Advertisment

எழுத்து பொருள் இன்பம் : மயிலோடு மழையும் போய்

டீச்சர் மயிலை மயிலாகப் பார்க்கவில்லை பதிலாக மயில் என்கிற உறவுக்காரர்களாகப் பார்த்திருக்கிறார்கள். அதான் டீச்சரின் பிரச்சனை என்று நினைத்தேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
peacock

எஸ்.செந்தில்குமார்

Advertisment

பள்ளிப்பருவத்தில் நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் போது, மயில் தோகை விரித்தாடுகிறக் காட்சியை பார்ப்போம். எங்களுக்கு அபூர்வமாக காட்சி தரும் மயிலை பார்த்தபடி நெடுநேரம் நிற்போம். நாங்கள் வீட்டிற்குப் போகமாட்டோம். மயிலின் கொண்டைப் பூவை என்னுடன் படித்த சிவமணி, நோட்புக்கில் அழகாக வரைவான். மயில் இறக்கையை வரைவது, அதற்கு வர்ணம் தீட்டுவது, மயில் இறக்கையை நோட்டில் ஒளித்து வைத்துக்கொள்வது என்கிற விளையாட்டுக்களை மீறி மயிலை வேடிக்கைப் பார்த்தபடி நீண்ட நேரம் நின்றிருப்பது என்பது ஒரு சாகச செயலாகயிருந்த பருவம் அது.

மயில், முருகன் கோயிலில் நின்றிருக்கிறது என்கிற சேதி கிடைத்ததும், பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டத்தோடு கூட்டமாக வாசலுக்கு வருவதும், மயிலிருக்கும் கோயில் மரம் இல்லையென்றால் கோயில் சுவர் அருகே நிற்பதற்காக வேகமாக ஓடுவதும் மற்றொரு சாகசமான செயல். எங்களை மறந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் கிரேஸி டீச்சர் வந்து முதுகில் இல்லையென்றால் பின்மண்டையில் ஓங்கி அடித்து வீட்டுக்குப் போங்கடா சனியன்களா (கழுதைகளா, உருப்படாத கழுதைகளா) என்று திட்டியதும் மெதுவாக போவோம்மா நிற்போமா என்று யோசித்தபடி நடப்போம்.

பள்ளிக்கூடத்து டீச்சர்கள் நிறைய பேர் மயிலை பார்த்தும் பார்க்காமல் அவர்களது வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். வேடிக்கைப் பார்ப்பது அவர்களுக்கு வெட்கமாகயிருக்கும்போல. கிரேஸி டீச்சருக்கு மாணவர்கள் மாணவிகள் யாரும் தெருவில் நிற்கக்கூடாது. அதுவும் மயிலை நின்று வேடிக்கைப் பார்க்கக்கூடாது. டீச்சர் பள்ளியை விட்டு வெளியேறும் போதும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் போதும் தன்னுடன் பிரம்பையும் எடுத்துக் கொண்டுதான் வருவார்கள். கிரேஸி டீச்சருக்கு மயிலை வேடிக்கைப் பார்ப்பது பிடிக்காது. அடித்து கழுதைகளா சனியன்களா வீட்டுக்கு ஓடுங்க… ஓடுங்க… என்று விரட்டுவார்கள். கிரேஸி டீச்சருக்கு பயந்து கொண்டு கடைவீதியில் ஏதாவது கடைக்குப் பின்பாக ஒளிந்து நிற்போம். டீச்சர் சென்ற பிறகு மயிலை வேடிக்கைப் பார்க்கிறவர்களும் உண்டு.

மயிலைப் பற்றிச் சொல்லும் போது நிச்சயமாக மழையைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். எங்களது ஊரில் அவ்வளவு எளிதாக மயிலை பார்க்க முடியாது. மயிலுக்கு நாங்கள் முருகன் மயில் என்று பெயர் வைத்திருந்ேதாம். (முருகன் கோயிலுக்கு வருவதால் அந்த பெயர்) மாதத்தில் இரண்டு நாட்கள் மயில் வந்து நிற்பது ஆச்சரியம். அந்த இரண்டு நாளில் ஏதாவது ஒருநாளில் நிச்சயமாக மழை வந்துவிடும். நடு இரவிற்குப் பிறகு மழை பெய்ததாக எனது பாட்டி சொல்வாள். வீட்டின் தகரம் முழுக்க நனைந்திருக்கும். மதில் மரம் தள்ளுவண்டி சைக்கிள் என்று எல்லாம் நனைந்திருக்கும். பள்ளிக்கூடத்திற்குச் சென்றால் தரை முழுவதும் மழை தண்ணீர் தேங்கிக்கிடக்கும். மயிலுக்கும் மழைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்போல.

பள்ளி முடிந்து முக்கியமாக கிரேஸி டீச்சரிடமிருந்து தப்பி கல்லூரி, வேலை, திருமணம், உறவு, வருமானம் என்று பல வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் தருணங்களில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மயிலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும். ஆனால் மழையைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்கவில்லை. மயிலைப் பார்த்ததும் பள்ளியின் ஞாபகமும் என்னுடன் படித்த நண்பர்களின் ஞாபகமும் வந்து செல்லும். நண்பர்களின் முகம் அடையாளம் தெரியாமல் சிதைந்துவிட்டது. முன் வழுக்கை, தொந்தி, எத்துபற்கள், நரைத்த தலைமுடி என்று காட்சி தருகிறார்கள். அவர்களை பார்க்கும் போது வேட்டைக்காக அலைந்து திரியும் மிருகத்தைப் போல அவர்கள் எனக்குத் தெரிவார்கள். (என்னையும் சேர்த்துத்தான்… பணத்திற்காக அலைவதைத்தான் அப்படிச் சொல்கிறேன்.)

சிவமணிக்கு உள்ளுரிலேயே பெண் கிடைத்து கடைவீதியில் ஜவுளிக்கடை வைத்து பிழைக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஊருக்குப் போகும் போது அவனது கடையில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவனது மனைவி வந்ததும் எழுந்து சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் அவளது கோபத்தையெல்லாம் சிவமணி தனது முகத்திலும் உடம்பிலும் பிரதிபளித்துக் காட்டுவான். அப்பெண் கோபக்காரப் பெண் என்பது மட்டுமல்ல சிக்கனமானப் பெண் என்பது எனக்கு முதலில் தெரியவில்லை. இது தெரியாமல் முதன்முதலாக ஆசையாக அவன் கடைக்குச் சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வெளியே சென்று டீக்குடித்து விட்டு வரலாமா என்று அவனிடம் கேட்டதற்கு அவனும் சரி என்று தனது மனைவியைப் பார்த்தான். கண்களில் ஏதோ சொல்லியவள், எழுந்து வந்து அவனது பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணத்தை எடுத்துக் கொண்டாள். அதன் பிறகுதான் எங்களை டீக்குடிக்க கடைக்கு அனுப்பினாள்.

சிவமணிதான் கிரேஸி டீச்சரைப் பற்றிச் சொன்னான். டீச்சரை மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அவன் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் முதலில் நம்பவில்லை. டீச்சர் முருகன் கோயில் மதில் அருகில் நின்று இல்லாத மயிலை விரட்டிக்கொண்டிருக்கிறார்களாம். டீச்சரின் அருகில் சென்று “டீச்சர், மயில் இல்லையே… பிறகு எதுக்கு மயிலை விரட்டுறீங்க” என்று கேட்டிருக்கிறான். டீச்சர் கையில் வைத்திருந்த பிரம்பை ஓங்கியபடி கழுதைகளா சனியன்களா வீட்டுக்கு ஓடுங்க… ஓடுங்க… என்று அவனை விரட்டியிருக்கிறார்கள். அடிபொறுக்காமல் ஓடி ஒளிந்திருக்கிறான் சிவமணி. அதற்குப் பிறகு கிரேஸி டீச்சரை எங்குப் பார்த்தாலும் ஒடி ஒளிந்து கொள்வதாகச் சொன்னான். எனக்கு டீச்சரைப் பார்க்க வேண்டுமென்கிற விருப்பம் உண்டானது.

இதற்காகவே இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை கேட்டு வாங்கி வீட்டிற்கும் கோயிலுக்கும் அலைந்தேன். டீச்சர் தினமும் மாலையில் பள்ளிக்கூடம் முடிகிற நேரத்திற்கு கோயில் பக்கமாக வந்து நின்றுகொள்கிறார். கையில் பிரம்பு வைத்திருக்கிறார். மாணவர்களை மாணவிகளை ஓரமாக போங்க, வீட்டுக்குப் போங்க எதுக்கு நின்னு வேடிக்கைப் பார்க்கிறீங்க என்று அதட்டியபடி டீச்சர் கம்பீரத்துடன் தெருவில் நடக்கிறார். கோயில் மதிலில் இல்லாத மயிலைப் பார்த்து விரட்டுகிறார். எனக்குப் பார்க்க பயமாகவும் அதேநேரம் சங்கடமாகவுமிருந்தது.

டீச்சருக்கு என்ன ஆனது? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சிவமணியிடம் விசாரித்தேன். டீச்சரைப் பற்றி அவன் சொன்ன விஷயங்கள் எனக்கு வியப்பாகயிருந்தன. டீச்சர் இராஜபாளையம் அருகேயுள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த கிராமத்தில் தினமும் மாலை வேளையில் மயில் கூட்டம் கூட்டமாக அவர்களது வீட்டிற்கு முன்னுள்ள திண்ணைக்கு வந்து, காய்ந்துகிடக்கும் நெல்லையும் கம்பையும் சோளத்தையும் கொத்தித் திண்ணும். டீச்சரின் அப்பாவும் அம்மாவும் தங்களது பிள்ளைகளைப் போல மயிலை வளர்த்திருக்கிறார்கள். டீச்சரின் அப்பாவின் தோள் மேல் மயில் பறந்து வந்து அமர்ந்து அவர் கையிலுள்ள அரிசியைக் கொத்தி திண்ணும்.

டீச்சரின் மூத்த அக்காளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொடுத்தார்கள். அதன் பிறகுதான் அவர்களது வீட்டிற்கு சுகக்கேடு உண்டானது. அக்காளின் கணவர் குடித்துவிட்டு தகராறு செய்வதும், விருந்திற்கு வந்த வீட்டில் கிரேஸி டீச்சரையும் கூடவே டீச்சரின் தங்கையையும் கையை பிடித்து இழுத்து முத்தமிடுவதுமாக இருந்தது அக்காவுக்கும் தங்கைகளுக்கும் பிடிக்கவில்லை. அவர் வேலை பார்த்த மில்லில் பணிபுரிந்தவர்களிடம் கடன் வாங்கி கடன் வாங்கி மாத சம்பளம் முழுவதையும் கடனுக்குக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருவார். அக்கா உணவுக்கும் செலவுக்கும் அப்பாவிடம் வந்து கையேந்தி நிற்பதை அவமானமாக நினைத்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு டீச்சரும் அவர்களது அப்பாவும் அம்மாவும் ராஜபாளையம் வீட்டை விற்றுவிட்டு எங்களது ஊருக்கு வந்ததாகவும், அக்கா இறந்த பிறகு டீச்சருக்கு மயிலை கண்டால் பிடிக்காமல் போனதாகவும் சொன்னான்.

டீச்சர் தன் வீட்டு மாடியில் ஒரு முறை பறந்து வந்த மயிலை பிடித்து கழுத்தைத் திருகிக் கொன்றதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள் என்று சிவமணி சொன்ன போது, எனக்கு கால்கள் இரண்டும் நடுங்கின. டீச்சரை டாக்டர்களிடம் காட்டி குணப்படுத்தி விடலாம் என்று அவர்களது வீட்டிற்குச் சென்று டீச்சருடன் பேசினேன். டீச்சர் தனது படுக்கையறை முழுக்க மயில் இறக்கை வைத்திருந்தது எனக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது.

“எவ்வளவு ஆசையாக எங்க அப்பாவும் அம்மாவும் மயில் வளர்த்தாங்கன்னு உனக்கு தெரியாது. அவங்க இறந்த போது ஒரு மயிலும் வரலை. அதுக்குப் பிறகு தினமும் வந்துட்டுப் போகுது. அதான் மயிலைப் பார்த்தாலே கோபம் கோபமா வருது” என்றார். டீச்சருக்கு நியாயமான கவலையும் கோபமும் இருக்கிறது.

டீச்சர் மயிலை மயிலாகப் பார்க்கவில்லை பதிலாக மயில் என்கிற உறவுக்காரர்களாகப் பார்த்திருக்கிறார்கள். அதான் டீச்சரின் பிரச்சனை என்று நினைத்தேன். டீச்சர் தன் வாழ்நாள் முழுக்க அவ்வாறே நினைத்துக் கொண்டு வாழ்ந்து முடியட்டும் என்று அங்கிருந்து வந்துவிட்டேன்.

S Senthilkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment