18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும்?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன விதமான மாற்றங்கள் இருக்கும்? எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழுமா, கவிழாதா?

ச.செல்வராஜ்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன விதமான மாற்றங்கள் இருக்கும்? எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழுமா, கவிழாதா?

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை மொத்த தமிழ்நாடும் உற்று நோக்கிக் கொண்டிருப்பது மேற்படி கேள்விகளின் அடிப்படையில்தான்! இந்த வழக்கில் இரு தரப்பு வாதம் நிறைவு பெற்று தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, எந்த நேரமும் இந்த வழக்கில் தீர்ப்பு கூற வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக இந்த வாரத்தில் ஒருநாள் தீர்ப்போ அல்லது தீர்ப்பு தேதியோ தெரிவிக்கப்படலாம் என உயர் நீதிமன்ற வட்டாரங்களில் குறிப்பிடுகிறார்கள்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரனும், ‘18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உத்தரவு வந்ததும், எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும்’ என கூறி வருகிறார்கள். அதற்கான வாய்ப்புகள் என்ன? என்பதை இங்கு பார்ப்போம்!

தமிழக சட்டமன்றத்தில் கட்சிகளின் பலம் :

அதிமுக : 117

திமுக : 89

காங்கிரஸ் : 08

இ.யூ.முஸ்லீம் லீக் : 01

சுயேட்சை : 01

பதவி நீக்கம் : 18

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால்? அதாவது, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததில் தப்பில்லை என நீதிமன்றம் சொன்னால்? ஆட்சிக்கு நிச்சயம் உடனடி ஆபத்து இல்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மேல் முறையீடுக்கு போனாலும், அரசுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துவிடும்.

18 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றம் வந்தால்…

மாறாக ஸ்டாலினும், டிடிவி தினகரனும் எதிர்பார்க்கும் உத்தரவு வந்தால்? அதுதான்…18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான், ஆட்சி கவிழும் சூழல் பற்றிய விவாதமே! தமிழக சட்டமன்றத்தில் இப்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் (சபாநாயகர் உள்பட) ஆதரவு இருக்கிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க மொத்த தேவை 118 எம்.எல்.ஏ.க்களே! டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களில் இருந்து ஒரே ஒருவரை எடப்பாடி தரப்பு தங்களுக்கு சாதகமாக திருப்பினாலும்கூட, ஆட்சி கவிழாது.

சரி… டிடிவி தினகரன் கூறுவது போல அவரது ‘ஸ்லீப்பர் செல்கள்’5 முதல் 10 பேர் ஆட்சிக்கு எதிராக கிளம்பினால்? அல்லது, இரட்டை இலையில் ஜெயித்த கூட்டணி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் டிடிவி தரப்புடன் கைகோர்த்தால்? ஆளும் அரசுக்கு ஆதரவு 117-ஐ விடவும் குறையும். அதுதான் ஆட்சி கவிழ்வதற்கான ஒரே வாய்ப்பு!

ஆட்சிக்கு உதவும் ஸ்டாலின் வழக்கு?

ஆனால் இது நிறைவேற நடைமுறையில் நிறைய இடையூறுகள் இருக்கின்றன. முதல் அம்சம், உடனடியாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா? என்பது! பொதுவாக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 10-ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம்.

இந்த முறையில்தான் கடந்த ஆகஸ்டில் ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். ஆனால் இப்படி கடிதம் கொடுத்த உடனேயே சபாநாயகர் சட்டமன்றத்தை கூட்டத் தேவையில்லை. அடுத்த கூட்டத் தொடரில் 10 அலுவல் நாட்களுக்குள் அந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கலாம்.

இப்படி தாமதம் ஆவதை தவிர்க்கவே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி, ‘நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட’ வழக்கு தொடர்ந்தார் ஸ்டாலின். அந்த வழக்கு இன்னமும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றம் வந்தாலும், உடனடியாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதில் திமுக.வுக்கு சிக்கல் இருக்கிறது. அதை மீறி திமுக கடிதம் கொடுத்தால், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை அரசுத் தரப்பு தள்ளிப் போடலாம்.

  ‘ஃப்ரெஷ்’ ஷாக தீர்மானம்

இந்த விவகாரத்திலேயே இன்னொரு கருத்தும் இருக்கிறது. கடந்த முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு திமுக கடிதம் கொடுத்து, வருகிற மார்ச்சுக்குள் 6 மாதங்களை கடந்துவிடும். எனவே திமுக தரப்பில் புதிதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தால், அதை புதிய கோரிக்கையாக சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும். மார்ச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அனுமதிக்க வேண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஆளும் தரப்பு இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளுமா, என்ன?!

உயர்நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும், அதில் தோற்றதாக கருதும் தரப்பு மேல் முறையீடுக்காக உச்சநீதிமன்றம் செல்லவிருப்பது உறுதி! ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்புக்கு எதிராக உத்தரவு வந்து, உச்சநீதிமன்றம் அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தால்? அதுவும் ஆட்சியின் ஆயுளை நீட்டிக்க உதவும்.

கொறடா உத்தரவை 18 பேரும் மீற முடியுமா?

இதெல்லாம் போகட்டும்! எப்படியோ 18 எம்.எல்.ஏ.க்களும் உள்ளே வந்துவிட்டார்கள் என வைத்துக் கொள்வோம். ‘ஸ்லீப்பர் செல்’களாக சிலரும் கிளம்பியதாக வைப்போம். நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தும் வாய்ப்பில்லை. அந்த வாக்கெடுப்பில் அரசு கொறடா உத்தரவை மீறி 18 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க முடியுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.

ஏனென்றால், கொறடா உத்தரவை நாங்கள் மீறவில்லை என்பதையே 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது நீதிமன்றத்தில் வாதமாக முன் வைத்தார்கள். வழக்கு விசாரணையின்போது ஒரு கட்டத்தில், ‘நீங்கள் மீண்டும் உள்ளே சென்றால், ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பீர்களா?’ என நீதிபதி கேட்டார். அதற்கு 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘அதை இப்போது சொல்ல முடியாது’ என்றார்.

டிடிவி தரப்பு வியூகம் என்ன?

இதில் டிடிவி தரப்பு வியூகம் இதுதான்… 18 எம்.எல்.ஏ.க்களும் உள்ளே வந்ததும், திமுக தரப்பில் புதிதாக 24 எம்.எல்.ஏ.க்கள் (கடந்த முறை கையெழுத்து போடாதவர்கள்) கையொப்பத்துடன் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு கடிதம் கொடுக்கப்படும். சட்டப்படி, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயம் சபாநாயகருக்கு ஏற்படும்.

கொறடா உத்தரவை மீறப் போவதாக 18 எம்.எல்.ஏ.க்களும் முன்கூட்டியே எங்கும் பேசப் போவதில்லை. ஆனால் வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தால், 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி அரசு கொறடா தீர்மானம் கொண்டு வருவார். முறைப்படி ஸ்லீப்பர் செல் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டியிருக்கும். அதன்பிறகு ஆட்சி இருந்தால், டிடிவி அணியினரின் பதவி பறிபோகும். ஆனால் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்காத அந்த கணமே இந்த ஆட்சியின் ஆயுள் முடிந்துவிடும். அதன்பிறகு டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோவதைப் பற்றி என்ன கவலை?

உடனடி நடவடிக்கை எடுத்தால்?

ஆனால் ஆளும் கட்சி தரப்பில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது கொறடா உத்தரவை மீறி 18 எம்.எல்.ஏ.க்கள் இயங்கினால், அவர்களை உடனே பதவி நீக்கம் செய்ய கொறடா கோரிக்கை வைக்கலாம். அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், உடனே அவர்களை வெளியேற்றிவிட்டு, வாக்கெடுப்பைத் தொடரக்கூடும். இப்படி நடந்தாலும் ஆட்சி காப்பாற்றப் பட்டுவிடும்.

18 எம்.எல்.ஏ.க்களின் பதவி தப்பினாலும், அதன்பிறகு அரங்கேறும் அரசியல் மற்றும் சட்டபூர்வ நகர்வுகள்தான் ஆட்சியின் ஆயுளைத் தீர்மானிக்கும்!

 

×Close
×Close