யுகபாரதியின் பொங்கல் சிறப்புக் கவிதை : கனவுகளின் ஈமக்கிரியை

கவிஞரும், பாடலாசிரியருமான யுகபாரதி, ‘ஐஇ தமிழ்’ வாசகர்களுக்காக பொங்கல் சிறப்புக் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை இதோ...

By: Updated: January 13, 2018, 04:32:11 PM

Yugabharathi

 கவிஞர் யுகபாரதி

1.
காண சுகமான கனவுகளை
காப்பாற்றுவதே வாழ்வென்றானபின்
யாருக்கு நேரமிருக்கிறது
அக்கனவுகளை பரிமாறிக்கொள்ள?
ஒருவர் கனவை இன்னொருவர்
இன்னொருவர் கனவை மற்றொருவர்
மடைமாற்றியோ கடந்தோ
விரைந்துவிடுகிற நமக்கு
இன்னமுமே முடிவதில்லை
கனவிலிருந்து முற்றிலுமாக
வெளியேற

2.
பெரும் கனவுகளுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
பிறருக்கான வாழ்வை
அடுத்த வேளை உணவை
அன்றாடத் தேவையைக்கூட
ஈட்டிக்கொள்ள முடியாத நாம்
எப்போதாவது பகிர்ந்ததுண்டா?
அதீத கனவுகளை

3.
எல்லோரும் சமமென்பது
பெரிய கனவுதான்
ஏழு கடலோ ஏழு மலையோ
தாண்டித் தாண்டி அக்கனவை கண்டுவிட
தவிர்க்கவோ தள்ளிவைக்கவோ
வேண்டியிருக்கிறது உறக்கங்களை
வெறும் கண்ணுடைய எவரால்
விளங்கிக்கொள்ள முடியும்?
நெற்றிக் கண் வழியே நிகழும்
விடுதலைக் கனவுகளை

4.
ஐந்தடியோ ஆறடியோ
யார் ஒருவரும் அளக்கப்படுவது
கனவுகளால் தானே
எடை குறைக்க விரும்பும் எவராவது
முனைந்திருக்கிறார்களா
கனவுகளைப் பட்டினி போட
இடுங்கலான இடத்தில்
ஒருக்களித்துப் படுக்கையிலும்
ஒரே மாதிரியே வருகின்றன
ஒவ்வொரு கனவுகளும்

5.
கற்றுக்கொள்ளத் தேவையில்லை
கனவு காண
அதிலும் விசேஷம்
ஒரு நல்ல கனவு
கண்கள் இல்லாமலும் வருவதே
யாரோ எப்போதோ கண்டதுதான்
எவருடையக் கனவுகளும்
ஈடேற்றும் வாய்ப்பு கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்
செய்யத்தக்கது ஒன்றே ஒன்றுதான்
அங்குலமாவது அறிய வேண்டும்
அடுத்தவர் கனவு குறித்து

6.
யாரிடமும் சொல்லாத கனவோ
யாருமே கேட்காத கனவோ
இல்லவே இல்லை
கூட்டியோ குறைத்தோ
சொல்லவும் கேட்கவும் பட்டதே
அத்தனைக் கனவுகளும்
எத்தனைபேர் அறிந்திருக்கிறோம்?
கனவின் விருப்பம் உண்மையிலும்
உண்மையென்று

7.
கண்கள் மங்கிவிடுவதால்
வராமலிருக்கிறதா கனவுகள்?
நாலாந்தலைமுறையிலும்
வசப்படாத கனவுகளோடு
வாழ்ந்துகொண்டிருப்பவர்களால்
நிகழ்த்தப்படுவதே போராட்டங்கள்
போராடி ஜெயிக்கும் கனவுக்கு
ஆஸ்தியுண்டு அஸ்தியில்லை

8.
கனவுபோல் நிகழ்ந்ததாக
கனவில் நிகழ்ந்ததாக
எதை எதையோ சொல்கிறோம்
எந்தக் கனவு? எப்போது வந்தது?
காலத்தை ஒட்டியும் தாண்டியும்
வாழ்வை நிவர்த்திசெய்ய உதவுவது
இந்த யுகத்திலும் கனவுகளே
ஒரே ஒரு ஆறுதல்
விஞ்ஞானமும் விபரீதமும்
பெருகிய போதிலும் கனவுகளின்னும்
வரவில்லை விற்பனைக்கு

9.
அம்மாவின் கனவை மகளும்
மகளின் கனவை பேத்தியும்
காணக்கூடிய சமூகத்தில்
எப்படி சொல்ல முடியும்?
பழசானவை கனவுகளென்று
கால இளவரசி திரும்பத் திரும்ப
பூசணிப் பூக்களை நட விரும்புகிறாள்
புழங்கடை கோலங்களில்

10.
சிரிக்கவோ பழகவோ
சிந்திக்கவோகூட கண்டிருக்கவேண்டும்
கனவுகளை
ஒரு தீப்பெட்டியின் கனவு
உயிர்பெறுவது உரசலிலிருந்தே
எல்லாமே மாயமென்று சொல்லி
எடுக்கப்பட்ட சினிமாவிலும்
சாதிகள் கலப்பது கனவுக்காட்சியில்தான்
கனவுகளை பாவமென்பவன்
இறுதியில் செய்கிறான் இயற்கைக்கு
ஈமக்கிரியை

யுகபாரதி : தஞ்சாவூரை சொந்த ஊராகக் கொண்ட கவிஞர் யுகபாரதி, ‘ஆனந்தம்’ படத்தில் இடம்பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் யுகபாரதி, ‘பசங்க’ படத்துக்கா தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றவர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Yugabharathi pongal special kavithai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X