்துடன் உந்தித் தள்ளும் கதைகளாக இவை இருக்கின்றன. கதையை நரன் சொல்லும் விதம், அதற்கு அவர் தேர்வு செய்த சொல்முறை, மொழி எல்லாமே இலக்கியத்துக்கு நல் வரவு. கண்டு கொள்ளப்படாத மனிதர்கள், இடங்கள், வாழ்க்கைகள்... இவைதான் இத்தொகுப்பின் பலம். கேசம் தமிழின் மிக அதிகக் கவனம் பெற வேண்டிய தொகுப்பு.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment