Advertisment

இலங்கை தமிழ் எழுத்தாளர் செ கணேசலிங்கன் மரணம்

மார்க்சிய அறிஞர்கள் அன்டோனியோ கிராம்சி, லூயிஸ் அல்துசர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோரின் எழுத்துக்களால் தாக்கம் பெற்ற கணேசலிங்கன் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவர். அவருடைய எழுத்துக்கள் மார்க்சிய தத்துவப் பார்வையுடன் இருந்தன.

author-image
WebDesk
New Update
Writer Se Ganesalingan passed away, tamil eelam, இலங்கை தமிழ் எழுத்தாளர் செ கணேசலிங்கன் மரணம், மார்க்சியவாதி எழுத்தாளர் செ கணேசலிங்கன், இலங்கை தமிழ் எழுத்தாளர் செ கணேசலிங்கன், ஈழத்து எழுத்தாளர் செ கணேசலிங்கன் காலமானார், Writer Se Ganesalingan, tamil literature, veteran marxist se ganesalingan passed away

முதுபெரும் மார்சியவாதியும் ஈழ எழுத்தாளருமான செ.கணேசலிங்கன் சென்னையில் உள்ள அவருடைய மகளின் இல்லத்தில் சனிக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.

Advertisment

எழுத்தாளர் கணேசலிங்கனுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவருடைய மகன் குமரன் மற்றும் மகள் மான்விழி சிதம்பரநாதன் இருவரும் பதிப்புத் துறையில் உள்ளனர்.

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம், உரும்பிறையில் மார்ச் 9,1928-ல் பிறந்த கணேசலிங்கன், படித்து முடித்த பின்னர், இலங்கை அரசுப் பணியில் சேர்ந்தார். அவர் 1950 மற்றும் 1981-க்கு இடையில், திரிகோணமலை மற்றும் கொழும்புவில் பணியாற்றினார். பின்னர், கருவூலப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மாணவப் பருவத்திலேயே எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட செ. கணேசலிங்கனின் முதல் கதை 1950-ல் வெளியானது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய சிறுகதை தொகுப்பு எழுத்தாளர் மு.வ என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர்டாக்டர் மு. வரதராசனாரின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. கணேசலிங்கனின் முதல் நாவலான நீண்ட பயணம் 1965-ல் வெளிவந்தது. சாதி ஒடுக்குமுறை பற்றி இந்த நாவல் பேசியது. அது அவருக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் விருதைப் பெற்றுத்தந்தது. அவர் 71 நாவல்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், 22 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் பற்றிய எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவை மட்டுமில்லாமல் மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

மார்க்சிய அறிஞர்கள் அன்டோனியோ கிராம்சி, லூயிஸ் அல்துசர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோரின் எழுத்துக்களால் தாக்கம் பெற்ற கணேசலிங்கன் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவர். அவருடைய எழுத்துக்கள் மார்க்சிய தத்துவப் பார்வையுடன் இருந்தன. புனைகதை அல்லாத அவரது படைப்புகளில் கச்சத்தீவு, வியட்நாம் மற்றும் சிலி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் உட்பட பரந்த உலகப் பார்வையை உள்ளடக்கியது.

1946ம் ஆண்டுகளில் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி அதன் செயலாளராய் இருந்து தீவிரமாகச் செயல்பட்டவர். 'சடங்கு' எனும் நாவலில் தொடங்கி 2019 வரை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். தொ.மு.சி., மு.வ., அகிலன், திரு.வி.க போன்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாள செ.கணேசலிஙன், மார்க்சிய சித்தாந்தத்தை அடிப்படையாய்க் கொண்டு படைப்புகளைப் படைத்தவர். இவரது புதினங்கள் 1980களில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவருடைய மரணத்தின் நிழல் நாவலுக்கு தமிழக அரசின் விருது அளிக்கப்பட்டது. சில நூல்கள் தடைசெய்யவும்பட்டன.

1987 மற்றும் 1999-க்கு இடையில் எழுதப்பட்ட அவரது பத்து நாவல்கள் இலங்கையில் தமிழ் இனப் பிரச்சினையைப் பேசியது.

எழுத்தாளர் செ.கணேசலிங்கன், அர்த்தசாஸ்திரத்தையும் மாக்கியவல்லியின் இளவரசன் நூலையும், பகத்கீதையையும் திருக்குறளையும் ஒப்பீடு செய்து ஆய்வு நூல் எழுதியுள்ளார். அவர் 1971-83 வரை குமரன் என்ற பத்திரிகையை நடத்தினார். இந்த பத்திரிகை இடதுசாரி-மார்க்சிய தத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

கண்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும் கல்வியாளருமான எம்.ஏ.நுஹ்மான் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் கூறித்து கூறுகையில், “அவரது எழுத்துக்கள் பிரசாரத் தன்மை கொண்டவை என்று விமர்சகர்களில் ஒரு பகுதியினர் கூறினாலும், அரசியலை இலக்கியத்திலிருந்து விலக்க முடியாது என்று நான் கூறுவேன். 1983ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழர் விரோதப் படுகொலையின் போது, ​​கணேசலிங்கனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிங்களக் குடும்பம் அடைக்கலம் கொடுத்தது.” என்று கூறினார்.

எழுத்தாளர் செ.கணேசலிங்கன் மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர் செ. கணேசலிங்கன் மறைவு குறித்து ஃபிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தோழர் செ. கணேசலிங்கன், கோவிட் காலத்துக்கு முன் வரை நான் காலை 8 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விடுவது வழக்கம். எனக்கும் முன்பே அவர் அங்கு இருப்பார். ஈழப் பிரச்சினை வெடித்த பின் கடந்த சுமார் 30 வருடங்களாக ஃபிரண்ட்லைன் அலுவலகத்திலேயே ஒரு இடத்தைக் கொடுத்திருந்தார் என் ராம். காலை உணவு பெரும்பாலும் அவருடன்தான். அந்த நேரத்தில் உலக அரசியல், பொருளதாரம், மார்க்சியம், பெண்ணியம் என்கிற உரையாடல் நடக்கும்.

நியூ லெஃப்ட் ரெவ்யூ உட்பட பல தத்துவார்த்த இதழ்களையும், புத்தகங்களையும் படித்த உடனே முக்கியமான பகுதிகளை அடிக்கோடிட்டு, அல்லது பிரதி எடுத்து என் அறைக்கு வந்து படிக்கச் சொல்வார்.



ஆண்டுக்கு ஒரு முறை கொடைக்கானல் சென்று ஒரு வாரம் தங்குவார். அந்த நாட்களில் ஒரு புதினத்தை எழுதி முடித்திருப்பார். நாவல் அச்சாகி வந்தவுடன் முதல் பிரதியை திரு ராம் அவர்களுக்கும், ‘நண்பர் விஜேக்கு அன்புடன்’ என எழுதி கையெழுதிட்ட இரண்டாம் பிரதியை எனக்கும் கொடுப்பார்.

பொருள் முதல் வாரம், மார்க்சிய இயக்கவியல் ஆகியவை குறித்து அவர் எழுதிய ‘குந்தவிக்கு கடிதங்கள்’ ‘குமரனுக்கு கடிதங்கள்’ ‘மான்விழிக்கு கடிதங்கள்’ அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள். (அவற்றில் வரும் பெயர்கள் அவருடைய மகன் மற்றும் மகள்களுடையது.)

நான் ஃபிரண்ட்லைனின் ஆசிரியர் ஆனதில் அவருக்கு பெரு மகிழ்ச்சி. ஒரு கிலோ இனிப்புகள் வாங்கி வந்து அலுவலகத்தில் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்.

இரண்டு வருடம் முன்பு வரை தொடர்ந்து எங்களுடன் இருந்து பல புத்தகங்களை எழுதினார்.

இரு ஆண்டுகளுக்கு முன் முதுமை காரணமாக அவரால் அலுவலகம் வர இயலவில்லை. ஒரு நாள் மகள் மான்விழியுடன் வந்திருந்தார். கோவிட் காரணமாக பிறகு சந்திக்கவில்லை.

எங்கள் அலுவலகத்தில் அவருக்கான இருக்கை இன்னும் காலியாகத்தான் இருக்கிறது.

ஆனால், செ கணேசலிங்கன் இனி அலுவலகம் வரப்போவதுமில்லை. அந்த இருக்கையில் அமரப் போவதும் இல்லை.” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “1985ல் ‘பெண்ணடிமை தீர

என்ற அவரது நூலின் வழி அறிமுகமான அறிஞர், எழுத்தாளர் செ. கணேசலிங்கன் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் என்னிடம் விதைத்த எழுத்து அவருடையதுதான். அவரது குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் கணேசலிங்கன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Sri Lanka Literature Tamil Eelam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment